ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தமட்டில் இந்திய சந்தை மீது பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகுந்த நாட்டமுண்டு. வெற்றி பெற்ற நிறுவனங்கள் குறைவாக இருந்தாலும், இந்திய சந்தை மீது எப்போதுமே நாட்டம் இருக்கும். இதுவரையில் இந்திய சந்தையை விட்டு வைத்திருந்த சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனம் தற்போது இந்தியாவில் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது.
2019-ம் ஆண்டில் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கப் போவதாகவும் இதற்காக தனி ஆலையை அமைக்க உள்ளதாகவும் எஸ்ஏஐசி அறிவித்துள்ளது. சீனாவில் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி ஆலை அமைப்பது, எத்தகைய கார்களை அறிமுகப்படுத்துவது என்பது தொடர்பான உத்தி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் இறுதி செய்துவிட்டதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இனி எந்த இடத்தில் ஆலையை அமைக்கப் போகிறது என்ற தகவல்தான் பாக்கி. மற்ற அனைத்து பணிகளையும் முடித்துவிட்டதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் துணை நிறுவனமாக இந்தியாவில் செயல்படும் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவராக ராஜீவ் சாபா நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் செயல் இயக்குநராக பி. பாலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆட்டோமொபைல் துறையில் மிகுந்த அனுபவம் மிக்கவர் பாலேந்திரன். இவர் 18 ஆண்டுகள் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இந்திய ஆட்டோமொபைல் சந்தையைப் பற்றி நன்கறிந்தவர்.
இந்தியாவில் மேற்கொள்ள உள்ள முதலீடு குறித்து விவரம் எதையும் இந்நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்திவிட்ட ஜெனரல் மோட்டார்ஸின் ஹலோல் ஆலையை வாங்கி அங்கிருந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக இத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாலேந்திரன் ஏற்கெனவே ஜெனரல் மோட்டார்ஸில் பணிபுரிந்தவர் ஆதலால் இதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. அல்லது புதிய ஆலையை அமைக்கப்போகிறதா என்ற விவரமும் வெளியிடவில்லை.
இந்தியாவில் எம்ஜி என்ற பிராண்டு பெயரில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத வாகனங்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் ஸ்போர்ட்ஸ் கார் பிராண்டான எம்ஜி மிகவும் பழமை வாய்ந்த நிறுவனமாகும். 1924-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தை எஸ்ஏஐசி கடந்த 2008-ம் ஆண்டு வாங்கியது.
டிராகனின் வரவு இந்திய கார் சந்தையில் கடும் போட்டியை உருவாக்கும். போட்டி அதிகரிக்கும்போதுதான் சிறந்த தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். அந்த வகையில் போட்டி நல்லது.!