எந்தத் தடைகள் வந்தாலும் சொந்த முயற்சி இருந்தால் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் செண்பகம். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகில் உள்ள முத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
போலியோ பாதிப்பினால் ஒரு கால் ஊனம். ஆனால் குடும்பத்தின் பொருளாதார நிலைமை, தனது உடல் ஊனம் அனைத்தையும் தாண்டி இன்று தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
பெரிய நிறுவனங்களின் ஊட்டச்சத்து உணவுகளுக்கு மத்தியில், மருந்து கடைகளிலும், ஷாப்பிங் சென்டர்களிலும் இவர் தயாரிக்கும் குழந்தைகளுக்கான சிறுதானிய சத்துமாவும் இடம் பிடித்துள்ளது. திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் நிரந்தர வாடிக்கையாளர்களையும், நிலையான சந்தையையும் பிடித்துள்ளார்.
இதன் மூலம் தனக்கான நிரந்தர வருமானத்தையும், வேலை வாய்ப்பு களையும், சிறுதானிய விவசாயிகளுக்கு நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளார். தனது மாமனார் குடும்பத்துக்கு சொந்தமான ரைஸ் மில்லை வேறு எந்த வகையில் பயன்படுத்த முடியும் என யோசித்து, அதையே களமாக எடுத்துக் கொண்டவர். அவரது தொழில் அனுபவத்தை இந்த வாரம் பகிர்ந்து கொள்கிறார்.
``பத்து வருடங்களாக இந்த தொழிலில் இருக்கிறேன். திருமணமாகி சில ஆண்டுகள் வரை வீட்டில்தான் இருந்தேன். ஒரு கட்டத்தில் வெறுமையாக இருந்தது. எதுவுமே செய்யாமல் இருக்கிறோமே என்கிற எண்ணம் வந்தது.
அதற்கு ஏற்ப மாமனார் சொந்தமாக வைத்திருந்த ரைஸ் மில் தொழிலும் நலிவடைந்திருந்தது. மக்கள் அரவைக்கு நெல் எடுத்து வருவது குறைந்திருந்ததால் அந்த தொழிலை விட்டுவிடலாம் என வீட்டில் முடிவெடுத் திருந்தனர்.
ஆனால் எனக்குத்தான் அந்த ரைஸ் மில்லை வைத்து வேறு தொழில் ஏதாவது செய்தாலென்ன என்கிற எண்ணம் வந்தது.
அவ்வப்போது குழந்தைகளின் தேவைக்கு ஏற்ப சிறுதானியங்களை அரைத்து சலித்து மாற்று உணவாகக் கொடுக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. வெறுமனே சிறுதானிய மாவு என்று இல்லாமல் கை குழந்தைகளுக்கும் கொடுப்பதுபோல செய்வேன்.
அதை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் கொடுப்பேன். அதற்கு பழகியவர்கள் திரும்பத் திரும்பக் கேட்பார்கள்.
எனவே அதையே தொழிலாக்கினால் என்ன என முடிவு செய்து மாவு அரைக்கும் இயந்திரம் மட்டும் வாங்கி தொழிலை ஆரம்பித்துவிட்டேன்.
எனது கணவர் வாங்கிவரும் சிறுதானியங்களை பக்குவமாக வறுத்து அரைத்து சலித்து அதை பேங்கிங் செய்து தருவேன். அவர் அவற்றை ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி மார்க்கெட்டிங் செய்வார். அப்படித்தான் முதன் முதலில் தொழிலை தொடங்கினோம்.
இப்போது மூன்று மாவட்டங்களில் நிரந்தர விற்பனைச் சந்தையை பிடித்துள்ளோம். எங்கள் பகுதியிலேயே விவசாயிகளிடம் நேரடியாகவும், பொள்ளாச்சி, உடுமலை, காங்கேயம் சந்தைகளிலும் சிறு தானியங்களை கொள்முதல் செய்து கொள்கிறோம். எங்களது இந்த வளர்ச்சிக்கு ஏற்ப வங்கிக்கடன் மூலம் தொழிலையும் விரிவாக்கியுள்ளோம். இப்போது எல்லா வேலைகளுக்கும் இயந்திரங்கள் பயன்படுத்துகிறோம்.
முக்கியமாக உற்பத்தியை நானே முன்நின்று கவனித்துக் கொள்வேன். பச்சிளம் குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து உணவு என்பதால் மிகுந்த கவனத் தோடு தயார் செய்வேன். 7 மாத குழந்தைகளுக்குகூட கொடுக்கமுடியும். சிறுதானியங்களை முளை கட்ட வைத்து அதிலிருந்து இந்த சத்துமாவு தயாரிப்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
நமக்குத்தான் உடல் குறைபாடு உள்ளதே என்று வீட்டிலேயே முடங்கிவிடாமல், இந்த நிலைமையிலிருந்து எப்படி மீண்டுவருவது என்பதை யோசிக்க வேண்டும். நம்மை விடவும் கடினமான வாழ்க்கையோடு பலர் உள்ளனர். அவர்களை நினைத்துக் கொள்ள வேண்டும். செய்கிற வேலையை நேசித்து அதில் நேர்மையோடு இருந்தால் நமது உழைப்புக்கு மரியாதை தர மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை எனது அனுபவத்திலிருந்து உணர்ந்து கொண்டேன்.”
maheswaran.p@thehindutamil.co.in