வணிக வீதி

ராயல் என்பீல்டின் `இமாலயன் ஒடிசி 2017’

செய்திப்பிரிவு

சாலை வழிப் பயணத்துக்கும் சாகச பயணத்துக்கும் ஏற்ற மோட்டார் சைக்கிள் எது என்றால் அது ராயல் என்பீல்டாகத்தான் இருக்கும். இப்போது கார் வாங்குவதை விட ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்கை வாங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். சாகச பிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு மலையேற்ற நீண்ட தூர பயணங்களுக்கு ராயல் என்பீல்டு நிறுவனமே ஏற்பாடு செய்கிறது.

அந்த வகையில் 14-வது ராயல் என்பீல்டின் இமாலய ஒடிசி பயணம் கடந்த வாரம் தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் தொடங்கியது.

மொத்தம் 2,400 கி.மீ. தூரம் கொண்ட இந்த 18 நாள் பயணத் திட்டத்தில் மொத்தம் 61 சாகசப் பிரியர்கள் தங்களது அபிமான ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் சகிதமாக கலந்து கொண்டுள்ளனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் பங்கேற்கும் குழுவில் 6 பெண்களும் இடம்பெற்றுள்ளனர் என்பதுதான்.

ஜூலை 12-ம் தேதி காஷ்மீரின் லே பகுதியை அடைந்த இக்குழுவினர் கார்துங் லா கனவாய் பகுதியை ஜூலை 14-ம் தேதி சென்றடைந்தனர். கெலாங் மற்றும் காஸா பகுதி வழியாக நர்கண்டா பகுதியை இம்மாதம் 22-ம் தேதி இக்குழு சென்றடையும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக ஜூலை 23-ம் தேதி இறுதி இலக்கான சண்டீகரை அடைகின்றனர். சாகச பிரியர்கள் பயணிக்கும் வழித் தடத்தில் உச்ச பட்ச வெயிலும் இருக்கும், உறை பனியும் இருக்கும். இமயமலையில் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் இவர்களுக்குக் கிடைக்கும்.

SCROLL FOR NEXT