அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால் |
மாப்பிள்ளை அல்லது மணப்பெண் தேடிய அனுபவம் உண்டா உங்க ளுக்கு? சிலர் ஜாதகத்தில் ஆரம்பிப்பார்கள். பலர் மேட்ரிமோனியல் விளம்பரங்களில் தொடங்குவார்கள்.
தோதான வயது, உயரம், நிறம், படிப்பு என்பவைகளுடன் நல்ல குணம், வெளிநாட்டில் வேலை, பெரிய சம்பளம், நிறைய சொத்து ஆனால் ஒரே பிள்ளையாக இருந்தால் நல்லது என எதிர்பார்ப்புகள் ஏராளம், ஏராளம்! நீங்களே பார்த்து இருப்பீர்கள்.
பெண்ணின் 21 வயதில் தொடங்கும் தேடும் படலம், அது சரியில்லை இது சரியில்லை என 10 வருடங்களுக்குக் கூடத் தொலைக்காட்சி நெடுந்தொடர் போல நீளும்! அடாடா, பல நல்ல வரன்கள் கைவிட்டுப் போய் விட்டனவே என அவர்கள் உணரும் பொழுது அந்தப் பையன்கள் இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாகி வாழ்க்கையில் செட்டிலாகி இருப்பார்கள்.
நண்பர்களே, வேலைக்கு ஆள் எடுப்பதிலும் இதே கதைதான். ஒரே ஆளிடம் பல திறன்களை எதிர்பார்க்கிறோம். ஏமாறுகிறோம். தண்ணீர் அடைப்பை சரிசெய்ய வந்தவரிடம் மின் இணைப்பைச் சரி செய்யச் சொன்னால் எப்படி? கார் ஓட்டுநரிடம் கூட எவ்வளவு எதிர்பார்க்கப்படுகிறது! பத்திரமாய் வண்டி ஓட்டுபவராய், நம்பிக்கையானவராய், அவசரமென்றால் ஸ்டெப்னி மாற்றக்கூடியவராய் இருந்தால் போதாது! வெவ்வேறு ஊர்களின் தெருக்களும் நல்ல உணவு விடுதிகளும் தெரிந்திருந்தால்கூடப் போதாது.
அவர் கார் கதவைத் திறந்துவிடவேண்டும், சாமான் களைத் தூக்க வேண்டும், எப்பொழுது கூப்பிட்டாலும் வண்டி ஓட்ட ஓடிவர வேண்டும், இத்யாதி.. இப்படி எல்லாம் எதிர்பார்ப்பதால் குழப்பத்தில் பாதுகாப்பாக ஓட்டக்கூடிய ஓட்டுநரை இழந்து விடமாட்டோமா? எதிலும் மிகச் சிறந்ததை, உன்னதத்தைத் தேடும் நமது முயற்சி நாம் தோல்விக்கு விடும் அழைப்பாக அமைந்து விடக் கூடாதில்லையா?
ஒருவரை பணியமர்த்துமுன் அவரிடம் அப்பணிக்கேற்ற அறிவும் இன்றியமையாப் பண்புகளும் இருக்கின்றனவா என்று பார்த்தால் போதுமே. பணி உயர்வுக்கான பல நேர்முகத் தேர்வுகளில் நடக்கும் கூத்தைப் பார்த்து இருப்பீர்கள். பொது அறிவை சோதிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அவரின் ஞாபக சக்திதான் பரிசோதிக்கப்படும்.
நான் வங்கியில் பணியாற்றிய பொழுது கரண்ட் ரேஷியோ என்பது தான் எங்கும் விடாமல் தொடரும் கேள்வி! வேடிக்கை என்னவென்றால், கிளார்க் பதவிக்கு என்றாலும் முதுநிலை மேலாளர் நிலைக்கென்றாலும் இக்கேள்விக் கணையிலிருந்து தப்பிக்க முடியாது! அதைவிடக் கொடுமை ரெட் குளூசி ஆஃப் லெட்டர் கிரெடிட் (Red clause letter of credit) பற்றிய கேள்வி.
இத்தகைய கேள்விகள் கேட்பவரின் மேதாவிலாசத்தைக் காட்டுமே தவிர கேட்கப்படுபவரின் அறிவைத் தெரிந்து கொள்ள உதவாது.
இப்படிப்பட்ட ஏட்டுச் சுரைக்காய் கேள்விகளுக்கான பதில் களை வைத்து ஒருவரை எடை போடலாமா? அவரிடம் கொடுக்கப் போகும் பணியில் அவரது அறிவென்ன ஆற்றலென்ன என அறிந் தால் போதுமே.
மற்றவற்றை பொருட்படுத்தக் கூடாது. எல்லாவற் றையும் அறிந்தவருமில்லை ஏதும் அறியாதவருமில்லை என்றார் தாயுமானவர். சிறந்த கல்வி கற்றவரிடத்தும் ஆராய்ந்து பார்த்தால் அறியாமை இருக்கத்தான் செய்யுமென்கிறார் வள்ளுவர்.