விவசாயப் பொருட்களை சந்தையிடுவது தொடர்பான சட்டங்களை மாநில அரசு மட்டுமே ஏற்படுத்தமுடியும். ஏபிஎம்சி சட்டம் (Agricultural Produce Market Committee Act) என்பதை எல்லா மாநில அரசுகளும் ஏற்படுத்தி, அதன் மூலமாக விவசாயப் பொருட்களுக்கான ஒழுங்குமுறை (Regulated Marketing Committee, Regulated Market) குழுக்களையும், விற்பனை நிலையங்களையும் உருவாக்கின.
இந்த சந்தைகளின் செயல்பாடுகளில் உள்ள சிக்கல்களால் விவசாயியும் நுகர்வோரும் பாதிக்கப்படுவதால், இது தொடர்பான புதிய சட்டமும் அதன் அடிப்படையில் புதிய சந்தை கட்டுமானமும் இருக்கவேண்டும் என்று மத்திய அரசின் ‘பொருளாதார ஆய்வு அறிக்கை 2014-15’ ஆலோசனை கூறுகிறது.
ஏபிஎம்சி சட்டம்
இச்சட்டம் மூலமாக உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் எல்லாமே விவசாய வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததாகக் குற்றச்சாட்டு உண்டு. இப்போது நாட்டில் 2,477 முதன்மை ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களும் 4,843 உப விற்பனை நிலையங்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் உற்பத்தி செய்யப்பட்ட எல்லா விவசாயப் பொருட்களும் ஒழுங்குமுறை நிலையங்கள் மூலம் விற்கப்படவேண்டும்.
ஏலம்விட இடம், சேமிப்புக் கிடங்கு, வியாபாரத்திற்கான எல்லா வசதிகளும் உள்ள இடமாக இந்த ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் இருக்கவேண்டும். இந்த வசதிகளில் உள்ள குறைபாடுகள் ஒருபுறம் இருக்க, இந்த நிலையங்களில் வசூலிக்கப்படும் பல கட்டணங்கள் பொருட்களின் விலைகளை உயர்த்துவதாக உள்ளன. மேலும் விற்பனை நிலையங்கள் வசூலித்த கட்டணங்கள் அவற்றின் முன்னேற்றதிற்குப் பயன்படுத்தவில்லை.
இங்கே உள்ள அட்டவணையில் 2012-13 ஆண்டில் நெல் மற்றும் கோதுமைக்கு வெவ்வேறு மாநில ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களில் உள்ள கட்டணங்களும் அவற்றால் ஏற்படும் விலை உயர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. (அட்டவணை பார்க்க)
ஒழுங்குமுறை விற்பனை நிலையங் களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் யாவும் மாநில அரசு கருவூலத்திற்கு செல்லாமல், ஒழுங்குமுறை நிலையக் குழுக்களால் செலவு செய்யப்படுகிறது. இதனால் இவற்றின் செயல்பாடுகள் அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிகிறது.
விற்பனை நிலையங்கள் ஒரு புறம் கட்டணங்கள் விதிக்க, வியாபார தரகர்கள் அதிகக் கட்டணங்களை விதிப்பதாகவும் தெரிகிறது. இங்கு உள்ள இடை தரகர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. எனவே, முழு வியாபாரத்தையும் ஒரு சிறிய வியாபாரிகள் குழுவால் கட்டுப்படுத்தமுடியும்.
இந்த ஒழுங்குமுறை நிலையங்கள் எல்லாம் அரசியல் பலம் உள்ள வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விவசாயிகளுக்கு சாத கமாக செயல்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
மாதிரி ஏபிஎம்சி சட்டம்
2003-ல் மத்திய அரசு ஒரு புதிய மாதிரி ஏபிஎம்சி சட்டத்தை உருவாக்கியது. இதன் மூலம் ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் கட்டணங்கள் வசூலிப் பதை ஒழுங்குபடுத்தி, வசூலித்த கட்டணங்களை நிலையங்களின் வசதிகளை மேம்படுத்த செலவிடுவது, புதிய தனியார் விற்பனை நிலையங்களை உருவாக்க உதவுவது, விவசாயிகள் நேரடி விற்பனை செய்ய உதவுவது, உணவு தொழில் மற்றும் வியாபார நிறுவனங்களுடன் ஒப்பந்த விற்பனையை ஊக்குவிப்பது, நிலையங்களில் உண்மை போட்டியை ஏற்படுத்துவது, போன்ற பல குறிக்கோள்களை கொண்டு இந்த மாதிரி சட்டம் உருவாக்கப்பட்டது. விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களில் தான் விற்கவேண்டும் என்ற நிபந்தனை இந்த மாதிரி சட்டத்தில் நீக்கப்பட்டது.
பல மாநிலங்கள் இந்த மாதிரி சட்டத்தின் வெவ்வேறு அம்சங்களை எடுத்துக் கொண்டாலும், யாரும் முழுமையாக இச்சட்டத்தை நிறைவேற்றவில்லை. சந்தையில் வசூலிக்கப்படும் கட்டணங் களை இச்சட்டம் பெருமளவில் குறைக்க வில்லை. நாடு முழுவதும் ஒரே விவசாய சந்தையாக மாறக்கூடிய ஒரு நிலையை இந்த மாதிரி சட்டமும் ஏற்படுத்தவில்லை.
விவசாயப் பொருட்களுக்கான தேசியச் சந்தை
மாதிரி ஏபிஎம்சி சட்டத்தை எல்லா மாநிலங்களும் முழுமையாக நிறை வேற்றவில்லை என்றால், இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளை பயன்படுத்தியாவது புதிய விவசாயக் சந்தையிடல் முறையை உருவாக்கவேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
விவசாயம், ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் வியாபாரம், சந்தை எல்லாமே மாநில அரசு பட்டியலில் உள்ளது, அதாவது, இவை தொடர்பான சட்டங்களை மாநில அரசு மட்டுமே ஏற்படுத்தமுடியும். அதே போன்று தேசிய அளவிலான சந்தை, வியாபாரம், உணவு பங்கீடு போன்றவற்றில் மத்திய மாநில அரசுகள் இரண்டிற்கும் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் உள்ளது.
இதனை பயன்படுத்தி, மத்திய அரசு விவசாய பொருட்கள் சந்தை தொடர்பான சட்டம் இயற்றினால், அது மாநில அரசுகளின் ஏபிஎம்சி சட்டத்தை நிறுத்திவிடும். ஆனால் அந்த முயற்சி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது, என்பதால், இதில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பை பெறவேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு உண்டு என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
2014 ஆண்டு மத்தியில் பதவியேற்ற பாரதிய ஜனதா அரசு, தேசிய விவசாய சந்தையை உருவாக்கவேண்டும் என்று தனது முதல் நிதி நிலை அறிக்கை 2014-15-ல் தெரிவித்தது. இது சாத்தியமா?
ஒழுங்குமுறை விற்பனை நிலையங் களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் யாவும் மாநில அரசு கருவூலத்திற்கு செல்லாமல், ஒழுங்குமுறை நிலையக் குழுக்களால் செலவு செய்யப்படுகிறது. இதனால் இவற்றின் செயல்பாடுகள் அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிகிறது.
seenu242@gmail.com