வணிக வீதி

குறள் இனிது: சொன்னால் கேட்டுக்கணும்!

சோம.வீரப்பன்

‘‘நாம் அறிந்தவற்றை மட்டுமே அறிந்திருக்கிறோம்; நாம் அறி யாதவற்றை அறியாதிருக் கிறோம் என்று அறிந்திருப்பதே உண்மை யான அறிவு” என்பார் ஹென்றி டேவிட் தோரோ! அதாவது நமக்கு ஒரு விஷயம் தெரியாமலிருப்பது தவறில்லை! ஆனால் நமக்கு அது தெரியாது என்பதே தெரியாம லிருப்பது தான் பெருந்தவறு எனலாம்!!

உலகத்தில் பலரும் சொல்ல விரும்புவது அறிவுரை; ஆனால் பெரும்பாலானோர் கேட்க விரும்பாததும் அறிவுரைதான்! ஆனால் என்ன செய்வது? எல்லாமறிந்தவரும் இல்லை; ஏதுமறியாதவரும் இல்லை என்பது தானே உண்மை! ஒரு செயலைச் செய்யுமுன் அச்செயல் குறித்து விபரமறிந்தவர்களுடன் கலந்து ஆலோசித்துச் செய்தால் எதையும் சாதிக்கலாம் என்கிறது குறள்!

இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் இந்த அணுகுமுறை பொருந்தும். உள்நாட்டிலேயே பலகாலம் வியாபாரம் செய்த நிறுவனம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில் அது குறித்த சட்டதிட்டங்களையும், வரும் நன்மை தீமைகளையும் அது பற்றி அறிந்தவர்களிடம் கலந்து ஆலோசித்துத்தானே ஆரம்பிக்க வேண்டும்? நாட்டுக்கு நாடு கலாசாரம் மாறுபடுமே?

ஒரு மேற்கத்திய நிறுவனம் வளைகுடா நாடுகளில் புதிதாக ஒரு சோப்புத்தூளை அறிமுகப்படுத்த எண்ணியது. பெரிய விளம்பரங்களில் வரிசையாக மூன்று படங்கள். முதலில் அழுக்குப்படிந்த துணி. பின்னர் அவர்களின் சோப்புத்தூளினால் துவைக்கும் காட்சி. இறுதியாக நல்ல வெண்மையான துணி. அவர்கள் சோப்புத்தூள் சிறப்பாய்த் துவைக்கும் என சொல்லாமல் சொல்ல நினைத்தார்கள். ஆனால் விளம்பரத்திற்குப் பின் வியாபாரம் குறையவே செய்தது! ஏன்? அந்நாடுகளில் எழுதுவதும் படிப்பதும் நம்மைப் போல இடமிருந்து வலமில்லை! வடமிருந்து இடமாக!! வாடிக்கையாளர்கள் தங்கள் தயாரிப்பை வாங்க வைப்பது எப்படி என்பதுதான் மிகப்பெரிய நிறுவனங்களுக்கிருக்கும் பெரும் சவால்! வாடிக்கையாளரின் மனநிலை என்ன? எதில் மயங்குகிறார்? ஏன் தயங்குகிறார்? எப்படி வாங்க வைக்கலாம் என்று தெரிந்து கொள்வது கம்ப சூத்திரத்திற்கும் மேலே! ஆம், பலநாள் பலபேர் அறைபோட்டு யோசிப்பது!

சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த லிரில் சோப்பு விளம்பரம் ஞாபகம் இருக்கிறதா? வேண்டுமென்றால் Youtube-ல் மீண்டும் பாருங்கள்! பெரிய அருவி; அதில் குதித்து விளையாடும் ஓர் பெண். சக்கைபோடு போட்டுப் பல இலட்சக்கணக்கான சோப்புக்களை விற்றுக் கொடுத்தது.

சிறப்பான இயற்கைச்சூழல், கொட்டும்நீர், நல்லஇசை, அழகிய நடிகை போன்றவை மட்டுமல்ல அதற்குக் காரணம்! இளம்பெண்களுக்கு மழையோ, அருவியோ, வீட்டின் ஷவரோ நனைந்து குதித்து விளையாடுவது மிக மகிழ்ச்சியளிப்பது என்கிற உளவியல் உண்மையைப் புரிந்து கொண்டு அதை விளம்பரத்தில் பயன்படுத்திக் கொண்டதே காரணம் என்பார்கள்!

இன்றைய உலகில் ஆலோசனை சொல்வதே பெரும் வணிகம்! மெக்கென்சி, போஸ்டன் கன்சல்டென்சி போன்ற நிறுவனங்கள் உலகின் பல பாகங்களில் அலுவலகம் கொண்டவை. பல்லாயிரக்கணக்கானோர் வேலை பார்க்கிறார்கள். தொழில்நுட்பம், மனிதவளம், சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் வழிகாட்டுகிறார்கள். தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொண்டால் நல்லதுதானே! குறளில் ஆலோசனையைக் கேளுங்கள்!!

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்

somaiah.veerappan@gmail.com

SCROLL FOR NEXT