வரி ஏய்ப்பு என்பது நமது நாட்டில் மட்டுமல்ல அனைத்து நாடுகளிலுமே நிகழும் சகஜமான ஒன்றுதான். வரி விதிப்பு மட்டும் கடுமையாக இருப்பதல்ல, வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு தண்டனையும் கடுமையாக இருக்கிறது அமெரிக்காவில். வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கான தண்டனை அங்கு அதிகம். தண்டனைக்குள்ளான முக்கியமான பிரபலமானவர்கள் விவரம் இதோ...
1. பால் டாகர்டாஸ்- வரி தொடர்பான வழக்கறிஞர்
10 ஆண்டுகளாக 700 கோடி டாலர் வரை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வரி ஏய்ப்பு சார்ந்த வழக்குகளில் ஆஜராகி 9 கோடி டாலர் வரை ஆதாயமடைந்துள்ளார். வரி மோசடி வழக்கில் இவர் செய்தது மிகப் பெரிய குற்றமாகும். பெரும் தொழிலதிபர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ய ஆலோசனை வழங்கியவர். 2011-ம் ஆண்டு இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜென்கென்ஸ் & கில்கிறைஸ்ட் என்ற சட்ட நிறுவனத்தை நடத்தியவர். சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர்.
2. இகோர் ஒலெனிகாப்- ரியல் எஸ்டேட் கோடீஸ்வரர்
வெளிநாட்டு வங்கிகளில் 20 கோடி டாலரை 10 ஆண்டுகளுக்கு மேலாக பதுக்கியவர். இவருக்கு 5 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. 40 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 1942-ம் ஆண்டு ரஷியாவில் பிறந்தவர். 15 வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர். 30 வயதில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர். 370 கோடி டாலர் வரை சொத்து சேர்த்துள்ளார். 1990-ம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை பதுக்கியவர்.
3. டிஒய் வார்னர்- பெனி பேபிஸ் - பொம்மை தயாரிப்பு நிறுவனர்
1996-ம் ஆண்டு 8 கோடி டாலரை ஜூரிச்சில் பதுக்கியவர். இதன் மூலம் 56 லட்சம் டாலர் வரி ஏய்ப்பு செய்துள்ளார். 8 கோடி டாலர் எவ்விதம் வந்தது என்பதை உரிய ஆவணங்களுடன் நிரூபிக்கவில்லை. இவருக்கு 5.35 கோடி டாலர் அபராதமும், 57 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர் சிகாகோவில் பிறந்தவர். கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவர். பொம்மை வியாபாரத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர். 1986-ம் ஆண்டு சொந்தமாக டிஒய் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தியவர். இவருக்கு 250 கோடி டாலர் சொத்து உள்ளது.
4. வெஸ்லி ஸ்னைப்ஸ்- சினிமா நடிகர்
1999-ம் ஆண்டு முதல் 2004 வரை வரி விவரம் தாக்கல் செய்யவில்லை. இந்த காலத்தில் இவரது வருமானம் 3.80 கோடி டாலராகும். ஆனால் ஒரு கோடி டாலர் வரி தொகையை திரும்ப கேட்டு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 1.70 கோடி டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. 2013-ல் விடுதலையானார்.1962-ல் பிறந்தவர். 23 வயதில் ஏஜென்டாக வாழ்க்கையைத் தொடங்கியவர். தற்காப்புக் கலை போட்டிகளில் பங்கேற்பார். இதன் மூலம் 50-க்கும் மேலான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
5. ஜோ மற்றும் தெரஸா கியூடிஸ்- டிவி ரியால்டி நிகழ்ச்சி அமைப்பாளர்கள்
போலியான ஆவணங்களை. தாக்கல் செய்து வங்கியில் கடன் பெறுவர். பிறகு நிறுவனம் திவாலாகிவிட்டதாக சான்று அளித்துள்ளனர். வருமானம் தொடர்பான பொய்யான தகவல்களை அளிப்பர். 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை வரி விவரத்தை தாக்கல் செய்யவில்லை. இந்த கால கட்டத்தில் 10 லட்சம் டாலர் வருமானம் ஈட்டியபோதிலும் அதைத் தெரிவிக்கவில்லை. தெரசாவுக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜோவுக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
6. ஜோ பிரான்சிஸ்- சினிமா தயாரிப்பாளர்
2002-2003-ம் ஆண்டில் தான் ஈட்டிய 2 கோடி டாலருக்கு வரி செலுத்தவில்லை. 2009-ம் ஆண்டில் 5 லட்சம் வட்டித் தொகைக்கு தவறாக வரி தாக்கல் செய்துள்ளார். 301 நாள் சிறைத் தண்டனை, 2,49,705 டாலர் தொகையை 10 ஆயிரம் டாலர் அபராதத்துடன் செலுத்த உத்தரவிடப்பட்டது. அட்லாண்டாவில் பிறந்தவர். தெற்கு கலிபோர்னியா பல்கலையில் தொழில்முனைவோருக்கான பட்டம் பெற்றவர். பொழுது போக்கு சார்ந்த தொழிலில் ஈடுபட்டு, டி.வி. மூலம் பிரபலமானார். கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்று டி.வி. நிகழ்ச்சிகளைத் தயாரித்தார். பிறகு வீடியோ தொடர்களைத் தயாரித்து பிரபலமானார்.
7. பெட்டே ரோஸ்- பேஸ்பால் விளையாட்டு வீரர்
வருமான வரி கணக்கை தவறாக தாக்கல் செய்தவர். சூதாட்டம் மூலம் ஈட்டிய பணத்தை மறைத்துள்ளார். இவர் கையெழுத்திட்ட பொருள் விற்பனை மூலம் கிடைத்த தொகைக்கும் வரி செலுத்தவில்லை. இவருக்கு 5 மாத சிறைத் தண்டனை மற்றும் 50 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் வரித் தொகையை வட்டியுடன் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. பேஸ்பால் விளையாட ஆயுள்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார். 1941-ம் ஆண்டு சின்சினாட்டி மாகாணத்தில் பிறந்தவர். கால்பந்து மற்றும் பேஸ்பால் விளையாட்டு வீரர். பின்பு பேஸ்பால் விளையாட்டில் முழு நேரம் ஈடுபட்டவர். சிறந்த விளையாட்டு வீரர் விருதைப் பெற்றவர். பேஸ்பால் விளையாட்டில் இவர் நிகழ்த்திய சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.
8. ரஷியா வில்சன்- வரி ஏய்ப்பின் ராணி
மருத்துவ ஆவணங்களில் மோசடி செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஒரு நாளில் 30 ஆயிரம் டாலர் செலவிட்டுள்ளார். 90 ஆயிரம் டாலருக்கு 2013-ல் ஆடி கார் வாங்கியுள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் தான் வரி ஏய்ப்பில் ராணி என்று வெளிப்படையாகக் கூறி வருமான வரி அதிகாரிகளுக்கு சவால் விட்டவர்.
இவருக்கு 21 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 7-ம் வகுப்பில் பள்ளிப் படிப்பை நிறுத்தியவர். பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகளுக்காக 40 முறை கைது செய்யப்பட்டவர். ஆனால் அப்போதெல்லாம் இவருக்கு சிறைத் தண்டனை கிடைக்கவில்லை.