இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியாவை கொண்டு செல்ல வேண்டும் என்று மத்திய அரசு பல்வேறு பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குறு, சிறு தொழில்கள் பட்டியலில் இருந்து 20 தொழில்களை நீக்கும் அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிராக குறு, சிறு தொழில் முனைேவார்கள் நாடு முழுவதும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த அறிவிப்பு பெரு நிறுவனங் களுக்கான சாதகமாகும் என்றும், பெரு நிறுவனங்கள் நேரடியாக இந்த தொழிலில் இறங்குவார்கள் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆயிரம் பேர் செய்யக்கூடிய வேலையை இயந்திரங்களைக் கொண்டு 50 நபர்களை வைத்தே செய்து முடிப்பார்கள்.
இதனால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்றும், இந்தியாவின் பகுதி சார்ந்த பொருளாதாரமும், தொழில்களும் அழிந்துவிடும் என்றும் குறிப்பிடுகின்றனர் இந்த துறையைச் சேர்ந்தவர்கள். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பின்னாலுள்ள விவரங்கள் என்ன?
குடும்பத் தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் என்று சொல்லக் கூடிய இந்த குறுந்தொழில்கள் யாவும் குறைவான முதலீட்டில் தனிநபர்கள் மற்றும் குடும்ப பாரம்பரிய தொழிலாக இருந்து வருகின்றன. இவற்றுக்கு உள்ளூர் அளவிலான சந்தைகள் மட்டுமே உண்டு.
இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரமும், கோடிக்கணக் கானவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கிறது. குறைந்த கல்வித்தகுதி, அனுபவம் கொண்ட கிராமப்புற இளை ஞர்களுக்கு சிறு தொழில்களே வேலை வாய்ப்புகளை அளிக்கின்றன.
உள்ளூர் அளவிலான வேலை வாய்ப்பை ஊக்குவிப்பது மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 626 வகையான பொருட்களை சிறுதொழில் பிரிவு நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் மத்திய அரசு முடிவெடுத்திருந்தது.
மேலும் இந்த பட்டியலில் உள்ள தயாரிப் புகளின் எண்ணிக்கை 800 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனால் 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த பட்டியலில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சிறு தொழில் பிரிவு நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று இருந்த பல பொருட்களை இந்த பட்டியலில் இருந்து அவ்வப்போது நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடைசியாக மத்திய அரசின் அறிவிப்பு வந்துள்ளது. சிறு குறு தொழில்கள் பட்டியலில் இருந்து ஊறுகாய், ரொட்டி, கடுகு எண்ணெய், கடலை எண்ணை, வீட்டு உபயோக மரப்பொருள்கள், பதிவேடுகள், நோட்டு புத்தகங்கள், மெழுகுவர்த்தி, சலவை சோப், தீக்குச்சி, பட்டாசு, ஊதுவத்தி, கண்ணாடி வளையல், ஸ்டீல் அலமாரி, ரோலிங் ஷட்டர் தயாரித்தல், ஸ்டீல் சேர், ஸ்டீல் டேபிள், ஸ்டீல் பர்னீச்சர், பூட்டு, எவர்சில்வர் பாத்திரம், வீட்டு உபயோக அலுமினியப் பாத்திரம் உள்ளிட்ட 20 வகையான தொழில்களை மத்திய அரசு நீக்கியுள்ளது.
இதனால் என்ன வகையான பாதிப்பு களை சிறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் என தொழில் துறையினரி டத்தில் கேட்டோம்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு மற்றும் தொழில் துறையின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. ஏற்றுமதியை பொறுத்த வரையில் சிறுதொழில்களின் அளவு 45 சதவீதமாக இருக்கிறது. பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேதான் தங்களது உற்பத்தியையும் உழைப்பையும் செலுத்துகின்றனர் இந்திய தொழில் முனைவர்கள். தேவை யான நேரத்தில் நிதி ஆதாரம் கிடைக்காது. மின்வெட்டு, அதிக வட்டி, உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை அல்லது குறிப்பிட்ட காலத்தில் கிடைக்காதது என பல்வேறு நெருக்கடிகளை சந்திக் கின்றனர்.
மேலும் இது போன்ற காரணங் களால் சுமார் 5 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நஷ்டமடைந்து இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 44 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நலிவடைந்துள்ளன. இதனால் கோடிக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டனர்.
வீட்டிலேயே ஒரு பகுதியை ஒதுக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தவகை குறுதொழில்களைத்தான் இந்தியாவில் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தி. இதுதான் கிராமப்புற பொருளாதாரத்தின் அடிப்படை. இப்போது இது போன்ற தொழில்களையும் பெரிய நிறுவனங்கள் மேற்கொள்ள வழியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது மத்திய அரசு. குடும்பத் தொழிலாக மேற்கொண்டுவரும் சிறு தொழில்களில் பெரு நிறுவனங்கள் ஈடுபடும்போது அதிக முதலீடு மற்றும் இயந்திர உற்பத்திக்கு முன் குடிசைத் தொழில்கள் காணாமல் போய்விடும் என்பதுதான் உண்மை.