கடந்த வாரம் வந்த இணையதள கேள்விகளில் இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
பெங்களூருவைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய பிரான்சைஸி அளிக்கலாமா? என்றும், திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்சைஸி தொழிலை ஏற்று நடத்தலாமா? என்றும் கேட்டிருந்தனர்.
பெங்களூரு தொழில் முனைவோருக்கு இந்த வாரமும் அடுத்தவாரம் திருச்சி இளைஞருக்கும் பதில் தரலாம் என நினைக்கிறேன்.
சொந்தமாகத் தொழில் தொடங்கி ஆரம்பித்து அது வெற்றிகரமாக நடக்கும் போது அதை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் ஆசையாக இருக்கும்.
கோடிக் கணக்கில் முதலீடு செய்து தொழில் தொடங்கும் அம்பானியாக இருந்தாலும் சரி, தூத்துக்குடியில் சிறு தொழில் நடத்தும் அந்தோனியாக இருந்தாலும் சரி இந்த ஆசை நியாயமானதே.
ஆனால் விரிவாக்கம் செய்யப்படும் அனைத்துத் தொழில்களும் வெற்றி கரமானதாக அமைந்தது என்று சொல்ல முடியாது. இதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கிய பெட்ரோல் நிலையங்கள் மிகச் சிறந்த உதாரணம். இதேபோல டாடா, பிர்லா ஆகிய நிறுவனங்களும் பல்வேறு தொழில்களை விரிவாக்கம் செய்ய எத்தனித்து அவை தோல்வியில் முடிந்த கதைகள் ஏராளம்.
விரிவாக்கம் செய்யப்படும் வியாபாரம் சரியான முறையில் கொண்டு செல்லப்பட்டால்தான் அது வெற்றிகரமானதாக அமையும்.
அந்த வகையில் உங்களது சேவை அல்லது தயாரிப்பு தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
விரிவாக்கம் செய்யப் போகும் பகுதிகளுக்கு அது பொருந்தக் கூடியதா என்று ஆராய வேண்டும். இதற்கு அதிகபட்ச களப் பணிகள் நடத்த வேண்டியது மிகவும் அவசியம்.
அவசரப்பட்டு பிரான்சைஸி அளித்தால் அது வெற்றிகரமானதாக அமையாது.
முன்பெல்லாம் பிரதான டீலர், உள்ளூர் ஸ்டாக்கிஸ்ட் என விநியோக சங்கிலி நீண்டு கடைசியில் சில்லரை வர்த்தகரைச் சென்றடையும். ஆனால் நவீன தகவல் தொழில்நுட்ப உலகில் இவற்றையெல்லாம் காணாமல் செய்துவிட்டன ஆன்லைன் நிறுவனங்களான அமேசானும், பிளிப்கார்ட்டும்.
சேவைகள் பல தரப்பட்ட மக்களையும் சென்றடைவதற்கு மிகச் சிறந்த வழி பிரான்சைஸி என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனாலும் உங்களது சேவை அத்தகைய விரிவாக்கத்துக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
வெளிநாட்டைச் சேர்ந்த மெக்டொனால்ட்ஸ் மற்றும் கென்டகி பிரைடு சிக்கன் (கேஎப்சி) ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் பெரும்பாலும் பிரான்சைஸி முறையில்தான் நடத்துகின்றன.
இத்தகைய விற்பனையகங்களுக்கு நீங்கள் சென்று பார்த்தீர்களானால் டெக்சாஸில் உள்ள மெக்டொனால்ட்ஸ் விற்பனையகத்துக்கும், தி நகரில் உள்ள விற்பனையகத்துக்கும் துளிக்கூட வித்தியாசம் இருக்காது. பொருள் மற்றும் சேவையிலும் இம்மி கூட மாற்ற மிருக்காது.
அங்கு இருக்கும் பணியாளர்களின் நடை, உடை மற்றும் அவர்களின் உபசரிப்பு இவற்றில் சிறிது கூட மாற்றத்தைப் பார்க்க முடியாது. உணவின் சுவையும் தரமும் கொஞ்சம் கூட மாறாது. இந்த அளவுக்கு உங்களது தொழிலை அல்லது சேவையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடிந்தால் நீங்கள் தாராளமாக பிரான்சைஸி அளிக்கலாம்.
ஒரு பிரான்சைஸி தோல்வியடைந்தாலும் உங்கள் நிறுவனத்துக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும். பிறகு நீங்கள் சொந்தமாகக் கூட விரிவாக்கம் செய்ய முடியாமல் போய்விடும்.
பிரான்சைஸி எடுப்பது சிறந்ததா என்ற கேள்விக்கான பதிலை வரும் வாரம் பார்க்கலாம்.
அஸ்பயர் கே.சுவாமிநாதன் aspireswaminathan@gmail.com