வணிக வீதி

முதல் செலவு: வளமான ப(ய)ணத்திற்கோர் வழிகாட்டி

ஸ்ரீகாந்த் மீனாட்சி

அமெரிக்காவில் புகழ் பெற்ற ஒரு விளம்பரம் உள்ளது. ஒரு வாகனக் காப்பீட்டு நிறுவனம் வெளியிடும் விளம்பரம். அதில் இருப்பது ஒரே வாசகம் தான் - ‘நீங்கள் எங்களுக்கு பதினைந்து நிமிடங்கள் தாருங்கள்; உங்கள் வாகனக் காப்பீட்டுத் தொகையில் பதினைந்து சதவீதம் சேமித்துக் காட்டுகிறோம்'. அவ்வளவுதான். சுமார் இருபது வருடங்களாக இன்றளவும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் வெற்றிகரமான விளம்பரம் இது.

இந்தியாவில்…

எனக்கு ஒரு ஆசை. இந்தியாவில் இதைச் சற்று மாற்றிச் சொல்லி ஒரு விளம்பரம் செய்ய வேண்டும். 'ஒரு நிதி ஆலோசகருடன் பதினைந்து நிமிடங்கள் செலவிடுங்கள்; அவர் உங்களுக்கு வருடம் 15 சதவீதம் லாபம் வருமாறு திட்டம் தருவார்' என்று. பிரச்சினை என்னவென்றால் இப்படியெல்லாம் லாப வீதத்தைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்தால் செபி(SEBI)யிலிருந்து உதைக்க வருவார்கள். ஆகையால் அப்படிப்பட்ட விளம்பர ஆசையெல்லாம் ஆசை யாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

ஆராய்வதில் தவறில்லை!

ஆனால் அதிலிருக்கும் அடிப்படைக் கருத்தை மறுக்க முடியாது. ஒரு சரியான நிதி ஆலோசகர் நமது வாழ்வின் நிதிப்பயணத்தை முறையான பாதையில் கொண்டு சென்று நல்ல லாப வீதத்தில் வளம் பெருக்கித் தருவார். அவர் இதை எப்படிச் செய்கிறார்? இது போன்ற ஆலோசகர்கள் செயல்படும் விதம் என்ன? இவற்றைப் புரிந்து கொள்வது நல்லது. நதிமூலத்தை ஆராயக் கூடாது; நிதி மூலத்தை ஆராய்வதில் தவறில்லை.

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் இங்கு சொல்வது முதலீடுகள் சார்ந்த ஆலோசகர்களைப் பற்றி மட்டுமே. வரி செலுத்துதல், கடன் பெறுதல், காப்பீடு இவற்றுக்கு தனித்தனியே ஆலோசகர்கள் உள்ளனர். எனது நோக்கம் முதலீடுகளில் கவனம் செலுத்துவது மட்டுமே.

இத்தகைய ஆலோசகர்களின் செயல்முறையில் மூன்று பகுதிகள் உள்ளன. முதலாவது உங்களைப் (முதலீட்டாளர்) பற்றி மட்டுமேயானது. இன்னொன்று முதலீட்டுச் சாதனங்களைப் பற்றி அறிந்து கொள்வது மட்டுமேயானது. மூன்றாவது இவ்விரண்டையும் இணைக்கும் பாலம். இதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மூன்று விஷயங்கள்

ஒரு ஆலோசகர் செய்யும் முதல் விஷயம் உங்களைப் புரிந்து கொள்வது. நிதி வள மேம்பாடு என்று வரும் போது ஒரு முதலீட்டாளரைப் புரிந்து கொள்வது என்பது முக்கியமாக மூன்று விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது. ஒன்று, உங்கள் வருமானம், வரவு செலவு ஆகியவற்றை அறிவது. இரண்டாவது, உங்களது எதிர்கால நிதித் தேவைகளைப் (அவை எந்தக் கால வரையறைக்காக இருந்தாலும்) பற்றி அறிவது. மூன்றாவது, உங்கள் உளவியலை - குறிப்பாக உங்களால் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதை - அறிவது.

இவை மூன்றையும் அறிந்து கொள்ளும் போதுதான், உங்களது நிதித் தேவைகளைப் பற்றியும் உங்கள் சேமிப்புப் பழக்கங்கள் மற்றும் எப்படிச் செயல்படுவீர்கள் என்பதைப் பற்றியும் நன்கு அறிந்து கொள்ள முடியும். இவற்றை அறிந்த பிறகு, ஒரு நல்ல ஆலோசகர் முதலீடுகளைப் பற்றி உடனே பேச ஆரம்பித்து பரிந்துரைத்து விட மாட்டார்.

முதலில், உங்கள் வரவு செலவு போக்குகளை ஆராய்ந்து நீங்கள் மேலும் சேமிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து கூறுவார். பின்னர், உங்களுக்கு இன்றியமையாத காப்பீடுகள் இருக்கின்றனவா என்று உறுதி செய்து கொள்வார். அதன் பின்னரே முதலீடுகள் பற்றி யோசிப்பார், செயல்படுவார்.

பொருத்தமானது எது?

