இணையதளம் வந்த பிறகு மொத்த பிஸினஸ் உலகும் மாறி வருகிறது. மேலும் இணையம் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதினால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்த ஆன்லைன் ஊடகங்களையே பயன்படுத்தி வருகிறார்கள்.
அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு தேவை இருந்தாலும் ஆன்லைன் மீடியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பதுதான் சர்வதேச அளவில் கணிப்பாக இருக்கிறது. இதனால் இணையதளத்தை பயன்படுத்தி பலரும் பணம் சம்பாதித்து வருகிறார்கள். இதற்காக செய்தி ஊடகம்தான் ஆரம்பிக்க வேண்டும் என்றில்லை. பலர் தனிப்பட்ட முறையில் இணையதளம் ஆரம்பித்து அதன் மூலம் விளம்பர வருவாயை பெறுகிறார்கள்.
இணையதளத்துக்கு சர்வதேச எல்லை கிடையாததால் இதற்கான வரிச் சட்டங்களில் இன்னும் தெளிவு வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துவருகிறது.
உதாரணத்துக்கு இந்திய ஆன்லைன் நிறுவனங்களில் செய்யப்படும் விளம்பரங்களுக்கு சேவை வரி செலுத்தியாக வேண்டும். 2012-ம் ஆண்டு சேவை வரி பட்டியலில் இருந்து ஆன்லைன் விளம்பரங்களுக்கு விலக்கு கொடுத்திருந்தாலும் கடந்த வருடம் ஜூலை 10-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஆன்லைன் விளம்பரங்களுக்கு சேவை வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.
கடந்த பட்ஜெட்டில் இந்த மொத்த சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டது வேறு விஷயம். ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் போது அவர்களிடமிருந்து சேவை வரி வசூலிக்கத் தேவை இல்லை என்ற விலக்கு இருக்கிறது.
இது இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு விளம்பரங்களுக்கான சலுகை. ஆனால் அதே நேரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு கூட வரி செலுத்தாமல் இருக்க முடியும் என்பது போல வரிவிதிகள் இருக்கின்றன.
அதாவது பேஸ்புக் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கும் விளம்பரம்தான் வருமானம். ஆனால் இந்த வருமானத்துக்கு அவர்கள் வரி செலுத்தாமல் இருக்கலாம் அல்லது குறைவான வரி செலுத்தலாம் என்பது போல விதிகள் இருக்கின்றன.
இந்தியர்கள் அல்லது இந்திய நிறுவனங்கள், விளம்பரங்களுக்காக இவர்களிடம் கட்டணம் செலுத்தினாலும் அவை இந்திய சட்டப்படி இல்லாமல் வெளிநாடுகளின் சட்டப்படி பில் கொடுக்கப்படுவதால், இந்த நிறுவனங்களை வரி வளையத்துக்குள் கொண்டு வர முடியவில்லை என்று வரி நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்திய சட்டங்கள் பெரும்பாலும் நிறுவனங்கள் எங்கு செயல்படுகின்றன என்பதை அடிப்படையாக கொண்டு இருக்கின்றன. ஆனால் இணையதள நிறுவனங்கள் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
சட்டப்படி பார்த்தால் இந்த நிறுவனங்கள் எந்த தவறும் செய்யவில்லைதான். ஆனால் அதற்கான வரி செலுத்தாமல் இருப்பது சரியான செயல் ஆகாது என்று வரி வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
2018-ம் ஆண்டு ஆன்லைன் விளம்பர வருமானம் 10,000 கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், இதற்கான சரியான சட்டங்களை உருவாக் குவது அவசியமாகிறது.