வணிக வீதி

குறள் இனிது: காப்பாற்ற முடியுமா?

சோம.வீரப்பன்

நம் வங்கிகள் இன்று எதிர் கொண்டுள்ள பெரும் பிரச்சினை எதுவென்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியையோ, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜனையோ போய் கேட்கவேண்டாம்! பள்ளிக்குழந்தைகள் கூட வாராக்கடன்கள்தான் அவற்றின் தீராத தலைவலி என்று சொல்லிவிடுவார்கள். 90 நாட்களுக்கு மேல் வட்டியோ தவணையோ செலுத்தப்படாவிட்டால் ஒருவரது கடன் கணக்கு வாராக்கடனாகி விடும் என்பது பொதுவிதி!

அதனால் என்ன என்று கேட்கின்றீர்களா? வாராக்கடன்களை வசூலிப்பதற்கு வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து காத்துக்கிடக்க வேண்டுமென்பதில்லை! சர்பேஸி சட்டத்தின் துணைகொண்டு நீங்கள் வங்கியில் பிணையமாய்க் கொடுத்த காரை, வீட்டை, லாரியை, தொழிற்சாலையை கையகப்படுத்தவும் முடியும், விற்கவும் முடியும்! எனவே கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கி, ஒப்புக்கொண்ட தவணைகளின்படி கடனைத் திருப்பிக்கட்டி விடுவதே நன்று!

ஆனால் யதார்த்தமாகப் பார்த்தால், தவிர்க்க முடியாத காரணங் களால், குறித்த காலத்தில் பணம் கட்டமுடியாமல் போய்விடுவது உண்டு. கல்விக்கடன் பெற்றவர் 2 வருடங்களுக்கு வேலை கிடைக்க வில்லை என்றால் கடனை எப்படிக் கட்டுவார்? அல்லது வீட்டுக்கடன் பெற்றவர் திடீரென நோய்வாய்ப்பட்டு, சம்பளம் இல்லாதிருந்தால் தவணையைக் கட்டமுடியாதே! இது போன்ற காரணங்களை வங்கிக்கு எடுத்துச் சொன்னால் திருப்பிக்கட்டும் காலவரையறையையும் தவணைத் தொகையையும் மாற்றி அமைக்க வழி உண்டு!

தொழில்சார்ந்த கடன்களிலும் இதேநிலைதான். மின் உற்பத்தி, சாலை அமைத்தல் போன்ற மிகப்பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களில் வரும் பிரச்சினைகளும் மிகப்பெரியவை! இவை திட்டச் செலவைப் புரட்டிப் போட்டுவிடும்!

இதனால் கடன்கொடுத்த வங்கிகள் அத்தகைய கடன்களை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி மறுசீரமைப்பு செய்கின்றன. அதாவது திருப்பிக் கட்டுவதற்கான காலம் நீட்டிக்கப்படலாம், வட்டி குறைக்கப்படலாம், கட்டவேண்டிய வட்டியை நீண்டகாலத்திற்குப் பிறகு வசூலிக்கலாம் எனப் பல வகைகளில் உதவலாம்.

ஆனால் ஐயா, இன்று பிரச்சினை முழுவதுமாகத் திசை மாறிவிட்டது. வாராக்கடனுக்குரிய வட்டியை வங்கி வருமானமாகக் கருத முடியாது. மேலும் கடன் தொகையின் 10 முதல் 100 சதவீதத்தை வங்கியின் வருமானத்திலிருந்து கழித்து ஒரு ஒதுக்கீடாக, வைக்கவேண்டும்.

இதனால் வங்கிகள் வாராக்கடனைக் குறைத்துக் காண்பிக்கத் தவறான வழிமுறைகளைப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒருவர் ரூ.1,000 கோடி செலவில் ஆலை அமைக்க ரூ.750 கோடி பெற்றிருந்தால் சொந்தப்பணம் ரூ.250 கோடி போட வேண்டும்! ஆனால் கடன் கொடுக்கும் முன்பே அவரால் அது சாத்தியமா என்பதை வங்கி ஆராய்ந்து இருக்க வேண்டுமே!

ஐயா தயிரைப் பாலாக்க முடியுமா? நெய்தான் வெண்ணையாகுமா? கெட்டது கெட்டதுதான்! ஆரம்பத்தில் கவனிக்கத் தவறிவிட்டு பின்னர் கொடுத்த கடனைக் காப்பாற்ற மேலும் மேலும் கடன்கொடுத்து அந்தப் பணத்தையும் இழக்கலாமா? தக்க வழியில் செய்யப்படாத முயற்சியை பலர் துணை நின்றாலும் காப்பாற்ற முடியாது எனும் குறள் கடன்காரருடன் வங்கிக்கும் பொருந்தும்!

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று

போற்றினும் பொத்துப் படும்

somaiah.veerappan@gmail.com

SCROLL FOR NEXT