வணிக வீதி

ஜிஎஸ்டி வரவு: சொகுசு கார்களின் விலை சரிவு!

செய்திப்பிரிவு

இன்று நாடு முழுவதும் பேசப்படும் ஒரே விஷயம் ஜிஎஸ்டி. பொருளின் விலை கூடினாலும், குறைந்தாலும் அதற்கு சொல்லப்படும் ஒரே காரணம் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியாகும்.

ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப்பிறகு நாட்டில் எந்த பொருள்களின் விலை குறைந்ததோ தெரியவில்லை ஆனால் ஆட்டோமொபைல் துறையில் விலை குறைப்பு நிகழ்ந்துள்ளது. இருசக்கர வாகனம் முதல் கார்கள் வரையிலான விலை குறைப்பு வாகன பிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வசதி படைத்தவர்களை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சொகுசு கார்கள் மற்றும் சூப்பர் கார்களின் விலை பெருமளவு குறைந்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான ஒரு முறை பதிவுக்கட்டணத்தை மஹாராஷ்டிர மாநில அரசு 2 சதவீதம் உயர்த்தியது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஆக்ட்ராய் மற்றும் உள்ளூர் வரி விதிப்புகள் நீக்கப்பட்டதால் ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சொகுசு கார்கள் மற்றும் சூப்பர் கார்களுக்கான அதிகபட்ச வரி அளவை ரூ. 20 லட்சம் என மத்திய அரசு நிர்ணயித்தது. இதனால் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கார்களின் விலை ரூ. 1 கோடி வரை குறைந்துள்ளது.

உதாரணமாக லம்போர்கினியின் புதிய ரக மாடலான அவென்டேடார் ரோட்ஸ்டார் எல்பி 700-4 மாடல் மும்பை விற்பனையக விலை ரூ. 5.64 கோடியாகும். முன்பு இந்த மாடல் காருக்கு 20 சதவீத வரி சாலை வரி (ரூ. 1.13 கோடி மற்றும் 4.5 சதவீத ஆக்ட்ராய் ரூ. 25.38 லட்சம் ஆகியன விதிக்கப்பட்டு இக்காரின் விலை ரூ. 7.2 கோடியாக இருந்தது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தக் காருக்கான வரி ரூ. 20 லட்சம் மட்டுமே. இதனால் இக் காரின் விலை ரூ. 1.18 கோடி குறைந்துள்ளது. இதன் மூலம் ஜாகுவார் எக்ஸ்ஜே மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் இ-கிளாஸ் காரை கூடுதலாக வாங்கிவிட முடியும். இதேபோல புகாடி வெரியோன் காரின் விலை ரூ. 12 கோடி. ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்தக் காரின் விலை ரூ. 2.74 கோடி குறைந்துள்ளது.

கார்களுக்கான காப்பீடு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு வேளை லம்போர்கினி காருக்கான காப்பீட்டு தொகை ரூ. 10 லட்சமாக இருப்பின் தற்போது ரூ. 10.30 லட்சம் மட்டுமே கூடுதலாக செலுத்த வேண்டும். இது சொகுசு கார்களை வாங்குபவர்களுக்கு பெரிய பாதிப்பாக இருக்காதுஜிஎஸ்டி வரி விதிப்பால் பெரும் பணக்காரர்களுக்கு சாதகம் என்ற கூற்றை நிரூபிக்கும் வகையில் சொகுசு கார்கள் மற்றும் சூப்பர் கார்களின் விலை குறைந்துள்ளது.

SCROLL FOR NEXT