1807 ஆம் ஆண்டு முதல் 1882 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ அமெரிக்காவைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற கவிஞர் மற்றும் கல்வியாளர். நாவல்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் சிறப்புத் தொகுப்புகள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். இவரது எழுத்துகள் பெரும்பாலும் கலாசாரம் மற்றும் இயற்கை சார்ந்து அமைந்திருந்தன. பிற உலக மொழிகளில் உள்ள புகழ்பெற்ற படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மேலும், பிறரது மொழிபெயர்ப்புகளுக்கும் ஊக்கமளித்தார். இவரது கவிதைகளும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தனது படைப்புகளில் ஐரோப்பிய பாணியை பின்பற்றியமைக்காக விமர்சனங்களுக்கு உள்ளானார்.
* குணம், பாங்கு, நடத்தை எல்லாவற்றிலும் உயர்ந்த சிறப்பம்சமானது எளிமையே.
* இசையே மனிதகுலத்தின் உலகளாவிய மொழியாகும்.
* ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகிற்கு தெரியாத அவனது ரகசிய துக்கங்கள் உண்டு.
* ஒரு சிந்தனை நம்மை நெருப்பை விட அதிக சூடாக்கிவிடுகிறது.
* விடாமுயற்சியானது வெற்றிக்கான மிகப்பெரிய அம்சமாக உள்ளது.
* இந்த வானம், பகலில் கண்ணுக்கு தெரியாத நட்சத்திரங்களால் நிரப்பப்பட்டுள்ளது.
* பெரிய லட்சியங்களில் கலக்கமடையாமல் இருந்தால், பெரும்பாலான மக்கள் சிறிய விஷயங்களில் வெற்றி பெறுவார்கள்.
* ஏன் ஒரு செயலை தவறாக செய்தோம் என்பதை விளக்குவதற்கான நேரத்தை விட, அதை சரியாக செய்வதற்கு குறைந்த நேரமே தேவைப்படுகிறது.
* கடந்தகாலத்தை எண்ணி துக்கம் கொள்ளாதே, அது மீண்டும் வரப்போவதில்லை.
* நிகழ்காலத்தை விவேகமாக மேம்படுத்துங்கள், அதுவே உங்களுடையது. இதன்மூலமே பயம் இல்லாத ஒரு நிதானமான எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியும்.
* உங்கள் எதிரிகளை நீங்கள் கட்டுப்படுத்த விரும்பும்போது, வலிமையை விட நீங்கள் எந்த முறையை கையாளுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது.
* சக்தி இல்லாதபோது மட்டுமே மக்கள் சுதந்திரத்தை கோருகிறார்கள்.
* மனித மனங்களில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஓர் உணர்வு லட்சியம்.
* வெற்றிக்கான திறமை என்பது உங்களால் எதை சிறப்பாக செய்யமுடியுமோ அதை செய்வதை தவிர வேறு ஒன்றுமில்லை.
* தன்னையே மதிக்கும் ஒருவர், மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பானவராக இருக்கிறார்.
* பத்து ஆண்டுகளாக புத்தகங்களைப் படிப்பதை விட, விவேகமான மனிதருடனான ஒரு உரையாடல் சிறந்தது.
* சில நேரங்களில் ஒரு மனிதனின் நற்குணங்களை விட அவனது பிழைகளிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.