வணிக வீதி

சிக்கலில் இந்திய விவசாயிகள்

இராம.சீனுவாசன்

பருவ மாற்றமும் விலை மாற்றமும்தான் இந்திய விவசாயிகளின் பெரிய எதிரிகள். பருவத்தே மழை பொழிந்து விளைச்சல் அதிகமாகி விலை குறைந்தால் விவசாயி வருமானம் குறையும். பருவக் காலம் தவறி பொழியும் மழை விளைச்சலை ஒழித்து விவசாய வருமானத்தை துடைத்துவிடும்.

விவசாயிகளை காக்கும் பல வழிகளில் ஒன்றுதான் பயிர் காப்பீடு, அதிலுள்ள சிக்கல்களும் அவர்களைக் காப்பாற்றுவதாக இல்லை. இந்த வருடத் தொடக்கத்தில் பருவம் தவறி பொழிந்த மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 50% கூடுதல் நஷ்டஈடு வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறினாலும், இந்த திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள் விவசாயிகளுக்கு எதிராகவே உள்ளன.

தேசிய விவசாய காப்பீடு திட்டம்

இந்திய விவசாய காப்பீடு நிறுவனம் (Agriculture Insurance Company of India Limited) மூலம் “வானிலை அடிப்படையில் பயிர் காப்பீடு திட்டம்” (Weather Based Crop Insurance Scheme) “திருத்திய தேசிய விவ சாய காப்பீடு திட்டம்” (Modified National Agricultural Insurance Scheme) என்ற இரண்டு பிரதான காப்பீடு திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. இவை இரண்டிலும் சில வேறுபாடுகள் இருந்தாலும், விவசாய காப்பீட்டில் உள்ள பொதுவான சிக்கல்கள் இவற்றுக்கும் பொருந்தும்.

விவசாயியின் வருமானத்தை பாதுகாப்பதே இந்த திட்டங்களின் நோக்கம். விவசாய உற்பத்தித் திறனும், பயிரின் விலையும் இணைந்துதான் விவசாயியின் வருமானத்தை நிர்ணயிக்கிறது. இதில் விலை மாற்றத்திற்கு காப்பீடு மூலம் நிவாரணம் காண முடியாது. ஆனால் உற்பத்தித் திறன் குறைந்தால் காப்பீடு வழங்க முடியும். ஒரு நிலத்தின் உற்பத்தித் திறனை நிர்ணயிப்பதில், வானிலை, பூச்சி தாக்குதல், உள்ளீட்டு பொருட்களின் திறன் என பல காரணிகள் உள்ளன, இதில் வானிலை மிக முக்கிய காரணம்.

வானிலையும் காப்பீடும்

மழை, தட்பவெட்ப நிலை, காற்றின் ஈரப்பதம், பனி, என்ற பலவும் சேர்ந்தது தான் வானிலை. இவை ஒவ்வொன்றின் மாற்றத்தினாலும் நிலத்தின் உற்பத்தி திறன் மாறும். எனவே உற்பத்தி திறனுக்கு ஒரு மாற்றாக வானிலை எடுத்துக்கொள் ளப்படுகிறது.

ஆனால் இதில் ஒரு சிக்கல் உண்டு. கிராமத்திற்கோ அல்லது ஒரு மண்டலதிற்கோ பொதுவான ஒரு வானிலை இருக்கும். எனவே, ஒரு கிராமத்தில் உள்ள எல்லா நிலங்களுக்கும் ஒரே அளவு உற்பத்தி திறன் நிர்ணயிக்கப்படும்.

இந்த உற்பத்தித் திறன் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். ஒவ்வொரு பயிரின் அடிப்படை உற்பத்தி திறனை நிர்ணயிப்பதில் பிரச்சினை வரலாம். நீண்டகால புள்ளிவிவரங்களை கொண்டு அடிப்படை உற்பத்தி திறன் அளவை தயாரிப்பதில் சிக்கல் எழலாம். குறிப்பாக உற்பத்தி திறன் நிலத்துக்கு நிலம் மாறுபடும் போது, ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும்போது, சராசரி உற்பத்தி திறன் அளவிடுவதில் சிக்கல் ஏற்படும்.

ஒரு கிராமத்தில் தாழ்வான பகுதி வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும்போது, அதற்கான நிவாரணம் குறைவாக இருக்கும். வானிலையை அளவிடுவதில் சிக்கல் உண்டு. ஒரு கிராமம்தான் அடிப்படை புவியியல் அளவு என்றால், ஒவ்வொரு கிராமத்திலும் வானிலை அளவிடும் கருவிகளும் முறைகளும் வேண்டும். இவை ஒவ்வொரு கிராமத்திலும் இல்லாதபோது வேறு முறைகளைக் கையாளவேண்டும். மேலும், வானிலை மாற்றத்தின் பாதிப்பை அளவிடுவதிலும் அரசுக்கும், விவசாயிகளுக்கும் கருத்து வேறுபாடு வரும்.

