வணிக வீதி

வெளிநாட்டு நிறுவனங்கள் பிரகாசிக்காதது ஏன்?

செய்திப்பிரிவு

வெளிநாட்டில் அறிமுகமாகும் கார்கள் அடுத்த சில வாரங்களில், ஏன் சில சமயம் அதே நாளில் கூட இங்கு கிடைக்கும். ஆனால் உலகின் 5-வது மிகப் பெரிய கார் சந்தையைக் கொண்ட இந்தியாவில் ஆலை அமைத்து தொழில் தொடங்கினாலும் பெரும்பாலான நிறுவனங்களால் இங்கு பிரகாசிக்க முடியவில்லை.

சமீபத்தில் இந்தியாவில் விற்பனையை நிறுத்தும் முடிவை அறிவித்துள்ளது அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ்.

இந்தியாவில் 1982-ம் ஆண்டு ஜப்பானின் சுஸுகி நிறுவன கூட்டுடன் தொடங்கப்பட்ட மாருதி சுஸுகி நிறுவனம் மட்டுமே சந்தையில் முன்னிலையில் திகழ்கிறது. இந்நிறுவனம் மொத்த கார் விற்பனையில் 47 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக விளங்குவது கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் மட்டுமே. இந்நிறுவனம் 16.7 சதவீத சந்தையை வைத்துள்ளது.இந்திய நிறுவனங்களான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (8.6%) மற்றும் டாடா மோட்டார்ஸ் (6.2%) சந்தையைப் பிடித்துள்ளன.

இதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஆலை அமைத்துள்ள அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களும் ஒற்றை இலக்க சந்தையை மட்டுமே வைத்துள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் செடான், எஸ்யுவி மற்றும் கிராஸ்ஓவர் ரக தயாரிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றன. அவற்றின் தயாரிப்புகளும் இவ்வகையைச் சேர்ந்தவையாக உள்ளன.

டொயோடா கிர்லோஸ்கர், ரெனால்ட் இந்தியா, ஃபோர்டு இந்தியா, நிசான் மோட்டார் இந்தியா, ஃபோக்ஸ்வேகன் இந்தியா, ஸ்கோடா, ஃபியட் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 5 சதவீதத்துக்கும் குறைவான சந்தையைப் பிடித்துள்ளன. 2015-ம் ஆண்டில் 7.3 சதவீத சந்தையை வைத்திருந்த ஹோண்டாவின் விற்பனை கடந்த ஆண்டில் 5.2 சதவீதமாக சரிந்தது.

புரிதல் இல்லாமை

இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கி பெரும்பாலான நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகின்றன.

ஃபோர்டு இந்தியா (1995), டொயோடா (1997) ஆகிய நிறுவனங்கள் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இந்திய சந்தையில் உள்ளன. ரெனால்ட் (2005), நிசான் (2005) ஃபோக்ஸ்வேகன் (2007) ஆகிய நிறுவனங்களும் இந்தியச் சந்தைக்கு பரிச்சயமானவையே. ஆனால் இவை அனைத்துமே இந்திய வாடிக்கையாளர்களின் தேவை, எதிர்பார்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

இந்நிறுவனங்கள் பெரும்பாலும் ஐரோப்பிய சந்தை மற்றும் அமெரிக்காவில் வெற்றி பெற்ற மாடல்களை இந்தியாவில் தயாரித்தன. இந்திய வாடிக்கையாளர்களுக்கேற்ப வாகனங்களை வடிவமைக்கத் தவறியதும் முக்கிய குறைபாடாகும்.

குறிப்பாக ஜெனரல் மோட்டார்ஸின் ஓபல் ஆஸ்ட்ராவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் இந்திய சாலைகளுக்கு போதுமானதாக இல்லை. அதேபோல ஃபோர்டு மான்டியோவின் விலை இந்திய வாடிக்கையாளர்களுக்கு கட்டுபடியாகும் விலையில் இல்லை.

பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் உரிய காலத்தில் உரிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் தவறின. மாருதியின் ஹேட்ச்பேக் மாடலான ஸ்விப்ட் ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரில்லா ராஜாவாக இப்பிரிவில் கோலோச்சியதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் போட்டி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்த எடுத்துக் கொண்ட காலம் மிக அதிகமாகும். பெரும்பாலான நிறுவனங்கள் மாருதி, ஹூண்டாயின் சந்தைப் போக்கை பின்பற்றத் தவறிவிட்டன.

கால ஓட்டத்தில் கரைந்து போகாமல் தன்னை தற்காத்துக் கொண்ட ஒரே வெளிநாட்டு நிறுவனம் கொரியாவின் ஹூண்டாய்தான். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக அறிமுகமான சான்ட்ரோ மாடல் இந்திய சாலைக்கு மட்டுமல்ல வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இருந்தததே. `டால் பாய்’ என்றழைக்கபடும் சான்ட்ரோ உற்பத்தியை நிறுத்திய பிறகும் இதற்கான வரவேற்பு பொதுமக்களிடம் அதிக அளவில் உள்ளதால் இதை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

அதேசமயம் புதிய உத்திகள், புத்தாக்க சிந்தனைகளை இந்நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே வருகிறது. கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, எஸ்யுவி கிரெடா ஆகியவற்றுக்கான வரவேற்பு இந்நிறுவனத்தை தொடர்ந்து இரண்டாமிடத்திலையே தக்க வைத்துக் கொள்ள உதவி வருகிறது.

சமீபகாலமாக ரெனால்ட் க்விட் மாடல் மிகவும் விருப்பமான தேர்வாக அமைந்துள்ளது. 2015-ம் ஆண்டில் 1.7 சதவீதமாக இருந்த இந்நிறுவன விற்பனை சந்தை கடந்த ஆண்டு 4.4 சதவீதமாக உயர்ந்தது.

வலிமை உள்ளது எஞ்சும் என்பது பழமொழி. சர்வதேச அளவில் வலிமையான நிறுவனமாக இருந்தாலும், இந்திய சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளாத நிறுவனங்கள் இங்கு தாக்குப் பிடிப்பது சிரமம்தான்.

SCROLL FOR NEXT