ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு, கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘ஒரு காரியத்தை நன்றாகத் துவங்கினால், அது பாதி முடிந்தது போல’ என்று (well begun is half done). முதலீடுகளைப் பொறுத்த வரையில் இதை இன்னமும் பாதியாக நறுக்கலாம்.
முதலீடு செய்ய நீங்கள் துவங்கினாலே போதும், உங்கள் நிதிவளப் பாதையில் கால்வாசி தூரம் கடந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
ஏனெனில் இன்றைய இந்தியாவில் மிகப் பெரும்பான்மையோர் முதலீடுகள் என்றாலே பொருள்கள் வாங்குவது, நிலம் வாங்குவது, வைப்பு நிதி என்பதைத் தாண்டி யோசிப்பதே இல்லை. இந்திய மத்திய வர்க்கத்தினரிடையே ஐந்து சதவீத மக்கள் தாம் நிதி சார்ந்த முதலீடுகளை மேற்கொள்கின்றனர்.
ஆகையால், இந்த மனச்சாய்வை அகற்றி, நிதி சார்ந்த முதலீட்டு முறைகளில் நீங்கள் ஒரு அடியெடுத்து வைத்தாலே உங்களது இந்திய சகோதர, சகோதரிகளில் மிகப் பெரும்பான்மையினரை விட முன் னேறிய நிலையில் இருப்பவராவீர்கள்.
நாள், நட்சத்திரம் தேவையில்லை
முதலீட்டினைத் தொடங்க நாள் கிழமையெல்லாம் பார்க்கத் தேவை யில்லை. முகூர்த்த நாளுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. நீங்கள் என்று முதலீடுகளைத் துவங்குகிறீர்களோ, அந்த நாள் தான் உங்கள் வாழ்வில் முகூர்த்த நாள்.
சென்ற சில பத்திகளில் ஒரு நல்ல முதலீட்டு ஆலோசகரைக் கண்டடைவது பற்றியும், அவரோடு எப்படிப் பணி புரிவது என்பது பற்றியும் பேசினோம். ஆனால், உங்களுக்குத் திருப்திகரமான ஆலோசகரை உங்களால் கண்டடைய முடியாவிட்டால்? நீங்கள் இருக்கும் ஊரில் அப்படிப்பட்ட ஒருவர் இல்லை என்ற பட்சத்தில் என்ன செய்வது?
எதை செய்யக் கூடாது
என்ன செய்வது என்று சொல்வதற்கு முன்னால் என்ன செய்யக் கூடாது என்று சொல்லி விடுகிறேன். அதற்காக உங்கள் முதலீட்டுத் திட்டத்தையே துவக்காமல் இருக்கக் கூடாது. நான் ஆரம்பத்தில் சொன்னது போல, துவக்கம் என்பதே ஒரு மிக முக்கியமான விஷயம். ஆகையால், ஓரிரு கட்டுரைகளில் உங்களுக்கு நீங்களே எப்படி ஒரு எளிமையான திட்டத்தை வகுத்துக் கொண்டு ஆரம்பிக்கலாம் என்று சொல்கிறேன்.
இதை ஒரு ஆலோசகரின் அவசி யத்தையோ முக்கியத்துவத்தையோ குறைத்து மதிப்பிடுவதாகக் கருதிக் கொள்ளக் கூடாது. உங்கள் தேவை களும், நிதி வளமும் பெருகப்பெருக ஒரு ஆலோசகர் மேலும் மேலும் அவசியமாவார். ஆனால், நீங்களாகவே ஒரு திட்டத்தினைச் செயல்படுத்தத் துவங்கி பின்னொரு நாளில் ஒரு ஆலோசகரிடம் சென்றால் அவர் உங்கள் திட்டத்தினைப் பரிசீலித்து அதற்கேற்ப மேற்பரிந்துரைகள வழங்குவார்.
நமக்கு நாமே திட்டம்
இப்படி ‘நமக்கு நாமே’ ஒரு எளிய திட்டத்தை வகுத்துக் கொள்வது எவ்வாறு? இதனை இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம். முதல் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிய எளிய திட்டத்தினை வகுப்பது பற்றியும், அடுத்த பகுதியில் அதை எங்கே எவ்வாறு முதலீடு செய்வது என்பதைப் பற்றியும் காண்போம்.
எந்த ஒரு நிதித்திட்டமுமே ஒரு இலக்கினை நோக்கி இருக்க வேண்டும் என்பது ஒரு கட்டாய உண்மை. இலக்கில்லாத முதலீடுகளுக்கு கால நிர்ணயங்கள் கிடையாது; ஆகையால் அவற்றை நிர்வகிப்பது கடினம், பெரும்பான்மையும் இழப்பிலோ ஏமாற்றத்திலோ சென்று முடியும்.
