வணிக வீதி

தவறிலிருந்து பாடம் கற்க வேண்டும்

ஆர்த்தி கிருஷ்ணன்

சரியானவற்றில் இருந்து மட்டுமே பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. தவறானவற்றில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ளலாம். சில பங்குகள் பலருக்கு பெரும் செல்வத்தை உருவாக்கி கொடுத்திருக்கின்றன. அதேபோல சில பங்குகள் பலரின் சொத்துகளையும் மொத்தமாக அழித்திருக்கின்றன.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் பிஎஸ்இ பட்டியலில் உள்ள 2300 பங்குகளை ஆய்வு செய்ததில் அதிர்ச்சியான பல விஷயங்கள் கிடைத்தன. இந்த பங்குகளில் 630 பங்குகள் முதலீட்டாளர்களின் 50 முதல் 90 சதவீத முதலீட்டை அழித்திருக்கின்றன.

குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகள் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை அழித்தன என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த நிறுவனங்களை ஆராய்ந்து பார்க்கும் போது சில குறிப்பிட்ட குணாதிசயங்கள் இருந்தன. இந்த அம்சங்கள் உள்ள பங்குகள் நீண்ட கால அடிப்படையில் முதலீடுகளை காலி செய்ய கூடியவைகளாக இருக்கக்கூடும். இந்த 5 அம்சங்கள் இதோ.

அகலக்கால் வைப்பது

தங்களுக்கு போதிய அனுபவம் இல்லை என்றாலும் தற்போது சந்தையில் பிரபலமாக இருக்கும் துறை, அதிகம் பேசப்படும் துறை என்பதற்காக அந்த துறையில் களம் இறங்கும் நிறுவன பங்குகளை தவிர்க்கலாம்.

ஜேபி அசோசியேட்ஸ் நிறுவனம் கடந்த 2000 முதல் 2007-ம் ஆண்டு வரை இதனை செய்தது. அதிக முதலீடு தேவைப்படுகிற, நீண்ட காலத்துக்கு லாபமீட்ட முடியாத துறைகளில் முதலீடு செய்தது. 2000 முதல் 2007 வரை அதிகம் பேசப்பட்ட மின் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் அதிகம் முதலீடு செய்தது. இதில் பெரும்பாலான முதலீடுகள் வெளிநாடுகளில் (எப்சிசிபி) இருந்து கடன் வாங்கப்பட்டவை ஆகும்.

ஒழுங்குமுறை சிக்கல்களால் இந்த திட்டங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நிறுவனத்தின் கடன் ரூ.75,000 கோடியாக அதிகரித்தது. நிறுவனத்தின் நஷ்டமும் 2,200 கோடியாக அதிகரித்தது. இதனை சமாளிக்க அப்போது தொடங்கப்பட்ட நிறுவனங்களை இப்போது அந்த நிறுவனம் விற்று வருகிறது.

கையகப்படுத்துதல்

கையகப்படுத்துதல் சரியா தவறா என்பதை விட எந்த மதிப்பில் நிறுவனங் களை வாங்குவது என்பது முக்கியம். முக்கிய கமாடிட்டிகளின் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்த விலை ஏற்றம் நிரந்தரம் என்று நினைத்து அதிக சந்தையை கைப்பற்றுவதற்கு நிறுவனங்களை வாங்குவது சரியான முடிவாக இருக்காது.

ஸ்ரீரேணுகா சுகர்ஸ் பங்கு தவறான கணிப்பில் பிரேசில் நாட்டில் உள்ள இரு சர்க்கரை ஆலைகளை வாங்கியது. 2005-ம் ஆண்டு ஐபிஒ வெளியிட்ட இந்த நிறுவனம் 2010-ம் ஆண்டு இதை மேற்கொண்டது.

இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் மதிப்புக்கு (நெட்வொர்த்) மூன்று மடங்குக்கு கடன் அதிகரித்தது. வறட்சி காரணமாக அந்த நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் சர்க்கரை விலையும் சரிந்தது. கடந்த 10 வருடங்களில் இந்த பங்கின் மதிப்பு 80 சதவீதம் சரிந்தது.

ஜெயிக்கும் குதிரையா?

சில நேரங்களில் சில குறிப்பிட்ட துறைக்கு பொற்காலமாக இருக்கும். 90களில் கேபிள் தயாரிப்பவர்கள், 97களில் டாட் காம் நிறுவனங்கள் 2006களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். நேரம் சரியாக இருக்கும் சமயங்களில் இந்த பங்குகளின் விலை உச்சத்தில் இருக்கும்.

அபான் ஆப்ஷோர் நிறுவனம் கச்சா எண்ணெயை எடுத்து தரும் நிறுவனம். கச்சா எண்ணெய் உயர்ந்து வந்த சமயத்தில் 200 டாலர் வரை செல்லும் என்று சந்தையில் கருத்து நிலவியது. இதனால் அபான் ஆப்ஷோர் போன்ற நிறுவனங்களுக்கு நேரடியாக பயன் அடைவார்கள். அதனால் எண்ணெய் எடுத்து தருவதற்காக கட்டணத்தை இந்த நிறுவனம் உயர்த்தியது.

2009-ம் ஆண்டு கச்சா எண்ணெய் சரிவுக்கு பிறகு இந்த கட்டணங்கள் கடுமையாக சரிவடைந்தன. இதனால் கடனை அடைக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் 5000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமான பங்கு, பல முதலீட் டாளர்களின் சொத்துகளை அழித்தது.

காலத்துக்கு ஏற்ப மாறாதது!

பொதுத்துறை நிறுவனமான எம்டிஎன்எல் பங்கு 91 சதவீதம் சரிந்தது. பெரிய காரணம் இல்லை. காலத்துக்கு ஏற்ப இந்த நிறுவனம் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை, போட்டியாளர்களின் செயல்பாடு போன்றவற்றை கவனிக்க தவறியதால் கடும் சரிவை இந்த பங்கு சந்திதது. இத்தனைக்கும் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் செயல்படுவதற்கு உரிமம் இருந்தாலும் காலத்தை கணிக்க மறந்த விட்டது இந்த நிறுவனம்.

சட்டத்தை மீறுதல்

தவறான உத்தியை கடைபிடிக்க வேண்டும் என்பதில்லை. சட்டத்தை மீறி செயல்பட்டு மாட்டிக்கொண்டாலே போதும் மொத்த சொத்து மதிப்பையும் இழக்கலாம். பங்குச்சந்தைகளுக்கு சாப்ட்வேர் வழங்கும் நிறுவனமாக இருந்தது பைனான்ஸியல் டெக்னாலஜீஸ். அதனுடைய துணை நிறுவனமான நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச். இந்த நிறுவனம் முறைகேட்டில் சிக்கிக்கொள்ளவே பைனான்ஸியல் டெக்னாலஜீஸ் பங்கும் சொத்தை அழிக்கும் பங்குகளில் இடம் பிடித்தது.

SCROLL FOR NEXT