இரண்டாவது பகுதி - எந்த ஒரு நிதி ஆலோசகருக்கும் பரந்து பட்ட முதலீட்டுச் சாதனங்களைப் பற்றிய நல்ல புரிதல் இருக்கும். அது அத்தகைய சாதனங்களை தொடர்ந்து பார்வையிட்டு ஆராய்வதன் மூலமாக வருவது. மேலும் ஒரு குறிப்பிட்ட பொருளாதார சூழ்நிலையில் எத்தகைய சாதனங்கள் மற்றும் முறைகள் பொருந்தி வரும் என்பதும் தெரிந்திருக்கும்.

நிலையான செயல்பாடு

குறிப்பாக பரஸ்பர நிதிகளைப் பொருத்தவரை ஒரு ஆலோசகர் முக்கியமாகக் கருதுவது நிலையான சிறப்புச் செயல்பாடு. அதாவது, இன்றைய அளவில்/ சென்ற ஒரு வருடத்தில்/ போன மாதத்தில் எந்த திட்டங்கள் செயல்பாட்டினைக் கொண்டிருந்தன என்பதை மட்டும் பார்த்தால் போதாது.

பல வகையான சந்தை சூழ்நிலைகளிலும் நல்ல செயல்பாடு - அதாவது நல்ல லாபம், அல்லது குறைவான நஷ்டம் - கொண்டிருந்தன என்பதைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். இதையும் தாண்டிச் சென்று, ஏராளமான முதலீட்டுக் காலங்களில் நிதியின் செயல்பாடு எப்படி இருந்தது என்ற அளவில் ஆராய்பவர்களும் உண்டு (இதை rolling returns என்று சொல்வார்கள்).

இப்படியாக ஒரு ஆலோசகர் உங்களைப் பற்றிய புரிதலை ஒரு பக்கமும் முதலீட்டுச் சாதனங்களைப் பற்றிய புரிதலை இன்னொரு பக்கமும் வைத்துக் கொண்டு யோசிப்பார். இவற்றை இணைக்கும் பாலம் என்ன?

முதலீடுகளை திட்டமிடுவது

அதுதான் மூன்றாவது - இதை ‘வகைமை விகிதாசாரத் திட்டம்' என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் இதை asset allocation plan என்று சொல்வார்கள். நிதித் திட்டங்கள் ஒவ்வொன்றும் ஒரு வகைப்படும். ஒவ்வொரு வகைக்கும் ஒரு ரிஸ்க் அளவையும், லாப எதிர்பார்ப்பு அளவும் இருக்கும். ஒரு நிதித் திட்டம் என்பது முதலில் ஒரு முதலீட்டாளரின் தேவைகள் மற்றும் தன்மைக்கேற்ப இந்த வகைச் சாதனங்களில் இந்த வீதத்தில் முதலீடு செய்யலாம் என்பதை நிர்ணயம் செய்வதிலேயே தொடங்குகிறது.

மாறுபடும் விகிதாச்சாரம்

உதாரணமாக, ஒரு முப்பது வயது இளைஞர் தனது குழந்தையின் மேற்படிப்புக்கு பதினைந்து வருடத் திட்டம் ஒன்று துவங்க விரும்புகிறார். இன்னொருவருக்கு நாற்பத்தைந்து வயதாகிறது. இன்னம் ஐந்து வருடங்களில் நடத்தி வைக்க வேண்டிய திருமணத்துக்காக முதலீடு செய்கிறார். இவர்கள் இருவரும் வெவ்வேறு அளவில் ரிஸ்க் எடுக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ப அவர்களது வகைமை விகிதாசாரங்கள் மாறுபடும்.

இந்த விகிதாச்சாரத்தை முடிவு செய்து விட்டால், ஒவ்வொரு வகைமையிலும் இருக்கும் நல்ல நிதித் திட்டங்களை (முன்னர் ஆராய்ந்து வைத்த படி) தேர்ந் தெடுத்துப் பொருத்தி, ஒரு முதலீட்டுத் திட்டம் உருவாக்கி விடலாம் இல்லையா? இப்படித் தான் ஒரு ஆலோசகர் செயல்பட்டு ஒருவருக்கு எத்தனை திட்டங்கள் தேவையோ அவற்றையெல்லாம் வடிவமைக்கிறார்.

மந்திரம் கிடையாது

இதில் மந்திரமில்லை; தந்திர மில்லை. ஆனால், இதைச் செவ்வனே செய்வதற்கு, அனுபவம், கல்வி, பொறுமை, ஆராய்ச்சித் திறமை ஆகியவை வேண்டும்.

இன்று இந்தப் பத்தியில் ‘நல்ல ஆலோசகர்' என்ற சொற்றொடரைச் சில இடங்களில் பயன்படுத்தி இருக்கிறேன். அது என்ன ‘நல்ல' ஆலோசகர்? அவர் எத்தகையவர்? அவருக்கான இலக்கணம் என்ன? அப்படிப்பட்டவரைக் கண்டடைவது எப்படி? அது அடுத்த வாரம்.

srikanth@fundsindia.com

SCROLL FOR NEXT