வணிக வீதி

வங்கி சர்ச்சை: முடிவுக்கு வந்த அதிகார போட்டி

வாசு கார்த்தி

யெஸ் பேங்க் உபயத்தால் கடந்த வாரம் வர்த்தக நாளேடுகளுக்கு நல்ல தீனி கிடைத்தது. நிறுவனர்களுக்கு இடையேயான அதிகார போட்டி காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தாலும், இவை எப்படி நடைமுறைப்படுத்தப்படும், இதன் விளைவுகள் என்ன என்பது போகப் போகத்தான் தெரியும். தீர்ப்புக்குள் செல்வதற்கு முன்பு பிரச்சினையின் ஆழத்தை ஒரு முறை தொட்டுவிடுவோம்.

பிரச்சினை என்ன?

தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிகளில் ஐந்தாவது பெரிய வங்கி யெஸ் வங்கி. இந்த வங்கி 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வங்கியை ராணா கபூர், அசோக் கபூர் மற்றும் ஹர்கிரத் சிங் ஆகிய மூவர் தொடங்கினார்கள். இதில் வங்கி செயல்பாட்டினை தொடங்குவதற்கு முன் பாகவே கருத்து வேறுபாடு காரணமாக ஹர்கிரத் சிங் பிரிந்துவிட்டார்.

வங்கி சிறப்பாக செயல்பட்டு வந்த நேரத்தில் 2008-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் அசோக் கபூர் மரணம் அடைந்தார். (அசோக் கபூர் மனைவியும், ராணா கபூர் மனைவியும் சகோதரிகள் ஆவார்.)

அசோக் கபூர் மரணம் அடைந்த பிறகு வங்கி தொடர்பாக எந்தவிதமான தகவல்களும் எங்களுக்கு தெரியப்படுத் துவதில்லை என்று அசோக் கபூர் மனைவி மது கபூருக்கு வருத்தம். அதனால் தன்னுடைய மகள் ஷாகுன் கோகியாவை வங்கியின் இயக்குநர் குழுவில் நியமிக்கும்படி 2013-ம் ஆண்டு மது கபூர் கோரினார்.

ஆனால் வங்கியின் இயக்குநர் குழு ஷாகுன் கோகியாவை இயக்குநராக நியமிக்க முடியாது என்று மறுத்து விட்டது. ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்த தகுதிகள் இருந்தும் அனுபவம் இல்லை என்பதால் இயக்குநர் குழு அவரை நியமனம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டது.

மேலும் வங்கியின் இயக்குநர் குழு பரிந்துரைகளை ராணா கபூர் மற்றும் மறைந்த அசோக் கபூர் மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். இவர்களுடைய வாரிசுகள் பரிந்துரை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்பு என்ன?

இதனை தொடர்ந்து 2013-ம் ஆண்டு மது கபூர் தரப்பு மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியது. ராணா கபூர் தலைவராக நியமிக்கபட்டது செல்லாது, இயக்குநர் குழுவில் இடம் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளுடன் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கினை தங்களுக்குள்ளே முடித்துக் கொள்ளுமாறு மும்பை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வங்கியில் மது கபுருக்கும் உரிமை இருக்கிறது. அதனால் நியமன இயக்குநரை இருவரும் சேர்ந்து (ராணா கபூர் மற்றும் மது கபூர்) நியமிக்கலாம் என்று தெரிவித்தது.

அதே சமயத்தில் ஷாகுன் கோகியாவை இயக்குநர் குழுவில் நியமிக்க நீதிமன்றத்தால் முடியாது. தற்போது தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கும் ராணா கபூரின் நியமனத்தை ரத்து செய்ய முடியாது. அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

ஷாகுன் கோகியா சொல்வது என்ன?

இந்த தீர்ப்பு எங்களை அங்கீகரித் திருக்கிறது. அதேபோல இந்த வங்கியின் நிறுவனர் என்னும் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. இந்த பிரச்சினையை எளிதாக முடித்திருக்க முடியும்.

ஆனால் ராணா கபூர் இந்த பிரச்சினையை வளர்த்துவிட்டார். புதிய மகாபாரதத்தை ராணாதான் உருவாக் கினார். என் அப்பாவுக்கு இந்த வங்கியில் சம உரிமை இருக்கிறது. இந்த வங்கி தொடங்குவதற்கு அவர் தன்னுடைய மொத்த சொத்தையும் முதலீடு செய்தார். ஆனால் அப்பா மறைவுக்கு பிறகு வங்கியை பற்றிய எந்த செய்தியும் எங்க ளுக்கு வரவில்லை, இப்போது எங்கள் உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

ராணா கபூர் சொல்வது என்ன?

மது கபூரை எனக்கு 32 வருடமாக தெரியும். அவர் அருமையான மனிதர். ஆனால் கடந்த இரு வருடங்களாகத்தான் என் மீது கோபமாக இருக்கிறார்.

ஆனால் 11,000 பணியாளர்கள், வங்கியின் எதிர்காலத்தை பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. நான் அசோக் கபூரை விட கடுமையாக உழைத்தவன்.

அவர்களின் உரிமை பறிபோய்விட்டது என்று கூறுகிறார்கள். அசோக் கபூர் மறைவின் போது அவர்களின் சொத்து மதிப்பு 300 கோடி ரூபாய். இப்போது அவர்கள் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 10 மடங்கு அதிகம். வங்கி தொழில் முறையில் நடைபெற்றால்தான் வளர்ச்சி சாத்தியம். வங்கியில் ஐந்து வகையான இயக்குநர்கள் இருக்கிறார்கள்.

நியமன இயக்குநரை மட்டுமே இணைந்து நியமிக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவு தெரிவித்திருக்கிறது. இதனால் வங்கியின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது.

பங்கின் நிலைமை என்னாவாகும்?

இது குறித்து மும்பையில் உள்ள பங்குச்சந்தை நிபுணரிடம் பேசியது போது, 2013-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்த போது இந்த பங்கு சுமார் 40 சதவீதம் வரை சரிந்தது. ஆனால் சமீபத்திய தீர்ப்புக்கு பிறகு பங்கின் விலையில் பெரிய மாற்றம் இல்லை.

நியமன இயக்குநரை நியமிப்பதால் செயல்பாட்டில் எந்த மாற்றமும் நடந்து விடாது. தவிர வங்கிகளை பொறுத்தவரை நிறுவனர்களுக்கு பெரிய அதிகாரம் இல்லை. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் பலமாக இருப்பதினால் முதலீட்டாளர்கள் அச்சப்பட தேவை இல்லை என்றார்.

வெள்ளிக்கிழமை மாலை வர்த்தக முடிவில் 850 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

அதிகார போட்டியை விட வங்கியின், பொருளாதாரம் வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நலன் முக்கியம் என்பதை நிறுவனர்கள் உணர வேண்டும்.

SCROLL FOR NEXT