உதாரணமாக, இந்த வருடம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பொழிந்த பருவநிலை தவறிய மழையால் முதலில் 18 மில்லியன் ஹெக்டரே பயிர் பதிப்படைந்ததாக கூறிய அரசு, பிறகு அதனை 11 மில்லியனாக குறைத்து மீண்டும் 8.5 மில்லியன் என்று குறைந்தது. இது போன்ற சிக்கல்கள் அதிகம் உள்ள ஒரு திட்டம் தான் பயிர் காப்பீடு.

காப்பீடு ஊடுருவலும் கட்டணமும்

நாட்டில் 70% விவசாயம் வானிலை பொறுத்தே உள்ளது. இதனால், இவர்கள் அனைவருக்கும் வானிலை அடிப்படையில் பயிர் காப்பீடு கொடுப்பது அவசியம். ஆனால் 10% முதல் 20% விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு வைத்துள்ளனர்.

இவர்களில் பெரும் பகுதியினர் வங்கிகளில் பயிர் கடன் வாங்கியதால் காப்பீடு வாங்குவது கட்டாயம், எனவே அவர்களிடம் பயிர் காப்பீடு உள்ளது. விவசாய கடன் வாங்கியவர்களில் பலர் தங்கள் பயிர் காப்பீடும் பெற்றுள்ளோம் என்பதை தெரியாமலேயே உள்ளனர்.

பயிர் காப்பீட்டை நாட்டில் உள்ள எல்லா விவசாயிகளும் வாங்கும் போதுதான் காப்பீடு கட்டணமும் குறையும். காப்பீடு என்பதே விவசாய இடரை எல்லாரும் பகிர்ந்துகொள்வதுதான். எனவே, எல்லா விவசாயிகளும் காப்பீடு கட்டணம் செலுத்தும் போது, ஒவ்வொருவரும் செலுத்தவேண்டிய கட்டணம் குறையும். மிக குறைந்த விவசாயிகளே காப்பீடு பெற்றுள்ளதால் காப்பீடு தொகை தற்போது அதிகமாக உள்ளது. இந்த காப்பீடு கட்டணத்தில் 50% முதல் 75% வரை மத்திய மாநில அரசுகள் மானியமாக வழங்குகின்றன. இருந்த போதிலும் விவசாய காப்பீட்டின் ஊடுறுவல் இந்தியாவில் குறைவாக உள்ளது.

விவசாய காப்பீடு வளர என்ன செய்யவேண்டும்

வானிலை அளவிடும் முறையினை அனைத்து இடங்களிலும் நிறுவவேண்டும். வானிலை முன் எச்சரிக்கை முறையை செம்மையாக்கி வானிலை செய்திகளை விவசாயிகளுக்கு எடுத்து செல்லவேண்டும். உற்பத்தி திறன் அளவிடும் முறைகளை வெளிப்படையாகவும், விவசாயிகளின் பங்களிப்போடு செய்யவேண்டும்.

காப்பீடு கட்டணமும் விவசாய உற்பத்தி செலவின் ஒரு முக்கிய பகுதியாக கருதி, அதனையும் உள்ளடக்கிய கொள்முதல் விலை நிர்ணயம் செய்யவேண்டும். அப்போதுதான் விவசாயிகள் ஆர்வத்துடன் காப்பீடு எடுக்க முன்வருவர். விவசாய காப்பீடு செயல்படுத்தும் முறைகளை, குறிப்பாக நஷ்டயீட்டை நிர்ணயிக்கும் முறைகளில் வெளிப்படை தன்மையுடன் கூடிய எளிய முறை இருக்கவேண்டும்.

10% முதல் 20% விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு வைத்துள்ளனர். இவர்களில் பெரும் பகுதியினர் வங்கிகளில் பயிர் கடன் வாங்கியதால் காப்பீடு வாங்குவது கட்டாயம். எனவே அவர்களிடம் பயிர் காப்பீடு உள்ளது. விவசாய கடன் வாங்கியவர்களில் பலர் தங்கள் பயிர் காப்பீடும் பெற்றுள்ளோம் என்பது தெரியாமலேயே உள்ளனர்.

seenu242@gmail.com

SCROLL FOR NEXT