வணிக வீதி

குழந்தைகளின் குதூகலத்தில் வாழ்க்கையின் வெற்றி

குர்சரண் தாஸ்

என் சிறுவயது நண்பன் கடந்த மாதம் ஊருக்கு வந்தான். ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனமொன்றை வெற்றிகரமாக நடத்துகிறான். நல்ல வெயில் என்பதால் தேநீர் குடிக்க அமர்ந்தோம். வளர்ந்த குழந்தையாகவே நடந்துகொண்டான். தன்னைப் பற்றியோ தன்னுடைய திறமையைப் பற்றியோ கவலையேபடாமல் பேசினான். கிறுக்கன் போல காட்டிக்கொள்ளவும் தயங்கவில்லை. அவனுக்கு நான் சொன்ன பதிலையெல்லாம், கேள்வியாக மாற்றிக்கொண்டிருந்தான்.

உண்மையை நாடுவதற்கும் அதை அடைவதற்கும் இடையில் ஒரு ‘கமா’ இருக்கிறதல்லவா, அந்தக் கமாவைத்தான் அவன் நாடினான். அவன் வந்தபோது மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது, அவன் விடைபெற்றபோது அமைதியாக புன்னகை பூத்தேன். எனக்குத் தெரிந்தவரையில் இவன்தான் புத்திசாலி என்று அக்கணமே தீர்மானித்தேன்.

புத்திசாலியான நாடுகளும் விளையாட்டுத் தனமாக இருக்கின்றன. இந்தியர்களான நாம் கொடுத்து வைத்தவர்கள், நமக்குக் கிடைத்துள்ள அரசியல் தலைவர்கள் சரிக்கும் தவறுக்கும், கதைக்கும் கதையல்லாதவற்றுக்கும் உள்ள வித்தியாசத்தை மறப்பவர்கள். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரம் வெளியானபோது காங்கிரஸ் கட்சி வலிப்பு வந்ததைப்போல முனகியது அரசியல் நகைச்சுவையாக இருந்தது.

இடைவிடாமல் வரும் தேர்தல்கள் காரணமாக நம்முடைய ஆற்றலும் நிதியும் வீணாகிறதே என்று புலம்புகிறோம். அவற்றால் கிடைக்கக்கூடிய அரசியல் நாடகங்களையும் அவை ஏற்படுத்தும் சிரிப்பையும் கருதி அவற்றை மதிக்க வேண்டும். சர்வாதிகாரத்தைவிட ஜனநாயகம் மேலானது காரணம், அரைகுறைகளான அரசியல்வாதிகள் எப்போதும் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்கள். சர்வாதிகாரத்தில் எப்போதும் கசப்பும், சிக்கலான சர்வாதிகாரிகளும்தான் இருப்பார்கள்.

நண்பன் வந்துசென்ற மறுநாள், இளம் தொழில்முனைவோர் கலந்துகொண்ட கருத்தரங்குக்குச் சென்றேன். அவர்கள் உற்சாகமாக இருந்தார்கள். நகர்ப்புறங்களில் இப்போது ஸ்டார்ட்அப் மோஸ்தர் பரவிக் கொண்டிருக்கிறது. நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் கொடுத்த வேலையை உதறிவிட்டு ஸ்டார்ட்அப் முயற்சியில் இறங்கிவிட்டான் என் மகன் என்று பல நடுத்தர குடும்பத்துப் பெற்றோர் என்னிடம் குறைப்படாத நாளே இல்லை.

இப்படி தொடங்கப்படும் நிறுவனங்கள் ஐந்தில் நான்கு தோல்வியைத் தழுவுவது தெரியும் என்றாலும் தன்னுடைய நிறுவனம் தப்பிப் பிழைத்துவிடும் என்று ஓரிருவர் நம்பிக்கையுடன் கூறியது பிடித்திருந்தது. தோல்வி அல்லது மரணம்தான் நிச்சயம் என்ற நிலையிலும் நம்முடைய ராஜபுதனத்து இளைஞர்கள் முற்காலத்தில் மிகப்பெரிய சைன்யங்களுக்கு எதிராக உற்சாகமாகப் போருக்குச் சென்றதைப்போலத்தான் இவர்களும் செல்கிறார்கள்.

புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி பேச்சு நகர்ந்தது. எனக்கு குழந்தைப் பருவம் நினைவுக்கு வந்தது. குழந்தைத்தனம்தான் புதிய கண்டுபிடிப்புக்கு மூல ஊற்றாக இருக்க முடியும் என்றேன். இன்றைய இந்திய இளைஞர்களிடம் விளையாட்டுத்தனம் குறைவு. கடுமையான உழைப்பாளி, சிந்தனையாளர், பிரச்சினைகளைத் தீர்ப்பவர் என்று பெயரெடுக்க விரும்புகின்றனர்.

நாமெல்லாம் வளர்ந்தவர்கள், விளையாட்டுத்தனம் கூடாது, திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக இருக்கிறார்கள். மணமகன் தேவை விளம்பரங்களில் கூட விளையாட்டுத்தனமுள்ள வரன் தேவை என்று யாரும் கேட்பதில்லை. கண்டுபிடிப்புகளுக்குக் காரணங்கள் எவை என்று மேற்கத்திய வேதாந்திகளை நாட வேண்டிய அவசியமில்லை. கடவுளுடைய லீலைகளே அதற்குக் காரணம் என்று நம்முடைய புராணங்கள் சொல்லிவிடுகின்றன!

லீலை என்பதற்கும் விளையாட்டு என்பதற்கும் ‘ஆட்டம் நாடகம்’ என்று இரண்டு பொருள்கள். லீலை என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு, தெய்வீக சக்தியின் கிரியை என்பதே அது. கடவுளர்கள் விளையாட்டு குணம் உள்ளவர்கள் என்று மூதாதையர்கள் தெரிந்து வைத்திருந்தனர். சிவன் நடனமாடிக்கொண்டே உலகைப் படைத்துவிடுகிறார்.

கிருஷ்ணர் வெண்ணெய் திருடி உண்கிறார், தந்திரங்களைக் கையாள்கிறார், இளம் கோபிகைகளுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறார், அசுரர்களை வதைக்கிறார். இவை எல்லாவற்றையும் ஒரே நாளின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்த்திவிடுகிறார். பிருந்தாவனத்திலே கிருஷ்ணரின் வேணுகானத்தைக் கேட்டதும் கோபிகைகள் தங்களுடைய வீடுகளைவிட்டு வெளியேவந்து யமுனைக் கரையிலே கிருஷ்ணரைச் சுற்றி நின்று ஆடிப்பாடி மகிழ்கின்றனர். அந்த ராசலீலை நடைபெறும் காலங்கள் 450 கோடி மனித ஆண்டுகள் என்று புராணம் கூறுகிறது.

ஆசிரியரின் கேள்வி

எனது மாணவப் பருவத்தில் ஒரு ஆசிரியர் நிறையக் கதைகளைக் கூறுவார். கடவுள் ஏன் எதையாவது செய்கிறார் என்று கேட்டார். உலகம் வாழவேண்டும் என்பதற்காக என்றான் ஒருவன். நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக என்றான் இன்னொருவன். தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பதற்காக என்றான் இன்னொருவன். எங்களுடைய எந்த பதிலும் சரியில்லை. கடவுள் விளையாட்டு குணம் கொண்டவன் என்று ஆசிரியரே பதில் அளித்தார். நமக்கு ஆசைகள் இருப்பதால் அதைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக எதையாவது செய்கிறோம்.

கடவுளிடத்தில் எல்லாம் இருக்கிறது. எனவே கடமையாக எதையும் செய்யாமல் லீலையாகவே எதையும் செய்துவிடுகிறார். அதில் அவருக்கு அலாதி இன்பம். எல்லா செல்வங்களும் பெற்றுள்ள சக்ரவர்த்தி மகிழ்ச்சிக்காக விளையாட்டு களத்துக்குச் செல்வதைப்போலவே இறைவனும் செய்கிறார் என்கிறார் வைணவ முனியான ஸ்ரீ ராமானுஜர். நல்ல ஆரோக்கியமுள்ள மனிதன் காலையில் தூங்கி எழுந்ததும் உற்சாகத்துக்காகத் துள்ளி விளையாடுவதைப்போல இறைவனும் லீலையில் இறங்குகிறான் என்கிறார் வங்காள குருவான சைதன்ய மகா பிரபு.

