வணிக வீதி

புதிய கார்களுக்கு மாறும் மியான்மர்!

செய்திப்பிரிவு

பழைய கார்களின் சொர்க்கம் என் றழைக்கப்படும் நாடு ஒன்று உண்டென்றால் அது மியான்மர்தான். பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் பழையகார் விற்பனை சந்தைக்கு உரிய இடமாகக் கருதும் நாடும் இதுதான்.

பழைய கார்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அதிகரித்ததால் புதிய கார்களுக்கு மாற வேண்டியதற்கான தேவை அங்கு ஏற்பட்டுள்ளது.

மியான்மரில் உள்ள சகுரா டிரேட் சென்டர்தான் மிக அதிக எண்ணிக்கையில் பழைய கார்களை இறக்குமதி செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனம் இப்போது புதிய கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. யாங்கோனின் மத்திய பகுதியில் சுஸுகி கார் விற்பனையகத்தை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. ஏறக்குறைய 23 ஆண்டுகளாக பழைய கார் விற்பனையில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் புதிய கார் விற்பனைக்காக தொடங்கியுள்ள முதலாவது விற்பனையகம் இதுவாகும்.

ஒரு காலத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பழைய கார்களை இந்நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது. இதேபோல மற்றொரு பழைய கார் விற்பனை நிறுவனமான ஃபார்மர் ஆட்டோ இப்போது புதிய கார் விற்பனையைத் தொடங்க உள்ளது.

கடந்த நவம்பரில் மியான்மர் அரசு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத் தப்பட்ட கார்களுக்கான விதிகளை கடுமையாக்கியது. மேலும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வலது புற ஸ்டீரிங் உள்ள கார்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான காலத்தில் தயாரிக்கப்பட்ட, உபயோகப்படுத்தப்பட்ட கார்களுக்கு மட்டும் இந்த இறக்குமதி தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் (2016) மட்டும் ஜப்பானிலிருந்து 1.20 லட்சம் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது வரும் ஆண்டில் பெருமளவு குறையும். இதனால் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிகிறது. அரசு விதித்துள்ள இந்த தடைக்கு அந்நாட்டின், மியான்மர் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதிய கார்களை சாமானிய மக்களால் வாங்க முடியாது. இதனால் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான சந்தை அதிகம். இப்போது விதிக்கப்பட்ட தடை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்று பலர் தெரிவித்துள்ளனர். இதனிடையே தடை அமலாவதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களில் பழைய கார்களின் விற்பனை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

2015-ம் ஆண்டு நிலவரப்படி 5.4 லட்சம் பயணிகள் வாகனம் இங்கு பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை ஜப்பானில் பயன்படுத்தப்பட்டு பின்னர் இங்கு புழக்கத்துக்கு வந்த வாகனங்களாகும்.

மியான்மரின் உத்தரவால் ஜப்பானிய நிறுவனங்களுக்கு பழைய கார் விற்பனை பாதிக்கப்படும். ஆனால் மியான்மரின் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். மியான்மர் அரசின் வாசகம் இதுதான், `புதிய கார் சூழலுக்கு நல்லது’. உண்மைதானே.!

SCROLL FOR NEXT