வணிக வீதி

பங்குச் சந்தை குறித்த சந்தேகங்கள் தேவையா?

செய்திப்பிரிவு

இந்தியர்களின் சேமிக்கும் பழக்கம் உலகப் பிரசித்தி பெற்றது. சேமிப்பதில் நமக்கு இணையானவர்கள் சீனர்கள் மற்றும் சில ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. ஆனால், இப்படி சேமிக்கப்படும் பணத்தை முதலீடு செய்வதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமும், போக வேண்டிய தூரமும் அதிகம் உள்ளன. குறிப்பாக பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டு முறைகளைப் பயன்படுத்துவதில் இருக்கும் தயக்கங்களை நாம் எந்த அளவுக்கு, எத்தனை விரைவாகக் களைகிறோமோ அந்த அளவுக்கு நமக்கும் சரி, நாட்டுக்கும் சரி நல்லது.

அமெரிக்காவில் 50 சதவீதம்

இன்றைய அளவில் இந்தியாவில் பங்குச் சந்தையில் ஈடுபட்டு முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிக பட்சம் 3 சதவீதமாக உள்ளது. இது மிக, மிகக் குறைவு. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இது 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. நம்மைப் போன்ற வளரும் நாடுகளான பிரேசில் மற்றும் சீனாவில் கூட இந்த எண்ணிக்கை நம்மை விட பல மடங்கு அதிகம்.

ஏன் அவர்களெல்லாம் பங்குச் சந்தை முதலீட்டு முறையை பரந்த அளவில் ஆதரிக்கிறார்கள்? ஆதாரமான காரணம் ஒன்றுதான் - அந்த ஒரு முதலீட்டு முறைதான் நீண்டகால நோக்கில் பணவீக்க சதவிகிதத்தை விட அதிக வளர்ச்சி தரக்கூடிய முறை. எந்த ஒரு சந்தைப் பொருளாதார நாட்டிலும் இந்த உண்மை பொருந்தும். இந்தியாவிற்கும் இது கண்டிப்பாகப் பொருந்தும். மேலும் இந்தியாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் சரி, வரிச் சலுகை அதிகமாக உள்ள முதலீட்டு முறைகள் பங்குச் சந்தை சார்ந்தவை தாம்.

தயக்கம்தான் காரணம்

அப்படியிருக்கையில் இந்தியாவில் பங்குச் சந்தை முதலீடுகளின் சதவிகிதம் ஏன் குறைவாக உள்ளது? இதற்கு அடிப்படைக் காரணம், நமது மக்களிடம் இருக்கும் சில சிந்தனைத் தளைகள். அதில் முதலாவது தொலைநோக்கின்மை. முதலீடு என்று வரும் பொழுது ஒரு வருடம், இரண்டு வருடங்கள் தாண்டி யோசிக்க நாம் மிகவும் தயங்குகிறோம். ஆயுள் காப்பீடு எடுத்த பின்னும், அவசர காலத்திற்கு ஒரு தொகை சேமித்த பின்னும், மற்ற சேமிப்புகளை தொலை நோக்கோடு நீண்ட கால முதலீடாக செய்வதே சரி என்ற புரிதல் நமக்கு எளிதில் கைகூட மாட்டேன் என்கிறது. ஓய்வூதியத்திற்காக, குழந்தைகளின் மேற்கல்விச் செலவிற்காக, திருமணச் செலவிற்காக என்று திட்டமிடக் கூடிய செலவுகள் எதிர்காலத்தில் இருப்பதால், இவற்றிற்காக நாம் தொலைநோக்கோடு முதலீட்டுத் திட்டங்களைச் செய்ய வேண்டும்.

பங்குச் சந்தையில் அபரிமித வளர்ச்சி

இரண்டாவது , மற்ற பாரம்பரியமான முதலீட்டு முறைகளில் அதீத நம்பிக்கை வைத்திருப்பது. முக்கியமாக மண் மற்றும் பொன். இவற்றோடு, வங்கி வைப்பு நிதிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். சமீப வருடங்களில் சில தருணங்களில் வீடு/நிலம் சார்ந்த முதலீடுகள் பெரும் லாபம் தந்திருக்கின்றன என்பது உண்மை. தங்கமும் சில காலம் ஏறுமுகத்தில் இருந்து நல்ல லாபம் கொடுத்திருக்கிறது. வங்கி வைப்பு நிதி தரும் நிச்சயமான வட்டி விகிதம் நமக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால், இம்மூன்றையுமே தொலை நோக்கோடு பார்த்தால், பங்குச் சந்தை முதலீட்டு முறையை விட குறைவாகவே முதலீட்டாளர்களின் வளத்தினைப் பெருக்கியிருக்கின்றன. வீடு/நிலம் சார்ந்த முதலீடுகள் கடந்த பத்தாண்டுகளில் பெரிதும் வளர்ந்திருப்பது உண்மைதான்.

