வணிக வீதி

துணிவே தொழில்: தொழிலின் சக்சஸ் ஃபார்முலா?

அஸ்பயர் கே.சுவாமிநாதன்

கடந்த சில வாரங்களாக எனக்கு வரும் பல இ-மெயில்களில் குறிப்பாக சில இ-மெயில்கள் கட்டாயம் இவர்களுக்கு பதில் கூறியே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளியுள்ளன.

சார், தொழில் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கள் குடும்ப ஜோதிடரோ எனக்கு நேரம் சரியில்லை என்றும் இப்போது தொழில் தொடங்கக் கூடாது என்றும் கூறுகிறார். நான் என்ன செய்வது என்று ஒரு சிலர் கேட்டுள்ளனர்.

வேறு சிலரோ நான் அதிர்ஷ்டமில்லாதவன். இதனால் எனது மனைவி பெயரிலோ, குழந்தை பெயரிலோ தொழில் தொடங்கலாமா என்று கேட்டுள்ளவர்களும் உள்ளனர். திருமணம் ஆகாதவர்களோ தங்கள் தாயின் பெயரில் தொழில் தொடங்கலாமா? என்று கேட்கின்றனர்.

வேறு சிலரோ எதைச் செய்தாலும் சிலர் பெரிய அளவில் வளர்ந்து விடுகின்றனர். என்னால் அந்த அளவுக்கு தொழிலில் வளர்ச்சியடைய முடியுமா? என்று சந்தேகம் கிளப்பியுள்ளனர்.

ஜாதகத்தை வைத்து ஜோதிடரை அணுகி கேட்பதைப் போல, இணையதளம் மூலம் தொழில்துறை ஆலோசகரான என்னிடம் சந்தேகம் கேட்டுள்ளனர்.

பொதுவாக நான் நடத்தும் தொழில் ஆலோசனை பயிற்சி முகாம்களில் பங்கேற்பவர்களிடம் சில கேள்விகள் கேட்பேன். அதையே என்னிடம் கேள்வி கேட்டவர்களுக்கு பதிலாக அமையும் என்று நினைக்கிறேன்.

அரங்கில் இருப்பவர்களிடம் பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு அவர்களைக் கவர்ந்த முன்னணி தொழில் அதிபர்கள் 10 பேரை பட்டியலிடுங்கள் என்பேன்.

எல்லோரும் இந்தியாவின் பெரும் பணக்காரர்களான டாடா, பிர்லா, அம்பானி, டிவிஎஸ் என்று குறிப்பிடுவர். தொழில்நுட்பத் துறையைச் சார்ந்தவர்கள் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, விப்ரோ அஸிம் பிரேம்ஜி, ஹெச்சிஎல் ஷிவ் நாடார் ஆகியோரைக் குறிப்பிடுவர். தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எழுதும் பட்டியலில் பொள்ளாச்சி மகாலிங்கமும், சரவணா ஸ்டோர்ஸ் செல்வரத்தினமும் இடம் பெற்றிருப்பர்.

இவர்கள் அனைவரும் சாதனையாளர்களாக தொழிலில் வெற்றிபெற என்ன காரணம்? இவர்களது வெற்றிக்கு யார் காரணம்? வெற்றிக்கு சக்சஸ் ஃபார்முலா இருக்குமா? என்று கேட்டால் அரங்கத்தில் உள்ளவர்கள் அனைவருமே ஆம் என்று கோஷம் போடுவர்.

சரி இவர்களது வெற்றிக்கான ரகசியம் ஒன்றா அல்லது ஒவ்வொருவருக்கும் தனித் தனியானதா? என்று கேட்டால் அனைவருமே ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரகசியங்கள் உள்ளன என்றனர்.

ஆனால் உண்மையில் பார்த்தால் எந்தத் தொழிலதிபருக்குமே தனித் தனி சக்சஸ் ஃபார்முலா கிடையாது. தொழிலில் மட்டுமல்ல வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் அதற்கு ஒரே ஒரு சக்சஸ் ஃபார்முலாதான் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். நம்மூரில் லாரியை ஓட்டி இன்று மிகப் பெரிய தொழில் குழுமமாக வளர்ந்துள்ள டிவிஎஸ் பார்சல் சேவையைத் தொடங்கி இன்று பல்வேறு தொழில்களில் கொடிகட்டிப் பறக்கிறது பொள்ளாச்சி மகாலிங்கத்தின் சக்தி குழும நிறுவனங்கள்.

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக வளர்ந்த ரிலையன்ஸ் அம்பானி, ஆரம்ப நாளில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி படிப்படியாக உயர்ந்தவர்தான்.

பாத்திரக் கடையில் பணிக்குச் சேர்ந்து பிறகு பன்முக அங்காடியாக மாற்றி இன்று பாத்திரம், ஜவுளி, தங்க நகை விற்பனையில் ஜொலிக்கும் சரவணா ஸ்டோர்ஸ் செல்வ ரத்தினம் என அனைவரது வெற்றிக்கும் ஒரே சக்சஸ் ஃபார்முலாதான். அந்த சக்சஸ் ஃபார்முலா என்ன என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம். அதுவரை தொடரட்டும் சஸ்பென்ஸ்.

- அஸ்பயர் கே.சுவாமிநாதன்
aspireswaminathan@gmail.com

SCROLL FOR NEXT