இது டிஜிட்டல் யுகம். அனைத்து வேலைகளும் உட்கார்ந்த இடத்திலிருந்தே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கிற வேகம் எல்லா தரப்பினரையும் தொற்றிக் கொண்டுவிட்டது.
அதற்கு ஏற்ப ஆன்லைன் வர்த்தக வளர்ச்சியும் வேகமாக முன்னேறிக்கொண்டே இருக்கிறது. வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மட்டுமல்ல அடுத்த வேளை உணவையும் ஆன்லைனில் வாங்கிவிட முடிகிறது. அதற்கு ஏற்ப மத்திய அரசும் டிஜிட்டல் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்தும் வருகிறது.
பொருளாதார வளர்ச்சியில் முன்னேறுவது மட்டுமல்ல, மக்களின் சமூக வளர்ச்சியும் ஏற்றம் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் ஆன்லைன் சேவைகளில் ஒன்றாக மத்திய அரசு சமீபத்தில் டிஜிட்டல் லாக்கர் சிஸ்டத்தை கொண்டு வந்திருக்கிறது.
ஏற்கெனவே இந்திய அரசின் பல்வேறு சேவைகளை செய்து வரும் நிறுவனமான என்எஸ்டிஎல் (National Securities Depository Limited) இ-உயில் முறையை கொண்டு வந்து, அது பரவலான வரவேற்பை பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
இந்த இரண்டு டிஜிட்டல் சேவைகளும் ஆவணப் படுத்துதலில் அடுத்த கட்ட வளர்ச்சி என்று குறிப்பிடலாம். இந்த சேவைகளை பயன்படுத் துவது எப்படி, பயன்கள் என்ன?
இ-உயில்
உயில் எழுதுவதில் உள்ள வழக்கமான நடைமுறைகளை இதற்கு கடைபிடிக்க வேண்டாம். எனவே அதற்கு அலைவது, செலவழிப்பது என்கிற சுமைகள் கிடையாது. மேலும் பேப்பர் வடிவிலான ஆவணத்தை விடவும் டிஜிட்டல் வடிவிலான உயில் ஆவணமாக இருப்பது கூடுதல் பாதுகாப்பு.
பயன்படுத்துவது எப்படி?
உயில் எழுத விரும்புபவர், உயில் குறித்த விவரங்களை முதலில் தெளிவாக எழுதிக்கொள்ள வேண்டும். என்எஸ்டிஎல் இணையதளத்துக்குச் சென்று இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த விண்ணப்பத்தில் பாலினம், மதம், இருப்பிடம், தொழில், இந்திய குடிமகன் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதற்கு அடுத்து குடும்ப உறுப்பினர்கள், சம்பந்தபட்ட சொத்து, பொறுப்பில் உள்ள சொத்து, அதில் உரிமையான பாகம் உடையவர்கள் குறித்த விவரங்களும் கேட்கப்பட்டிருக்கும். இந்த விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு பிறகு நாம் எழுதி வைத்துள்ள உயிலை நகல் செய்து இணைக்க வேண்டும்.
மேலும் உயிலோடு சம்பந்தப்பட்ட இதர ஆவணங்களையும் இணைக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக் கொண்டவுடன், அதைப் பெற்றுக் கொண்டதற்கு மின்னஞ்சல் வரும்.
இந்த முதல் கட்டம் முடிந்த பிறகு உயிலில் நாம் குறிப்பிட்டுள்ள விவரங்களைச் சோதித்து, அது சரியானதுதானா, இதில் மாற்றங்கள் ஏதும் உள்ளதா என அடுத்த மின்னஞ்சல் அனுப்புவார்கள்.
இதற்கு பிறகும் திருத்தப்பட்ட உயிலின் காப்பி அனுப்பி வைப்பார்கள். இதற்கு நாம் ஒப்புதல் கொடுத்து விட்டால், உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இது சாட்சிகள் முன்னிலையில் உயில் எழுதப்பட்டதற்கு ஒப்பான ஆவணமாகக் கருதப்படும்.
கட்டணம்
இதற்கான கட்டணம் ரூ.4,000. பதிவு செய்யப் பட்ட உயிலை திரும்பவும் மாற்றி எழுதலாம். இதற்கான கட்டணம் முன்பு அளித்த கட்டணத்தில் 40% வரை கட்ட வேண்டும். உயில் பதிவு செய்யப்பட்ட பிறகு, உயிலின் ஆவணங்களை தொலைத்துவிட்டால், மீண்டும் புதிய ஆவணங்களைக் கொடுத்து புதியதாகவே உயில் பதிவு செய்ய வேண்டும்.
