தொழில்முனைவோர் உருவாக முன்மாதிரிகள் (Role Models) தேவை என்று கடந்த வாரம் ``தி இந்து’’ நேர்காணலில் ஸ்மார்ட் கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜன் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல தொழில்முனைவோர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்தத் தலைமுறையில் சில வெற்றிகரமானவர்களை தெரிந்து கொள்ளலாமே!
மேக் மை டிரிப் நிறுவனர் தீப் கர்லா
ஐஐஎம் அகமதாபாத்தில் படித்தவர். ஜி.இ. கேபிடல், ஏபிஎம் ஆம்ரோ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியவர். அமெரிக்காவில் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். அதாவது அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் செய்யும் நபர்கள் விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்வதற்காக இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்.
அதன் பிறகு 2005-ம் ஆண்டு இந்தியாவிலும் செயல்பாடுகளைத் தொடங்கினார். இப்போது விமானம் மட்டுமல்லாமல், பஸ், ரயில், கார் உள்ளிட்டவற்றுக்கும் மேக் மை டிரிப் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது.
ஜொமேடோ நிறுவனர் தீபேந்தர் கோயல்
2005-ம் ஆண்டு ஐஐடி டெல்லியில் படித்தவர். அதன் பிறகு பெயின் அண்ட் கம்பெனி நிறுவனத்தில் வேலை பார்த்தவர். அப்போது ஓட்டல்களில் மெனு கார்டு பார்ப்பதில் பல நேரம் செலவாகி இருக்கிறது. அதை பார்த்தபிறகு மெனு கார்டு, ஓட்டல் விவரம் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும் இணையதளம் ஏன் இருக்கக் கூடாது என்று ஆரம்பித்ததுதான் ஜொமேடோ.
இப்போது 22 நாடுகளில் உள்ள முக்கியமான ஓட்டல்களின் தகவல்களை தருகிறது இந்த நிறுவனம். வரும் மார்ச் மாதம் முதல் ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யவும் திட்டமிட்டு வருகிறது.
புக்மைஷோ நிறுவனர்கள் ஆஷிஷ் ஹேம்ரஞ்சனி, ராஜேஷ் பால்பாண்டே, பரிக்ஷித் தர்.
நிறுவனர்கள் மூவரும் மும்பையில் இருக்கும் சைடன்ஹாம் நிர்வாக கல்லூரியில் படித்தவர்கள். ஆஷிஷ் தென் ஆப்ரிக்காவில் இருக்கும் போது ரக்பி விளையாட்டு போட்டிக்கான டிக்கெட் விளம்பரங்களை ரேடியோவில் கேட்டிருக்கிறார். அங்கிருந்த நாட்கள் முழுவதும் இந்த டிக்கெட் விற்பனையே நினைவில் இருந்திருக்கிறது.
இந்த ஐடியாவை நண்பர்களிடம் சொல்லி, அனைவரும் வேலையை விட்ட பிறகு 1999-ம் ஆண்டு சொந்தமாக டிக்கெட் விற்பனை நிறுவனம் ஆரம்பித்தார்கள். அப்போது போன் மற்றும் இணையம் மூலமாக விற்றிருக்கிறார்கள்.
ரெட்பஸ் நிறுவனர்கள் பனீந்திர ரெட்டி சாமா, சரண் பத்மராஜூ, சுதாகர்
நிறுவனர்கள் மூன்று பேரும் பிட்ஸ் பிலானியில் ஒன்றாகப் படித்தவர்கள், பெங்களூருவில் ஒரே அறையில் தங்கியிருந்தபோதிலும் வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தார்கள். பனீந்திர சாமா பெங்களூருவில் மென்பொருள் பணியில் இருப்பவர்.
2005-ம் ஆண்டு தீபாவளி அன்று பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் செல்ல பஸ் டிக்கெட் கிடைக்கவில்லை. அப்போது பஸ் கிடைக்காமல் திண்டாடவே ரெட்பஸ் என்னும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் நிறுவனத்துக்கு ஐடியா கிடைத்திருக்கிறது. இப்போது சாமா ரெட் பஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.
பிளிப்கார்ட் நிறுவனர்கள் சச்சின் பன்சால், பின்னி பன்சால்
இருவரும் ஐஐடி டெல்லியில் படித்தவர்கள். இருவரும் அமேசான் நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள். தற்போது சொல்யூஷன் ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் கல் ராமனிடம் ஆலோசனை கேட்ட போது, அமேசான் மாடலை அப்படியே இந்தியாவில் பிரதி எடுக்கவும் என்று கூற, பிளிப்கார்ட் 2008-ம் ஆண்டு உருவானது.
இடைப்பட்ட காலத்தில் லெட்ஸ்பை டாட் காம், மைந்திரா உள்ளிட்ட சில நிறுவனங்களை கையகப்படுத்தி இருக்கிறது. 15,000 நபர்கள் வேலை செய்யும் இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 1,100 கோடி டாலர் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.