வணிக வீதி

குறள் இனிது: புகார் எனும் பரிசு

செய்திப்பிரிவு

ஒரு திங்கட்கிழமை காலை 10 மணி. நல்ல வெயில். நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஒரு பெரிய வங்கியின் கோட்டமேலாளர் அலுவலகம். அவரது தனி அறையின் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே பாய்ந்தவர் கத்த ஆரம்பித்தார். ‘என்னய்யா வங்கி நடத்துகிறீர்கள்? நான் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பம் கொடுத்து இரண்டு மாதமாகிறது.

உங்கள் கிளை மேலாளரைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அவர் அலுவலகத்தில் இருப்பதே இல்லை! பொறுப்பாகப் பதில் சொல்ல அங்கு வேறு ஆளும் இல்லை! இன்றுவரை மாறிமாறி ஏதாவது மேல் விபரம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உங்கள் எல்லோருக்கும் தண்டச்சம்பளம் தான்!. உங்கள்கீழ் வேலை பார்ப்பவர்களைக் கட்டுப்படுத்தி வேலைவாங்க முடியாத நீங்கள் ஏன் இந்தப் பதவிக்கு வந்தீர்கள்?” என்கிற ரீதியில் பேசிக்கொண்டே போனார்.

இருதரப்பிலும் பேச்சு வீட்டுக்கடனிலிருந்து திசைமாறி வங்கிப்பணியாளர்கள் வாங்கும் சம்பளம், அனுபவிக்கும் சௌகரியங்கள் என வாடிக்கையாளர் சார்பிலும், வங்கி ஊழியர்கள் பணியில் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களை அரசாங்கமும் மேலதிகாரிகளும் படுத்தும் பாடு என அதிகாரிகளின் சார்பிலும் எங்கெங்கோ போய்விட்டது. வாடிக்கையாளரின் அடிப்படை புகாரான வீட்டுக்கடன் பெறுவது பற்றிக் கேட்கவே மறந்துவிட்டனர்!.

தன் செவி கரிக்குமளவு குடிமக்கள் குறை கூறினாலும் கூட, அரசர் அதைப்பொறுத்துக்கொண்டு அவர்களுக்கு ஆவண செய்ய வேண்டுமென்கிறது குறள்! அக்காலத்தில் மன்னனிடம் பேசவேண்டுமெனில் இனிய வார்த்தைகளால் அவனைப் புகழ்ந்து மட்டுமே பேச வேண்டியதிருந்திருக்கும்! இருப்பினும் அரசன் தவறு இழைத்துவிட்டால் ‘தேரா மன்னா” என்று கண்ணகி போலவே மற்றவர்களும் கோபத்துடனே அழைத்திருப்பார்கள்! அரசன் அத்தருணங்களில் உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டுமெனில், தனது அதிகாரத்தைக் காண்பிக்க கூடாது!.

இன்றைய வர்த்தக உலகில் வாடிக்கையாளர் கூறும் புகார்களை, அவை கொடிய சொற்களுடன் வந்தாலும், நிறுவனத் தலைவர்களும் பொறுத்துக் கொள்ளவே வேண்டுமில்லையா? ஏனெனில் பொருளின், சேவையின் தரம் குறையாமல் பார்த்துக்கொள்ளத் தவறிவிட்டது அவரது முதல் குற்றம்!

அடுத்த குற்றமாக புகார் கூறுபவரின் வாயை அடைத்து அவரை அவரது மனக்குறைகளைக் கொட்ட விடாமலும் செய்யக்கூடாதே! மிகவும் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் மூலம்தான் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்கிறார் பில்கேட்ஸ்!

புகார்களை நிறுவனங்கள் தமக்கு வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பரிசாகக் கருதி ஏற்கவேண்டும் என்று ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார் பார்லோ!

நமது பொருளில் குறையெது என்று தெரிந்தால்தானே அதை மேம்படுத்த முடியும்!. மேலும், புகார்கள் மூலம் புதிய பொருட்கள், சேவைகளுக்கான நல்யோசனைகளும் கிடைக்கும். வாடிக்கையாளரின் பார்வையில் எது முக்கியமோ அதற்கு அவர் செலவிடத் தயாராக இருக்கிறார் என்பதைத் தனியே ஆய்வு நடத்தாமல் தெரிந்து கொள்ளலாம்!

நல்ல கருத்தான குறள் இதோ

‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.”

- சோம.வீரப்பன்
somaiah.veerappan@gmail.com

SCROLL FOR NEXT