‘அட போங்கப்பா! இந்த நிறுவனம் வெறும் செங்கல்லும் சிமெண்டும் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம் தான்! இதற்கு உயிரோ உணர்வோ இல்லை. இங்கு யாருக்கும் மனசாட்சி கிடையாது. நாம் ஏதாவது கேள்வி கேட்டால் சட்டத் திட்டங்களையும் சுற்றறிக்கைகளையும் சொல்லி அலைக்கழிப்பார்கள்.
இங்கு நியாயம் கிடைக்காது’ என்பது போன்ற பேச்சுகளை சில அலுவலகங்களில் விரக்தியடைந்த பணியாளர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். பல சமயங்களில் பெரிய நிறுவனங்களில் பொருள் வாங்கிய வாடிக்கையாளர்களும் இவ்வாறு அங்கலாய்ப்பதுண்டு!
அரசனாகப்பட்டவன் அறம் தவறாமலும், தீயவைகளைத் தவிர்த்தும், வீரத்துடனும் மானத்துடனும் ஆட்சி செய்ய வேண்டுமென்கிறது திருக்குறள். அரசன் நாட்டிற்கே முதல்வன்! நீதிக்கும் அவனே தலைவன்! அவனைத் தட்டிக் கேட்பது யார்? அவனுக்கு நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் தான் என்ன?
கடவுளுக்கோ தர்மத்திற்கோ பயந்தால் தான் உண்டு! இல்லாவிட்டால் புரட்சி வந்து ஆட்சி போமோ? இன்றைய இந்தியாவில் அசுர வளர்ச்சி கண்டுள்ள பலபெரிய நிறுவனங்களின் நிலையும் இதுதான்.
அறம் தவறாமை:
தற்பொழுது செய்தித்தாள்களில் நாம் பார்க்கும் நிலக்கரி, அலைக்கற்றை போன்ற மோசடிகளில் நாட்டின் மிகப்பெரிய முன்னணி நிறுவனங்களின் பெயர்கள் இருப்பது வேதனையானது. இந்நிறுவனங்களின் உயரதிகாரிகளும் இவ்வாறே பழக்கப்பட்டு விடுகின்றனர்.
அதிகாரம் அதிகமானால் ஆணவம் அதிகமாகும்! நாம் எதையும் கையூட்டு கொடுத்து வாங்கி விடலாம் என்கின்ற மமதை வந்துவிடும்! ஆனால் சத்தியம் தவறினால் சத்யம் நிறுவனத்திற்கு நேர்ந்த கதிதான்!
தீயவை தவிர்த்தல்:
நாட்டில் பொய், பித்தலாட்டம், களவு இல்லாமல் பார்த்துக் கொள்வது மன்னனின் கடமை. அவ்வாறே நிறுவனத்தால் பணியாளர், வாடிக்கையாளர், சமூகம், அரசாங்கம் என யாருக்கும் ஏமாற்றமோ, அநீதியோ ஏற்படாமல் இருக்கும்படி தம்கொள்கைகளைக் கோட்பாடுகளை வகுப்பதும் நிறுவனத் தலைவரின் கடமை.
பாதிக்கப்பட்டவர்கள் முறையிட ஏதுவாக பல நிறுவனங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்துள்ளன. இவை முறையாக விசாரிக்கப்பட்டு முறையிட்டவருக்கு நீதி கிடைப்பதுடன் தமக்குக் கிடைத்த பதில் சரிதான் என்கின்ற எண்ணம் வரும்படி ஏற்பாடு வேண்டுமில்லையா?
தைரியத்துடன் முடிவெடுத்தல்:
நேர்மையாக நடத்து கொள்ள தைரியம் வேண்டும். தவறெனத் தெரிந்தால் பணியாளரைத் தண்டிக்கவும் வாடிக்கையாளரிடம் தமது தவறை ஒப்புக்கொள்ளவும் வேண்டிய திருக்கலாம். தம் தயாரிப்பில் ஒரு காரில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பலூன் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் பல்லாயிரக்கணக்கான கார்களையும் தொழிற்சாலைக்கு வரவழைத்து எல்லாவற்றிலும் அதைச் சரிசெய்து அனுப்பும் நிலையும் இப்பொழுது வந்துள்ளதே!.
மானத்துடன் நிர்வாகம்:
அரசாங்க அலுவலகமோ, உணவுவிடுதியோ மருத்துவமனையோ, கல்லூரியோ யாருமே அவமானத்திற்கு அஞ்சவேண்டாமா? ‘அட கவலையை விடுப்பா அங்கு போய்விட்டாய் அல்லவா இனி எல்லாம் ஒழுங்காக நடக்கும்’ என்று சிலருக்கேனும் நல்ல பெயர் உண்டே! அது சரி இந்த நான்கு குணங்களுடன் இன்று இருக்கும் பெரிய நிறுவனங்கள் எவை? உதாரணம் ஏதேனும் கிடைத்தால் மகிழ்ச்சி அடையுங்கள்!. இதோ அந்த அறம் கூறும் மறைக் குறள்
அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு
somaiah.veerappan@gmail.com