போன் என்றாலே நோக்கியாதான் என்கிற ஒரு காலத்தை இந்தியாவில் உருவாக்கிய நிறுவனம் நோக்கியா. ஆனால் மாறிக் கொண்டிருந்த சந்தையை கணிக்கத் தவறிய சில தவறுகளால் நிறுவனம் எங்கிருக்கிறது என்றே தெரியாத நிலைக்குச் சென்றுவிட்டது. அந்த இடத்தை பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஆக்கிரமித்தாலும், மக்களின் மனதில் நிற்கும் பிராண்ட் என்கிற இமேஜ் இப்போதும் அதற்கு சாதகமாகத்தான் உள்ளது. அதனால்தான் கடந்த வாரத்தில் இந்நிறுவனம் 3 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து அதிரடியாக போட்டியில் இறங்கியுள்ளது.
நோக்கியா பிராண்டை கையகப்படுத்தியுள்ள ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் நோக்கியா 5, 6 மாடல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னதாக இந்திய சந்தையில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற 3310 மாடலையும், நோக்கியா 3 ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த நிலையில் நோக்கியாவின் 3 மாடல் ரூ.9,499க்கும், நோக்கியா 5 மாடல் ரூ.12,899 விலையிலும் கொண்டு வந்துள்ளது. 6 மாடல் ரூ.14,999 விலையில் ஜூலை மாதத்திலிருந்து ஆன்லைன் சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது.
புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளதன் நோக்கம் இந்திய சந்தையில் மீண்டும் கால் பதிக்க வேண்டும் என்பதற்குத்தான். அதற்கேற்ப நோக்கியாவின் புதிய மாடல்கள் தற்போது சந்தையில் உள்ள மோட்டோ ஜி5, லெனோவா இசட்2, ரெட்மி நோட் 4, லெனோவா பி2 போன்ற பட்ஜெட் போன்களுக்கு சவால் விடும் என்றே சொல்லத் தோன்றுகிறது. நோக்கியா ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வெற்றிகரமாக வலம் வரும் என்பதை சந்தை நிபுணர்களும் கணிக்கிறார்கள். போனில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது மட்டுமல்ல, அதன் பிராண்ட் பெயர்தான் என்பதை சொல்லத் தேவையில்லை.