இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை தயாரிக்கும் நிறுவனங்களில் 2-வது இடத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனம், சமூக அக்கறையிலும் கவனம் செலுத்துகிறது.
நிறுவனங்களுக்குள்ள சமூக பொறுப்புணர்வு திட்டப் பணிகள் (சிஎஸ்ஆர்) மூலம் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இது தவிர சாலை விழிப்புணர்வு பிரசாரத்திலும் தீவிரம் காட்டுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்களுடன் இணைந்து சாலை விழிப்புணர்வு பிரசாரத்தை ஹூண்டாய் நடத்தியது. இது தவிர 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு சங்கங்களை ஒருங்கிணைத்து சாலை விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் 60 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஒரு லட்சம் குடியிருப்போருக்கு சாலை விழிப்புணர்வு பிரசாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு பிரசார நிகழ்விலும் ஹூண்டாய் பிரதிநிதி ஒருவர் அடிப்படை சாலை விதிகள், மாணவ, மாணவிகள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விளக்குவார். வெறுமனே செய்முறை விளக்கமாக இல்லாமல் வீடியோ காட்சிகளாகவும், சிறியவர்கள் மனதில் பதியும் வகையில் கார்டூன் சித்திரங்களாகவும் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபல கார்டூன் கதாபாத்திரங்கள் மூலம் சாலை விழிப்புணர்வு பிரசாரத்தை மனதில் பதியச் செய்துள்ளது ஹூண்டாய்.
பொதுவாக சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்லும்போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் முக்கியமாக இடம்பெறுகிறது. விபத்து ஏற்பட்டால் ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுப்பது குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதும் இதில் அடங்கும்.
இது தவிர போக்குவரத்து போலீஸாருக்கு உதவும் விதமாக நகரில் உள்ள கல்லூரிகளில் ஆண்டுதோறும் 100 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து போக்குவரத்து போலீஸாருக்கு உதவுகின்றனர். 100 மாணவர்களும் நகரின் முக்கியமான 20 போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் தொகையும், சீருடையையும் இந்நிறுவனமே அளிக்கிறது.
சாலைப் பயணம் பாதுகாப்பாக அமைய வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சாலையைப் பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அந்த வகையில் மாணவர்களில் தொடங்கி, பெற்றோர்கள் வரை சாலை விழிப்புணர்வு பிரசாரம் மிக முக்கியமான ஒன்றே.