ஆகையால், நமது எளிமையான முதலீட்டுத் திட்டத்தை ஒரு இலக்கை நோக்கி செலுத்துவோம். நாம் சுலபமாகத் தேர்ந்தெடுக்கக் கூடிய இலக்கு நமது ஓய்வூதியத்துக்கு தேவையான நிதிவளம். இது எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் இருக்கும் இலக்கு.
அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு இது சற்று குறைவாக இருக்கலாம், மற்றவர்களுக்கு இது சற்று அதிகமாக இருக்கலாம். எப்படியோ எல்லோரும் ஒரு நாள் ஓய்வு பெறப் போகிறோம். அன்று முதல் பணத்துக்காக நாம் உழைப்பதை நிறுத்தி, நமக்காக நமது பணம் - சேமிப்பும் முதலீடுகளும் உழைக்க வேண்டும்.
நீண்டகால முதலீடு
இதைத் தேர்ந்தெடுப்பதன் இன்னொரு நன்மை பலருக்கு இது சற்றேனும் நீண்ட காலத்தில் இருப்பது. அப்படி இருப்பதால், கொஞ்சம் ரிஸ்க் எடுத்து திட்டமிட இடம் கொடுக்கும் இலக்கு. சந்தையின் ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு பதறாமல், ‘காலம் இருக்கிறது, கவலைப்பட வேண்டாம்' என்று ஆறுதல் கொள்ள வைக்கும் இலக்கு.
சரி, நாமே ஒரு முதலீட்டுத் திட்டத் தினை ஆரம்பிக்கப் போகிறோம், அது நமது ஓய்வூதியத்துக்கான நிதிவளத்தினைப் பெருக்குவதற்கான திட்டம் என்று தீர்மானம் செய்திருக் கிறோம். இதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? அதைக் கண்டறிவது எப்படி?
இதை இரண்டு முறைகளாகப் பார்க்கலாம். முதலாவது நமக்கு எவ்வளவு தேவை என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பது; இரண்டாவது நம்மால் எவ்வளவு சேமித்து முதலீடு செய்ய முடியும் என்ற வகையில் பார்ப்பது. என்னுடைய பரிந்துரை என்னவென்றால், நாம் முதலில் எவ்வளவு தேவை என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு அதற்குள் நம்மால் எவ்வளவு முடியும் என்று கணக்கிட்டு அதை முதலீட்டுத் தொகையாகக் கொள்வது.
கணக்கீடு அவசியம்
நமக்கு எவ்வளவு தேவை என்பதை கணக்கிடுவது எப்படி? இது மிகவும் சுலபமான விஷயம் அல்ல. ஆனாலும் இன்றைய தொழில்நுட்ப காலதேச வர்த்தமானத்தில் இது ரொம்பவும் கடினமானதும் அல்ல. இதைக் கணக்கிடுவதற்கு உங்கள் வயது, நீங்கள் எப்பொழுது ஓய்வு பெற விரும்புகிறீர்கள்,
ஓய்விற்குப் பின்னர் உங்கள் செலவுகள் குறித்த பார்வை என்ன, இப்பொழுது உங்கள் கையிருப்புத் தொகை என்ன போன்ற விவரங்கள் தேவை. இவற்றை வைத்துக் கொண்டு கூகிளில் ‘india retirement calculator’ என்று உள்ளீடு செய்தீர்களானால், சில எளிய முறைகளைக் காண்பீர்கள். அவற்றின் துணை கொண்டு, நீங்கள் சேமிக்க வேண்டிய தொகை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கவலை வேண்டாம்
பலருக்கும், அந்தத் தொகை மிக அதிகமாக இருப்பது போலும், தமது சக்திக்கு மிஞ்சியது என்று தோற்றமளிக்கும். கவலையே படாதீர்கள். அதைப் பின்னர் சரி செய்து கொள்ளலாம். அந்த எண்ணைத் தெரிந்து கொண்ட பின்னர் அதற்கு நெருக்கமாக நம்மால் எவ்வளவு முடியுமோ அதை முதலீடு செய்யத் துவங்கினால் போதும்.
ஆக நமது எளிமையான முதலீட்டுத் திட்டத்தில் இரண்டு விஷயங்களைப் பார்த்து விட்டோம் - எதற்காக முதலீடு செய்கிறோம், எவ்வளவு செய்கிறோம். அடுத்து நாம் பார்க்க வேண்டியது எங்கே செய்வது என்பது.
அதாவது எந்த நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது என்பது பற்றி. அடுத்த பத்தியில் அதைப் பற்றிப் பேசலாம். அதில் நான் முதலீடுகளை ஆரம்பிப்பதற்கு உகந்த சில நல்ல நிதித் திட்டங்களை - பெயர்களோடு, விளக்கங்களோடு - பரிந்துரை செய்யப் போகிறேன். பல நூறு திட்டங்களை அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்த முத்துக்கள் போன்ற அந்தத் திட்டங்கள் அடுத்த வாரம்.
srikanth@fundsindia.com