வணிக வீதி

குறள் இனிது - நல்லவர் தான், ஆனால்...

சோம.வீரப்பன்

எனது கல்லூரி நண்பர் ஒருவர் வங்கியில் அதிகாரியாகச் சேர்ந்திருந்தார். தினமும் கோவிலுக்குச் சென்று வழிபட்டு விட்டுத்தான் வங்கிக்குச் செல்வார். மீண்டும் மாலையில் வேறு ஒரு கோவில்! நாணயமானவர், அதிலும் மிகவும் கண்டிப்பானவர். வேலை நிமித்தமாக யாருடைய கடைக்கும் செல்லநேர்ந்தால் அவர்கள் கொடுக்கும் தேநீரைக்கூட அருந்தமாட்டேன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார். வாடிக்கையாளர்கள் உணவு விடுதிக்கு அழைத்தாலும் மறுத்துவிடுவார். இதிலெல்லாம் கவனமாக நடந்து கொண்டு விட்டால் பின்னர் பிரச்சினை வராது என்பார். இந்தக் கலிகாலத்தில் இப்படியும் ஒரு மனிதரா என்று வியப்பேன்; மகிழ்வேன்!

சுமார் ஏழு வருடங்கள் கழித்து அவர் பதவி உயர்வு பெற்று எனது ஊருக்கு மாற்றலாகி வந்ததை அறிந்து அவரைப் பார்க்கச் சென்றேன். வெகுவாக வரவேற்று உபசரித்தார்.

அவரது அலுவலகத் தொலைபேசியின் பேசும் கருவி சரியாக வைக்கப்படாமல் இருந்தது. கோணலாக வைத்து இருந்ததால், எதிர்முனையில் இருப்பவர்கள் அதில் வேறு யாரோ பேசிக் கொண்டிருப்பதாகத் தவறாக ஊகிப்பார்கள் என்பதால் அதை சரிசெய்து வைத்தேன். உடனே மணி அடித்து. ஆனால் அதை அவர் எடுக்கவே இல்லை. பலமுறை அடித்தது நின்று விட்டது. நாங்கள் பேச்சைத் தொடர்ந்தோம் என்பதை விட, அவர் தனது உயரிய குணங்களைப் பற்றி விவரித்ததை எல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் என்றே சொல்ல வேண்டும்!

அடுத்தடுத்து வந்த தொலைபேசி அழைப்புகளுக்கும் அவர் அலட்டிக்கொள்ளவில்லை. ஏன் என்று கேட்டதற்கு ‘அட விடுப்பா, எவனாவது தலைமையகத்திலிருந்து எதையாவது கேட்டுத் தொந்தரவு செய்வான்’ என்றார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ‘யாராவது வாடிக்கையாளரின் அழைப்பாகக் கூட இருக்கலாமே’ என்றேன். அதற்கு அவர், ‘அதுதான் கீழே இத்தனைபேர் வேலை செய்கிறார்களே. அவர்களது தொலைபேசியில் தொடர்பு கொள்ளட்டுமே’ என்றார்.

அலுவலக நேரமாயிற்றே நான் கிளம்புகிறேன் என்று சொன்னாலும் கேட்கவில்லை. பொது வாழ்வில் யாருக்கும் நேர்மையில்லை என்றும், வங்கியில் கடன் வாங்குபவர்களுக்கு முதல்நாள் முதலே திருப்பிக் கட்டும் எண்ணம் இல்லை என்றும் அங்கலாய்த்தார். சம்பளம் கொடுக்கும் வங்கியின் வாடிக்கையாளர்களைக் காக்க வைத்துவிட்டு அவர் என்னிடம் பேசுவதை மேலும் பொறுக்க முடியாததால், நாசுக்காகக் கிளம்பி விட்டேன்.

பின்னர் அவரது அலுவலக ஊழியர்கள் கூறியது வேதனையானது. அவர் யாருக்கும் கடனே கொடுப்பது இல்லையாம். “எல்லோரும் அயோக்கியப் பயல்கள், பணத்தை வாங்கிக் கொண்டு ஓடிப்போய் விடுவான்கள்” என்பாராம்.

இப்படிப்பட்ட மனிதர்களை நீங்களும் சந்தித்து இருப்பீர்கள். தாம் உயர்ந்தவர் ஒழுக்கமானவர் என்று பெருமை பேசும் இவர்கள் தம் அடிப்படைக் கடமையிலேயே தவறிவிடும்பொழுது எப்படி நல்லவர்கள் ஆவார்கள்? ஒருவன் செய்யக் கூடாததைச் செய்தால் தவறு; அதைப் போலவே ஒருவன் செய்யவேண்டியதைச் செய்யா விட்டாலும் தவறே என்கிறது குறள்!

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.

- somaiah.veerappan@gmail.com

SCROLL FOR NEXT