வளர்ந்த மனிதரின் ஈடுபாடற்ற படைப்புகளை யும் குழந்தைகளின் உவகையூட்டும் கைவேலை களையும் பார்த்த பிறகே முந்தைய தலைமுறையினர் கடவுளின் லீலைகளைப் பற்றிச் சிந்தித்திருப்பார்கள் என்று கருதுகிறேன். குழந்தைகளுடைய உலகம் எப்போதும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக, புத்தம்புதிதாக, ஆச்சரியங்கள் நிறைந்ததாக, குதூகலம் நிரம்பியதாக இருக்கிறது.

குழந்தைகள் கடந்த காலத்தை நினைத்து மருகுவதில்லை, எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படுவதுமில்லை; நிகழ்காலத்தில் ஆனந்தமாக வாழ்கின்றனர். வயதாகிவிட்டது என்பதற்காக விளையாடுவதை நிறுத்துவதில்லை என்பதையே கடவுளின் லீலைகள் உணர்த்துகின்றன. விளையாடுவதை நிறுத்துவதாலேயே நமக்கு வயதாகிவிடுகிறது. தங்களுடைய குழந்தைகளுடன் விளையாடும் பெற்றோரும் பாட்டன் பாட்டிமாரும் உற்சாகமாக வாழ்கின்றனர்.

குழந்தைகள் எப்படி பூக்கள், புற்கள், வண்ணத்துப் பூச்சிகள் ஆகியவற்றுக்கு நெருக்கமாக வாழ்கிறார்களோ அப்படியே நாமும் மாற வேண்டும். வளர்ந்த நாமோ இந்த மகிழ்ச்சிகளையெல்லாம் தாண்டி வெளியே வந்துவிட்டோம். அவர்களுடன் சேர வேண்டும் என்றால் நம்முடைய உயரத்தைக் குறைத்துக்கொண்டு அவர்கள் நிலைக்கு இறங்கிச் செல்ல வேண்டும். குழந்தைகளின் மாய உலகில் வாழவேண்டும் என்றால் எப்படி எளிமையாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும்.

கொளுத்தும் வெயில் அடித்த மே மாதத்தில் 4 பெரிய மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள் நடந்து முடிவுகள் வெளியாகின. இது முடிந்து நாம் மூச்சை இழுத்துவிட்டிருக்கக்கூட இல்லை, அடுத்த 5 மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டோம்.

அதில் ஒன்று உத்தரப் பிரதேசம், மற்றொன்று ஆட்சி மாற்றம் நிகழக்கூடிய பஞ்சாப். அரசியல்வாதிகள் அடிக்கும் கூத்தில் நாம் கடவுளர்களின் லீலைகளை மறந்துவிட்டோம். அரசியல் அரங்கம் நம் கருத்தை ஈர்த்துவைத்திருக்கிறது.

மனித சமூகம் முன்னேறியதற்குக் காரணம் மனிதர்கள் நிதானமுள்ளவர்களாக, பொறுப் புள்ளவர்களாக, எச்சரிக்கை உள்ளவர்களாக இருந்ததால் அல்ல; பக்குவமில்லாமலும், போராட்ட குணம் கொண்டும், விளையாட்டுத்தனத்தை அதிகம் கொண்டிருந்ததாலும்தான்.

இளம் தொழில் முனைவோர்களுக்கு நான் கூற விரும்புவதெல்லாம் ஒவ்வொரு வளர்ந்த மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை வாழ்கிறான் என்பதுதான். இதையேதான் அரசியல்வாதிகளுக்கும் கூற விரும்புகிறேன். நீங்கள் பொய் சொல்லுங்கள், ஏமாற்றுங்கள் அதையெல்லாம் நகைச்சுவை உணர்வோடு செய்து எங்களை மகிழ்வியுங்கள். அன்புள்ள வாசகரே, பருவ மழைக்காலம் நெருங்குகிறது, அடுத்த முறை மழை பெய்த வீதியில் இறங்கி நடக்கும்போது மழைத் தண்ணீர் தேங்கியிருப்பதைப் பார்த்தால் அதைச்சுற்றி நடக்காதீர்கள், அதிலேயே தொபுக்கட்டீர் என்று தாவிக் குதியுங்கள்!

gurcharandas@gmail.com

SCROLL FOR NEXT