கொரிய நிறுவனமான ஹூண்டாய் வெற்றிக்கு அடித்தளமிட்ட சான்ட்ரோ கார் மீண்டும் விற்பனைக்கு வருகிறது.
2000-வது ஆண்டுகளின் தொடக்கத்தில் சந்தைக்கு வந்தது சான்ட்ரோ. ‘டால் பாய்’ என்று செல்ல மாக அழைக்கப்பட்ட சான்ட்ரோவுக்கு இந்தியச் சந்தையில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்தே இந்நிறுவனம் கார் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நிறுவனமாக வளர்ந்தது.
2014-ம் ஆம் ஆண்டில் சான்ட்ரோ தயாரிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டது. தற்போது சந்தையில் அதிகரித்து வரும் போட்டியைச் சமாளிக்க சான்ட்ரோவை மீண்டும் அறிமுகப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மாருதி நிறுவனத்தின் ஜென் மற்றும் சமீபத்தில் அறிமுகமாகி அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் க்விட் ஆகிய கார்களுக்கு போட்டியாக சான்ட்ரோவை களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
க்விட் கார் வரவுக்குப் பிறகு ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரம்ப நிலை மாடலாக உள்ள இயான் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.
8 மாதங்களுக்கு முன் அறிமுகமான க்விட் இதுவரை 80 ஆயிரம் விற்பனையாகியுள்ளது.
2020-ம் ஆண்டில் தனது கார் விற்பனை இலக்கை 10 லட்சமாக உயர்த்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஹூண்டாய் சான்ட்ரோ பெருமளவு உதவும் என நம்புகிறது. தற்போது ஹூண்டாய் நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை 4,84 லட்சமாக உள்ளது.
புதிய சான்ட்ரோ வடிவமைப்பை ஹைதராபாத்தில் உள்ள அந்நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு மேற்கொண்டுள்ளது.
புதிய மாடால் மேம்பாட்டுக்கு ரூ. 1,000 கோடியை செலவிட சியோலில் உள்ள ஹூண்டாய் தலைமையகம் ஒப்புதல் அளித்துவிட்டது.
2018-ம் ஆண்டில் சான்ட்ரோ மீண்டும் சாலைகளில் புதிய எழுச்சியோடு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.