வணிக வீதி

சர்ச்சை நாயகன் மூர்த்தி!

செய்திப்பிரிவு

இன்ஃபோசிஸ் பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை. சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிரச்சினை வெடித்து, அதற்கு பெரிய அளவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து ஒரு வழியாக (?) முடிவுக்கு கொண்டுவந்தனர். இன்ஃபோ சிஸின் தலைவர் ஆர்.சேசஷாயி இது தொடர்பாக கூறும்போது, இயக்குநர் குழுவுக்கும், நிறுவனர்களுக்கும் இடையே விவாதம் நடந்தது. நிறுவன விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்கப்போவதில்லை என இரு வரும் ஒப்புக்கொண்டிருக்கிறோம் என கூறினார். இது நடந்தது பிப்ரவரி 14-ம் தேதி. ஆனால் இரு மாதங்கள் கூட முடிவுறாத நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையைத் தொடங்கி இருக் கிறார் நிறுவனர் நாராயணமூர்த்தி.

நிறுவனத்தின் தலைமை செயல் பாட்டு அதிகாரி பிரவீண் ராவின் ஆண்டு சம்பளம் 35 சதவீதம் உயர்ந்து ரூ.12.5 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த சம்பள உயர் வுக்கு நிறுவனர்கள் எதிராக வாக்களித் திருக்கின்றனர். நிறுவனத்தின் ஒரு முடிவுக்கு இயக்குநர் குழுவில் ஆதரவும் எதிர்ப்பும் இருப்பது வழக்கமான ஒன்றுதான். நிறுவனர்கள் எதிர்த்திருந்தாலும் 67 சதவீத பங்குதாரர்கள் சாதகமாக வாக்களித்திருக்கின்றனர்.

ஆனால் எதிர்ப்பினை நாராயணமூர்த்தி பொதுவெளியில் பிரச்சினையாக்கி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. அவர் ஊடகங்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தின் சுருக்கம் இதுதான். 1985-ம் ஆண்டு பிரவீண் ராவை நான் வேலைக்கு எடுத்தேன். என் பணிக்காலத்தில் அவருக்கு பயிற்சி அளித்தேன். 2013-ம் ஆண்டு வரை அவர் இயக்குநர் குழுவில் இல்லை. நான், கிருஷ் மற்றும் சிபுலால் இணைந்து அவரை இயக்குநர் குழுவில் கொண்டு வந்து தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பை வழங்கினோம். அவர் மீது எனக்கு மதிப்பு இருக்கிறது.

நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு, ஒட்டுமொத்த பணியாளர்களின் சராசரி சம்பளத்தை விட மிக அதிகமாக இருக்கக் கூடாது. இந்தியா போன்ற ஏழை நாடுகளில் உயர் அதிகாரிகளின் சம்பள விஷயத்தைத் தீர்மானிப்பதில் இயக்குநர் குழு கவனமாக இருக்க வேண்டும்.

இன்ஃபோசிஸில் பணியாற்று பவர்களுக்கு 6 முதல் 7 சதவீத சம்பள உயர்வு இருக்கும் போது ஒரு சிலருக்கு மட்டும் 60 சதவீத அளவுக்கு உயர்வு இருப்பது என்னை பொறுத்தவரை சரியில்லை. இதனால் பணியாளர்களுக்கு நிறுவனத்தின் மீது இருக்கும் நம்பிக்கை குறையும் என்பது உள்ளிட்ட பல கருத்துகளை அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் பிரவீண் ராவ் சம்பள உயர்வை இயக்குநர் குழு நியாயப்படுத்தி இருக்கிறது. திறமையான பணியாளர்களை தக்க வைப்பதற்கு இதுபோன்ற சம்பள உயர்வு தேவை. இருந்தாலும் எதிர்குரலையும் இயக்குநர் குழு மதிக்கிறது என அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

நாராயண மூர்த்தியின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிடைத் திருக்கிறது. உயரதிகாரிகளின் சம்பளம் கட்டுக்குள் இருக்க வேண் டும் என பலர் கருத்து தெரிவித் திருக்கின்றனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மோகன்தாஸ் பாய் கூறும்போது, மென்பொருள் துறையின் ஆரம்ப நிலை பணியாளர்களின் சம்பளம் கடந்த ஏழு ஆண்டுகளாக உயராத நிலையில் உயரதிகாரிகளின் சம்பளம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

மேலும் சிலர், இன்ஃபோசிஸ் என்பது ஒரு தொண்டு நிறுவனம் அல்ல, அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். கொடுக்கப்படும் சம்பளத்துக்கு சரியான பணியை செய்கிறாரா என்பதைத்தான் பார்க்க வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. ஐகேன் இன்வெட்ஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் அனில் சிங்வி கூறும்போது, நாராயண மூர்த்தியின் கருத்துகளை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும். அவருடைய அறிக்கையில் 23 முறை நான், என்னுடைய என்னும் வார்த்தையை பயன்படுத்தி இருக் கிறார். பொதுவெளியில் இவ்வாறு பேசுவதுதான் தலைமைப் பண்பா என்னும் ரீதியில் கடுமையான விமர் சனங்களை வைத்திருக்கிறார்.

சர்ச்சை நிறுவனத்துக்கு நல்லதல்ல.

SCROLL FOR NEXT