பண்டைக் காலத்தில் அரசன் நாட்டுக்குத் தலைவர், நாட்டை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய காவலர்.
இன்றையச் சூழலில் உங்கள் மேலதிகாரி உங்கள் அலுவலகத்தின் தலைவர். உங்கள் முதன்மை செயல் அதிகாரி. உங்கள் நிறுவனத்தின், அமைப்பின் தலைவர். இவர்கள் உங்கள் அலுவலகத்தை, நிறுவனத்தைச் சந்தைப் போட்டியாளர்களை மீறி முன்னேறச் செய்ய வேண்டும்.
அந்தக் காலத்தில் அரச ரகசியங்களும் நடைமுறை கோட்பாடுகளும் இருந்தன. அரசனாகவே முன் வந்து அவற்றைச் சொல்லும் வரை அவற்றில் அமைச்சர் தலையிடக் கூடாது என்று திருவள்ளுவர் சொல்வது தற்கால அலுவலக இரகசியங்களுக்கும் பொருந்தும்!
ஒட்டுக் கேட்காதே
நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் வெளிநாடுகளில் மேலும் சில கிளைகள் திறக்கத் திட்டமிட்டு இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதைக் குறித்து உங்கள் மேலாளர் உங்கள் தலைமை அலுவலக அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றார், நீங்கள் அறைக்கு வெளியே இருக்கின்றீர்கள்.
உங்களுக்கு எந்தெந்த நாடுகளில் புதுக்கிளைகள் வரப்போகின்றன எனத் தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பது இயற்கை. ஆனால் அதற்காக அறையினுள் செல்ல நேரும் பொழுது தேவைக்கதிகமான நேரம் நிற்பதும், மூக்கை நுழைப்பதும் தவறு. மேலும் உயர் அதிகாரிகள் வெளியில் வந்து ஏதேனும் பேசிக் கொண்டாலும், பேச்சு கேட்கக்கூடிய தூரத்தில் நின்று கொண்டு என்ன பேசுகிறார்கள் என்று கவனிப்பதும் தவறு. நீங்கள் ஒட்டுக்கேட்பது மேலதிகாரியின் பார்வையில் உங்களை தாழ்த்துவது மட்டும் நிச்சயம்!
துருவிக் கேட்காதே
உயரதிகாரிகளின் கூட்டம் முடிந்ததும், உங்கள் மேலதிகாரியே வந்து உங்களிடம் மூன்று கிளைகள் திறக்க இருப்பதாகச் சொல்லக் கூடும். உடனே சிலர், ஆஹா அவரே தான் சொல்லி விட்டாரே என்று எங்கே திறக்கப்போகின்றோம், எப்பொழுது, எவ்வளவு பெரியது என்று எல்லாம் கேட்டு விடுவார்கள். உங்களிடம் எப்பொழுது இதைப்பற்றிய மேல் விபரங்களைச் சொல்ல வேண்டும் என்பதும், எவ்வளவு விரிவான விவரங்களைச் சொல்ல வேண்டும் என்பதும் உங்கள் மேலதிகாரிக்குத் தெரியாதா என்ன? நீங்கள் அதிகம் விசாரிப்பது உங்களது அதிகப்பிரசங்கித்தனமாகத் தான் கருதப்படும்.
சொல்லிவிட்டால் கேட்டுக்கொள்
எடுத்த பணியில் உங்களுக்கும் பங்கு உண்டென்றால் உங்களிடம் விபரத்தைத் தக்க சமயத்தில் மேலதிகாரியே சொல்வார்; அப்பேச்சை அவரே தொடங்கட்டுமே! அப்பொழுது ஆர்வத்துடன் உற்சாகமாகக் கேளுங்கள், பேசுங்கள். அதுவரை இரகசியங்கள் இரகசியங்களாக இருப்பது எல்லோருக்கும் நன்மை பயக்கும். முக்கியமாகப் பணியாளர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்வதில் தனி ஆர்வம் காட்டாதீர்கள்! எச்சரிக்கையுடன் இருங்கள்.
பழந்தமிழ்ப் புலவரின் குறள் இதோ.
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை
- சோம.வீரப்பன்
somaiah.veerappan@gmail.com