வணிக வீதி

சபாஷ் சாணக்கியா: அந்தப் பக்கத்து நியாயம்..!

சோம.வீரப்பன்

நண்பர் ஒருவர் தனது நான்கு வயது மகனுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.' உனக்கு நான் இரண்டு சாக்லேட் தருகிறேன். அம்மா இரண்டு சாக்லேட் தருகிறாள். அப்படி என்றால், உன்னிடம் மொத்தம் எத்தனை சாக்லேட் இருக்கும்?' என்று மகனிடம் அன்பாய் கேட்டார். அவன் யோசித்தான். விரலை எல்லாம் நீட்டி, மடக்கிப் பார்த்தான். `ஐந்து சாக்லேட் ' என்று பதில் வந்தது!

சமையலை விட்டு விட்டு ஓடி வந்த அம்மா, அப்பாவிடம், `நீங்கள் ஒன்றுக்கும் லாயக்கில்லை.சரியாகச் சொல்லிக் கொடுங்கள்'எனக் கடிந்து கொண்டார். பின்னர் அவனிடம்,' சமர்த்து, நீ சொல்லுடா கண்ணா, சரியாக கூட்டிச் சொல் ' என, அவன் கவனமாக யோசித்தான். ஆனால், `மொத்தம் ஐந்து சாக்லேட்' என்றே மீண்டும் சொன்னான்!

அம்மாவுக்குப் பெரும் ஏமாற்றம்.கவலையுற்ற இருவரும் எப்படிடா?எப்படிடா? எனக் கேட்கக், கத்த, அதட்ட, மிரண்டு போனவன், தனது பாக்கெட்டில் கையை விட்டான்! `எடுடா கையை. முதலில் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்' என இருவரும் சேர்ந்து பயமுறுத்த, அவன் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு சாக்லெட்டை எடுத்துக் காண்பித்து, `என்னிடம் இப்ப ஒன்று இருக்கிறது. நீங்கள் இரண்டு, இரண்டு கொடுத்தால் மொத்தம் ஐந்து தானே?' எனப் பரிதாபமாகக் கேட்டான்!

தம்பி,எங்கும் இந்தப் பிரச்சினை தானே? குழந்தை என்ன நினைத்துக் கொண்டு ஐந்து எனச் சொன்னது என அந்தப் பெற்றோருக்குத் தெரியாது! அதே போல, பல தருணங்களில், நாம் பலரைத் தவறானவர்கள் எனத் தவறாகப் புரிந்து கொண்டு விடுகிறோம்!

எனது கோவை நண்பர் ஒருவர். பொறியியல் பட்டதாரி. ஏடிஎம் இயந்திரங்கள் நம் நாட்டில் உபயோகத்திற்கு வரத் தொடங்கிய காலம் அது. அவரே ஆராய்ச்சி செய்து ,குறைந்த விலையில் ஒரு புது ஏடிஎம்ஐ உருவாக்கி இருந்தார். பொருள் அரியதாக இருந்தாலும் வாங்க ஆள் வேணுமே, தேடணுமே! சென்னையில் ஒரு பெரிய வங்கியின் நாணயமான ஒரு பொது மேலாளரை அணுகினார்.

அவரது மென்பொருள் புதியது, உபயோகிக்க எளியது.ஒப்பந்தம் கிடைத்து விட்டால் பல லட்சங்கள் லாபம்.எனவே எதிர்பார்ப்பில், பதற்றத்தில் இருந்தார்!

உள்ளே சென்றதும், அதிகாரி எழுந்து நின்று புன்முறுவலுடன் வரவேற்றார். நண்பரிடம் விபரமெல்லாம் பொறுமையாகக் கேட்டார். நண்பருக்கு வியப்பு.மகிழ்ச்சி. படபடவென அதன் நன்மைகளைப் பட்டியலிட்டார். எங்கே இதையெல்லாம் கேட்காமல் முடிவெடுப்பாரோ என்கிற அச்சம் விலகியது.

அவரிடம் வாங்குவதால் வங்கிக்கு எத்தனை கோடி லாபம் எனக் கணக்கிட்டு ஒரு கடிதமாகவும் கொடுத்து விட்டார்! ஒரு மாதம் எதிர்பார்ப்புடன் கழிந்தது. ஆனால் அவருக்கு ஆர்டர் கிடைக்கவில்லை! நண்பருக்குப் பெருத்த ஏமாற்றம்! தரத்தில், விலையில், மற்ற வகையில் அவரது ஏடிஎம் சிறப்பாக இருந்தும், நேர்மையான திறமையான அதிகாரி இருந்தும், ஏன் அது கை விட்டுப் போனதென்பது புரியாத புதிராக இருந்தது! ஆனால் யாரிடம்,என்ன சொல்லி அழுவது?

நண்பர் பார்ப்பவர்களிடம் எல்லாம் அந்த அதிகாரியை நன்றாய் திட்டித் தீர்த்தார். பின்னர் மூன்று மாதங்கள் கழித்து ஒரு கல்யாண வீட்டில் இருவரும் சந்திக்க வேண்டியதாயிற்று. நம்ம நண்பர் இவரிடம் நமக்கென்ன பேச்சு எனக் கண்டும் காணாதது போல ஓடினார். ஆனால் அவரோ இவரிடம் வலிய வந்து தனியே கூட்டிச் சென்றார்.

`என் மேல் உங்களுக்குக் கோபம் நியாயம் தான். நீங்கள் சென்ற பின் என் மேலதிகாரியுடன் பேசினேன். அவர் எவ்வளவோ பெரிய நிறுவனங்கள் இருக்கும் பொழுது ஊர் பேர் தெரியாத நிறுவனத்தில் வாங்கினால், விலை குறைவாக இருந்தாலும் சந்தேகிப்பார்கள். பெரிய நிறுவனத்தின் இயந்திரம் கெட்டுப் போனால் நம்மை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

ஆனால் சிறிய நிறுவனத்தின் நூற்றில் ஒன்று கெட்டாலும் நமக்குத் தான் தலைவலி, பதில் சொல்லி மாளாது என்று மறுத்து விட்டார். அதுமட்டுமில்லை நான் இன்னும் 13 மாதங்களில் ரிடையர் ஆகணும்.கடைசி காலத்தில் யாருங்க ரிஸ்க் எடுக்கிறது?' என வருத்தத்துடன் விளக்கினார்.

அண்ணே, நம்மில் பலரும் நமக்கு வேலை ஆக வேண்டுமெனில் நமது பக்கத்து நியாயத்தை மட்டும் யோசிக்கிறோம்.ஆனால் எதிராளியின் பார்வையில் யோசித்து அதற்குண்டான பதில்களுடன் ஏற்பாடுகளுடன் சென்றால் தானே பலன் கிடைக்கும்?

'ஆகாயத்தில் பறக்கும் பறவைகளின் வழியைக்கூட அறிந்து விடலாம். ஆனால் அதிகாரிகளின் எண்ணப் போக்கை அறிய முடியாது' என்று சாணக்கியர் சும்மாவா சொன்னார்!

- somaiah. veerappan@gmail. com

SCROLL FOR NEXT