எந்தவொரு வெற்றிகரமான தொழிலுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குபவர்கள் பணியாளர்கள்தான். மிகப் பெரிய நிறுவனங்கள் உருவானதெல்லாம் மிகச் சிறந்த பணியாளர்கள் ஒன்று சேர்ந்ததால்தான்.
அதேபோல பெரிய நிறுவனங்கள் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கின்றன. தங்கள் நிறுவன கலாச்சாரத்துக்கு அவர்கள் பொருந்துவார்களா என்பதை ஆராய்ந்து அதன் பிறகே தேர்ந்தெடுக்கின்றன.
``நல்லவர்’’ என்பதற்கும் ``சரியானவர்’’ என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.
தொழில்முனைவோர்கள் பெரும்பாலும் ஆரம்பத்தில் பரவாயில்லை என்கிற ரீதியிலான நபர்களைத் தேர்வு செய்வர். பிறகு நல்லவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுகிறது. நல்லவர்களைத் தேடுவது மட்டுமே போதுமானதல்ல.
உங்களது நிலையிலிருந்து ஒருபடி மேலே நிறுத்தி அத்தகையோரை தேடுங்கள். சரியான ஊழியர் ஒரு நிறுவன வெற்றிக்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருப்பார்.
கற்பனையில் மூன்று பேர் கொண்ட ஒரு தொடக்க நிலை செயல்படுவதாக நினைத்துப் பாருங்கள். அன்றைய பணியை அன்றைக்கே முடிக்க வேண்டும் என்ற உறுதியில் நேரம் காலம் தெரியாமல் உழைக்கின்றனர். பணியாளர்கள் இல்லாததால் தொழில் முனைவோர் மூவருமே நேரம் பார்ப்பதில்லை. அன்றைய பணியை அன்றே முடிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இத்தகைய சூழலில் அந்நிறுவனத்தில் ஒரு நல்ல பணியாளர் நியமிக்கப்படுகிறார். அவர் 8 மணி நேரம் பணியாற்றுவதற்கு பழக்கப்பட்டவர். அத்தகையவர் அந்நிறுவனத்தில் வந்தால் காலம், நேரம், கணக்கின்றி பணிபுரிவது அவருக்கு மிகப் பெரும் அசவுகரியத்தை அளிக்கும். ஊழியரின் நிலையை நிறுவனம் உணரவில்லை.
சிறந்த பணியாளருக்கு இந்நிறுவனம் ஏற்றதாக அமையவில்லை. ஊழியரும், நிறுவனமும் பரஸ்பரம் பயன் பெறும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும். சரியான பணியாளர் நிறுவனத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பார். அவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் கண்காணிக்க வேண்டிய அவசியமிருக்காது. எனவே உங்கள் நிறுவனத்துக்குத் தேவை நல்ல பணியாளரா அல்லது சரியான பணியாளரா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இரண்டும் அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் ஒருமித்த சிந்தனையோடு பணிபுரிந்தால் அதை மாஸ்டர்மைண்ட் கூட்டணி என்பர்.
இத்தகைய கூட்டணியை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. மனிதர்களிடையே ஏற்படும் வெறுப்புகள், போட்டி, பொறாமை உள்ளிட்ட அனைத்தும் இக்குழுவினரிடம் மறைந்து போகும்.வெற்றிகரமான தொழில் நிறுவனங்களின் பின்னணியில் இதுபோன்ற மாஸ்டர் மைண்ட் கூட்டணி இருந்துள்ளதைப் பாருங்கள். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியோடு கைகோர்த்தவர்கள் நந்தன் நிலகேணியும், கிரிஷ் கோபாலகிருஷ்ணனும்தான்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸுக்கு ஸ்டீவ் பால்மர் கிடைத் துள்ளார். இதுபோன்ற வலுவான மாஸ்டர் மைண்ட் கூட்டணி அமைந்துவிட்டால் தொழில் முனைவோர் அந்த தொழில் சாம்ராஜ்யத்தையே தனது கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால் தான் தேர்ந்தெடுத்த குழு ஒற்றுமையாக பணி புரிவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மாஸ்டர் மைண்ட் குழுவை உருவாக்குவது எப்படி? வரும் வாரங்களில்…
கே.சுவாமிநாதன்
aspireswaminathan@gmail.com