ஆனால் வரலாற்று நோக்கோடு பார்த்தால், இது ஒரு விதி விலக்கான வளர்ச்சியே என்று தெரியும். தங்கம், வைப்பு நிதி ஆகியவற்றைப் பார்த்தால், கடந்த 15 வருடங்களில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், வரி பிடித்தம் போக, வைப்பு நிதி 2.26 லட்சம் ரூபாயாகவும், தங்கம் 4.21 லட்சம் ரூபாயாகவும் வளர்ந்திருக்கும். ஆனால் பங்குச் சந்தை முதலீடு (சென்செக்ஸ் குறியீட்டளவில் பார்த்தால் கூட) 5.85 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும் - அதாவது சுமார் ஆறு மடங்கு! நாடு வளர வளர, பொருளாதாரம் உயர உயர, பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளே மற்ற முதலீடுகளை விட செழித்து வளரும் என்பது உலகளாவிய அளவில் உண்மை. இதற்கு இந்தியாவும் விலக்கல்ல.

ஸ்திரமான முன்னேற்றம்

நமது சிந்தையில் இருக்கும் மூன்றாவது தளை, நிலையின்மை (volatility) குறித்த புரிதலின்மை. இது மேற்சொன்ன முதல் சந்தேகத்தோடு தொடர்பு கொண்டது. குறுகிய கால நோக்கோடு பார்க்கையில், பங்குச் சந்தைக் குறியீடு மேலும் கீழுமாக போயிருப்பது அச்சமூட்டுவதாக இருப்பது இயல்பானதே.

ஆனால், சற்றே பின்னோக்கி நீண்ட கால வரலாற்றைப் பார்த்தால் ஏறத்தாழ நேர்க்கோடாகவே மேல் நோக்கிச் செல்லும் படமே நமக்குத் தெரியும். ஒரு வகையில் இது படகில் பயணிப்பது போல - பக்கத்தில் இருந்து பார்த்தால் அலையில் மேலும் கீழும் ஆடும் படகுதான் தெரியும். தள்ளி நின்று பார்த்தால்தான் அது நிலையாக முன்னகர்ந்து கொண்டிருப்பது தெரியும்.

தேவையற்ற அவநம்பிக்கை

நான்காவது விஷயம் பங்குச் சந்தை செயல்பாடுகளின் மீது ஒரு வித அவநம்பிக்கை. எழுபது எண்பதுகளில் வளர்ந்தவர்களிடையே அதிகமாகவும், தொண்ணூறுகளில் வளர்ந்தவர்களிடம் குறைவாகவும் இது காணப்படுகிறது. இன்றைய அளவில், இந்த அச்சமும் அவநம்பிக்கையும் தேவையற்றது. இந்திய பங்குச் சந்தை உலக அளவில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் சந்தைகளில் ஒன்று. இது குறித்து பயப்படத் தேவையில்லை.

சுருக்கமாகச் சொல்வதென்றால், தாம் சேமிக்கும் பணத்தை தமக்காக திறம்பட உழைக்க வைப்பது எப்படி என்பதைப் புரிந்து கொண்டு, பங்குச் சந்தையில் தமக்குத் தேவையான விதத்தில் முதலீடு செய்பவர்கள், தாம் விரும்பும் பொருளாதார வளத்தை அடைகிறார்கள்; மற்றவர்கள் பின் தங்கி இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். இதுதான் உண்மை.

முதலீடு செய்வதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமும், போக வேண்டிய தூரமும் அதிகம் உள்ளன. குறிப்பாக பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டு முறைகளைப் பயன்படுத்துவதில் இருக்கும் தயக்கங்களை நாம் எந்த அளவுக்கு, எத்தனை விரைவாக களைகிறோமோ அந்த அளவுக்கு நமக்கும் சரி, நாட்டுக்கும் சரி நல்லது.

- ஸ்ரீகாந்த் மீனாட்சி
srikanth@fundsindia.com

SCROLL FOR NEXT