வணிக வீதி

காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு

இராம.சீனுவாசன்

மத்திய அரசு ஓர் அவசரச் சட்டம் மூலம் டிசம்பர் 26, 2014 அன்று காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீட்டின் வரம்பை 49% வரை அதிகரித்துள்ளது. இது மட்டுமில்லாமல் வேறு பல மாற்றங்களும் காப்பீட்டு துறையில் இந்த அவசரச் சட்டம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அவசரச் சட்டம் வந்த பிறகு ஆறு மாதத்திற்குள் அச்சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்படவேண்டும். இப்போது இரு அவைகளின் கூட்டு அமர்வில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த ஆறு மாதத்தில் இச்சட்டம் மூலம் சாதிக்கவேண்டியது என்ன? இதற்கு பதில் தேடுவதற்கு முன் இத்துறை பற்றி அறிவோம்.

காப்பீட்டுத் துறையின் வளர்ச்சி

காப்பீட்டு துறையின் பங்களிப்பு இரண்டு குறியீடுகள் மூலம் அறியப்படும். ஒன்று காப்பீட்டு ஊடுருவல் (Insurance penetration), மற்றொன்று காப்பீட்டு அடர்த்தி (Insurance density).

காப்பீட்டு ஊடுருவல் என்பது நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த காப்பீட்டு பிரீமியம் தொகைக்கும் நாட்டின் வருமானத்துக்கும் உள்ள விகிதாச்சாரம். இந்த விகிதாச்சாரம் அதிகமாக இருந்தால் மக்கள் காப்பீட்டு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பது தெரியும்.

காப்பீட்டு அடர்த்தி என்பது ஒரு நாட்டில் செலுத்தப்பட்ட காப்பீட்டு மொத்த பிரீமியம் தொகையை அந்நாட்டு மக்கள் தொகையால் வகுப்படுவது. இதனால் சராசரியாக ஒருவர் காப்பீட்டு பெற எவ்வளவு செலவு செய்கிறார் என்பது தெரியும். இவை இரண்டும் அதிகமாவது காப்பீட்டு துறையின் வளர்ச்சியை குறிக்கும்.

இந்திய காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்களையும் அதில் அந்நிய முதலீட்டையும் 1999 முதல் அனுமதித்தபின் காப்பீட்டு அடர்த்தி மற்றும் ஊடுருவல் தொடர்ந்து அதிகரித்து, 2009 ஆண்டு ஓர் உச்ச நிலையை அடைந்து அதன் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக சரியத் துவங்கியுள்ளது. இதில் குறிப்பாக ஆயுள் காப்பீடு வளர்ந்தது போல பொது காப்பீடு வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளில் ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு துறைகள் இரண்டும் சமமான வளர்ச்சி அடைந்துள்ளன. கீழே உள்ள அட்டவணையில் ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு பிரிமியம் தொகைகளின் விகிதாச்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பொது காப்பீட்டு பிரிமியம் தொகையின் பங்கு 44% இருக்க, ஆசிய நாடுகளில் அது 30% ஆகவும், வளர்ந்த நாடுகளில் 43% ஆகவும் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் பொது காப்பீட்டு பிரிமியம் தொகையின் பங்கு 20% தான் உள்ளது.

பொதுவாக, காப்பீட்டு துறையின் வளர்ச்சிக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக முக்கியம். அண்மைக் காலங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததும் இத்துறையின் சரிவுக்கு ஒரு காரணம். காப்பீட்டு துறை வளர்வதற்கு பொருளாதார வளர்ச்சியும் கூடுதல் முதலீடும் தேவை.

ஆயுள் காப்பீட்டின் செயல்பாடு

காப்பீட்டு துறையின் செயல்பாட்டிலும் பொது, தனியார் நிறுவனங்களுகிடையே வேறுபாடுகள் உண்டு. ஆயுள் காப்பீட்டு துறையை எடுத்துக்கொண்டால்,

பொதுத்துறை நிறுவனமான LIC 75% வியாபாரமும் மற்ற 23 தனியார் நிறுவனங்கள் 25% வியாபாரமும் செய்கின்றன.

புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை விற்பதிலும், பாலிசிதாரர்களை தொடர்ந்து தக்கவைத்துகொள்வதிலும் தனியார் நிறுவனங்களை LIC முந்திசெல்கிறது.

2013-14ல் இறப்புக்கு பின் கொடுக்கவேண்டிய காப்பீட்டு தொகை 97% காப்பீடு செய்தோருக்கு கொடுக்கப்பட்டது. பொது துறை நிறுவனமான LIC தனது பாலிசி தாரர்களின் 98% பேருக்கு காப்பீட்டு தொகையை வழங்கி உள்ளது.

ஆனால் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் பாலிசிதாரர்களில் 88% பேருக்கு மட்டுமே காப்பீட்டு வழங்கியுள்ளனர். மறுக்கப்பட்ட காப்பீட்டு சதவிகிதமும் தனியார் துறையில் அதிகம்.

காப்பீட்டு நிறுவனங்கள் கமிஷன் மற்றும் இதர செலவுகள் என்று இரு வகை செலவுகள் செய்கின்றன. LIC தான் பெரும் பிரிமியம் தொகையில் கமிஷனாக 7.07% மற்ற செலவுகளுக்காக 8.56% கொடுக்கிறது; தனியார் நிறுவனங்கள் கமிஷனாக 5.28%மற்ற செலவுகளுக்கு 19.10% கொடுக்கின்றன.

இது போன்ற செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (IRDA) கூறுகிறது, எனவே செலவுகளை குறைக்க காப்பீட்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. 2013-14 ஒரே பொதுத்துறை நிறுவனமான LICயும், 23 தனியார் நிறுவனங்களில் 16 மட்டுமே லாபம் ஈட்டும் நிறுவனங்களாக உள்ளன.

அடுத்த வாரம் பொது காப்பீட்டு துறை பற்றி பார்ப்போம்.

இராம.சீனுவாசன் seenu242@gmail.com

SCROLL FOR NEXT