இந்த இ-உயிலை வாரிசுதாரர்கள் பார்வையிடலாம். இதற்கான கட்டணம் ரூ.250. இந்த கட்டணங்களை நெட் பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டு அல்லது வங்கிக் கணக்கு மூலம் செலுத்தலாம். அஞ்சல் மூலமாக பெற கட்டணம் ரூ.500.
வரம்புகள்
இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. சம்பந்தப்பட்ட சொத்துக்கு உரிமையுடைய நபர்கள் மட்டுமே பதிவு செய்யலாம். தனிநபருக்கு மட்டு மல்லாமல் நிறுவனங்களுக்கும் இந்தச் சேவை கிடைக்கும்.
பதிவு செய்த வர்களின் தகவல்கள் முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்படும். தேவைப்பட்டால் தகவல்களை மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவையை ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ் நிறுவன மும் வழங்குகிறது.
இணையதள முகவரி
என்எஸ்டிஎல்:> https://www.ezeewill.com/
ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ்: >http://www.hdfcsec.com/EWill/DynamicForms_ewill.aspx?type=ewill&id=ewill
டிஜிட்டல் லாக்கர் / இ-லாக்கர்
இந்திய அரசால் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கும் ஆவண சேமிப்பு சேவைதான் டிஜிலாக்கர். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்தால் இந்த சேவை வழங்கப்படுகிறது.
ஆதார் அட்டையின் அடிப்படையில் இந்திய குடிமகனாக இருப்பவர்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்கள் அனைத்தையும் இந்த டிஜி லாக்கரில் பாதுகாக்கலாம்.
பயன்படுத்துவது எப்படி
டிஜிட்டல் லாக்கர் இணையதளத்தில் ஆதார் எண் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
இதன் பிறகு நமது போனுக்கு ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு வரும். இதையும் பதிவு செய்த பிறகு, ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கான அடுத்த நடைமுறை அனுமதிக்கப்படும்.
பதிவேற்றிய ஆவணங்களை சோதித்த பிறகு பாதுகாப்பதற்கான தகுதி உறுதி செய்யப்படும். இந்த சோதனை முடிந்த பிறகு உங்கள் கையெழுத்து அப்லோடு செய்ய வேண்டும்.
இந்த நடைமுறைகள் முடிந்ததும் டிஜிட்டல் லாக்கரில் நமது ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டது என்கிற உறுதி மின்னஞ்சல் வரும். இணைய தளத்திலிருந்து தேவைக்கேற்ப பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளது.
பயன்கள்
வசிப்பிட முகவரியோடு தொடர் புடைய ஆவணமாக மாறிவிடுகிறது. 10 எம்பி வரை வீடு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், 1 ஜிபி டேட்டா வரை அரசு ஆவணங்கள் மற்றும் அரசு சார்ந்த துறைகள் விநியோகித்த ஆவணங் களையும் பாதுகாக்கலாம்.
தேவைப்படும் நேரத்தில் ஆவணங்களை பகிர்ந்து கொள்ள முடியும். அல்லது வேறு அரசு துறைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் எழுத்து ஆவணமாக கொடுக்க தேவையில்லை. டிஜிட்டல் லாக்கர் மூலமாகவே கொடுக்கலாம். கட்டணங்கள் கிடையாது.
இந்த சேவையை அறிமுகப்படுத்திய சில நாட்களுக்குள் இந்தியா முழுவதும் 1.73 லட்சம் மக்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். 1.62 லட்சம் ஆவணங்கள் பாதுகாப்பில் உள்ளன.
மத்திய பிரதேச மாநிலம் இந்த திட்டத்தைப் பயன்படுத்துவதில் முதன்மையாக உள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் சுமார் 30,000 பேர் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து 6,146 பேர் உறுப்பினர் சேர்ந்துள்ளனர். பல மாநிலங்களில் இந்த திட்டம் கண்டு கொள்ளப்படவே இல்லை. அரசின் இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்வதில் தமிழ்நாடு முன்னிலை பெற வேண்டும். டிஜிட்டல் இந்தியாவில் இணைவது எதிர்கால தலைமுறைக்கு ஏற்றம் தரும்.
இணையதள முகவரி:>https://digitallocker.gov.in/