வணிக வீதி

குறள் இனிது: திருவள்ளுவரின் பட்ஜெட்!

சோம.வீரப்பன்

வருவாய் வருவதற்கான வழிமுறை களை வகுத்தலும் வந்த பொருளைப் பெருக்குவதும் பின் அதைக் காத்தலும் குடிமக்களுக்கு அதைப் பகிர்ந்து கொடுத்தலும் அரசனின் பணி என்கிறார் வள்ளுவர்.

வர்த்தக நிறுவனங்களின் தலைவர் களுக்கும் இது சாலப் பொருந்தும். அவர்கள் முதலில் விற்பனையை பெருக்குவதற்கான நெறிமுறைகளை ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும். விற்பனை என்பது அவர்கள் எல்லோருமே கற்றுக்கொள்ள வேண்டிய விஞ்ஞானம். சிலருக்கு அது கைவந்த கலை, வேறு பலருக்கோ கைவராத கலை.

சிகரெட்டிற்கு எதிர்காலமில்லை என அறிந்து புதிதாய் ஹோட்டல் தொழிலில் இறங்கிய ஐடிசி நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் இரண்டாவது பெரிய சங்கிலித் தொடர் ஹோட்டலுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறது.

மக்களின் மனநிலை அறிந்து களம் இறங்கிய பிளிப்கார்ட்டின் ஒரு நாள் ஆன்லைன் விற்பனை கோடிகளில் இருக்கிறது. ஆட்டோ வேண்டாம், டாக்ஸிதான் செலவு குறைவு என்று சொல்ல வைத்துவிட்டது ஓலா கேப்ஸ்.

காயலாங்கடை வியாபாரத்தையே ஆன்லைனில் கொண்டு வந்து விற்பவர் வாங்குபவர் இருவருக்கும் லாபமென செய்துவிட்டது ஓஎல்எக்ஸ். இருப்பதை விற்பது பழைய கதை, தேவையறிந்து புதுப்பொருளை, சேவையை உண்டாக்கி விற்பது புதிய கலை. கணினி உலகும் காட்டும் வழிதான் தற்போது பணம் கொட்டும் வழி.

விற்பனையால் லாபம் வரலாம். முதலீடு பெருகலாம். அவ்வாறு வரும் வருவாயை, மற்றும் கடன் மூலம் வரும் மூலதனத்தை சரியான வழியில் பயன்படுத்தாவிட்டால் சிறுகச் சிறுக சேர்த்த பணம் விரைவில் விரயமாகி விடுமே. நிதி மோசடிகளால் மட்டும் பணம் போவதில்லை.

தேவையில்லாத செலவுகள் மற்றும் வருவாய் அளிக்காத முதலீடுகளும்தான் நஷ்டத்தை ஏற்படுத்துபவை. நாட்டின் முதன்மை தொலைத்தொடர்பு நிறுவனங்களாக இருந்த பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றின் இன்றைய நிலைமை என்ன? அமிதாப்பச்சனுக்கும் ஏபிசிஎல் சறுக்கத்தானே செய்தது. சூரியோதயத் தொழில்களைத் தொடங்குங்கள்; அஸ்தமனமிருக்காது.

வருவாயில் சரியான பங்கீடும் மிக முக்கியமானது. முதலில் பணியாளர்களுக்குச் சரியான ஊதியமும், லாபத்தில் பங்கும் அளிக்கப்பட வேண்டும். இன்போசிஸின் ஸ்டாக் ஆப்ஷனால் ஓட்டுனர் வரை பலன் பெற்றதையும் அந்நிறுவனம் ஆயிரக்கணக்கில் லட்சாதிபதிகளை உருவாக்கியதையும் கேள்விப்பட்டு இருக்கின்றோம்.

நிறுவனத்தில் நல்ல வருவாயின் பலன் வாடிக்கையாளரை சென்றடைவது தான் அரிதாயிருக்கிறது. பொருளின் தரத்தை உயர்த்தலாம், விலையைக் குறைக்கலாம். விற்பனைக்குப் பின் அளிக்கப்படும் சேவைகளை மேம்படுத்தலாம். தற்போழுது வர்த்தக நிறுவனங்களின் சமூகப்பொறுப்பு (CSR) அதிகமாக வலியுறுத்தப்படுகின்றது.

ஸ்டேட் வங்கி பள்ளிக் கூடங்களுக்கு ஆயிரக்கணக்கில் மின் விசிறிகளை வழங்கியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி ஹாக்கி அகடாமி ஆரம்பித்து அவ்விளையாட்டை வளர்த்து வருகின்றது. உதாரணங்கள் ஏராளம், ஆனால் செய்யப்பட வேண்டியது அதை விட அதிகம்!

நிதி நிலைக்க நல்நீதி நல்கும் குறள் இதோ

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு

சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com

SCROLL FOR NEXT