1980-ம் ஆண்டு வெளிவந்த ‘வறுமையின் நிறம் சிவப்பு’ திரைப்படத்தில் கதாநாய கன் கமல்ஹாசனும் அவரது நண்பர் களும் தங்கள் ஊரிலிருந்து கிளம்பி டெல்லி சென்று அங்கு வேலை தேடி அலைவார்கள். அது இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடிய காலம். நம் நாடு விடுதலை பெற்ற அடுத்த பல பத்தாண்டுகளில் தென்னிந்தியாவில் இருந்து பலர் வேலை தேடி வடமாநிலங்களுக்கு செல்லும் ஒரு போக்கு இருந்தது. அப்போதெல்லாம் தமிழகம், கேரளா, கர்நாடகா என தென்மாநிலங்களில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்பவர்களை ‘மதராஸி’ என ஏளனமாக அழைக்கப் பட்டனர். ஆனால் இந்த போக்கு அப்படியே மாற்றமடைந்துள்ளது.
கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வட மாநிலங்களில் இருந்து தென்பகுதிக்கு வந்து பலவகை யான வேலைகளையும் தொழில்களை யும் செய்பவர்களின் எண்ணிக்கை அதி கரித்து இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் வேக மான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படவில்லை என்பதே உண்மை.
உதாரணத்திற்கு, ஒரு சில வருடங்களுக்கு முன்பு கூட நம்மூரில் பானி பூரியும், பேல் பூரியும் எங்கே யாவதுதான் கிடைக்கும். ஆனால் இன்று சென்னை போன்ற நகரங்களில் தெருவுக்கு தெரு அவற்றை செய்து விற்கும் தள்ளுவண்டிகளும் கடைகளும் ஏராளம். செய்து விற்பவர்கள் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள். பீகாரில் இருந்தும், உத்தர பிரதேசத்தில் இருந்தும் கிளம்பி இங்கு வந்து, கிடைக்கும் வேலையை செய்பவர்கள் எத்தனை பேர்!
புலம்பெயர்தலும் பொருளாதார முன்னேற்றமும்
பொதுவாக, பொருளியல் பார்வையில் புலம்பெயர்வு என்பது தொழில்மயமாதலின் ஒரு அறிகுறியாகக் கருதப்படுகிறது. உற்பத்தித்திறன் குறைவாக இருக்கும் வேளாண்மைத் துறையில் இருந்து உற்பத்தித் திறன் அதிகமாக இருக்கும் தொழில் துறைக்கு மாறும்போது கிராமப்புறத்தில் இருந்து நகர்ப்புறம் நோக்கி நகரும் போக்கும் உருவாகும், இது தொழிலாளர்களின் கூலியை உயர்த்தி வாழ்க்கைத் தரத்தை யும் மேம்படுத்தும். இதுதான் பொருளா தார முன்னேற்றம் உண்டாவதற்கான காரணம் என்று வரலாற்று ரீதியான வாதத்தை பல பொருளாதார அறிஞர்கள் முன்வைத்து உள்ளனர்.
இது ஓரளவிற்கு உண்மை என்ற போதும், இந்த மாற்றமும் புலம்பெயர் தலும் அவ்வளவு மென்மையான முறையில் ஏற்படவில்லை என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. ஆனால், வளர்ந்த நாடுகளில் இவ்வாறுதான் பொருளாதார அமைப்பு மாறியது என்றும், சமீப காலத்தில் அதிவேக பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள மக்கள் சீனமும் இதே போக்கை கடைபிடித்துதான் இந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பது பெரும்பான்மை வாதமாக உள்ளது; நகரங்களுக்கு புலம்பெயர்ந்து வந்துவிட்டாலே நல்ல வேலையும் அதிகமான ஊதியமும் கிடைத்துவிடும் என்பது மாயை என்ற பிரதிவாதங்களில் நியாயம் உண்டு. இது இந்தியாவிற்கு மிகச் சரியாக பொருந்தும் என்பதை நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் வேலை சார்ந்த புலம்பெயர்வு
2016-17 ஆம் ஆண்டுக்கான பொருளா தார ஆய்வறிக்கை, இந்திய மக்கள் வேலை நிமித்தமாக நாட்டிற்குள் தங்கு தடையின்றி நடமாடுவதும், புலம் பெயர்வதும் அதிகரித்து இருக்கிறது என்கிறது. புதுவகையான ஆதாரங் களைக் கொண்ட ஒரு அத்தியாயத்தில் இது பற்றிய விரிவான தகவல்களைத் தந்துள்ளது. பொதுவாகவே, பொருளா தார ரீதியாக பின்தங்கி இருக்கும் பகுதிகளில் இருந்து கிளம்பி, வளர்ந்த அல்லது வளரும் பகுதிகளுக்கு மக்கள் புலம்பெயர்வார்கள். இந்தியாவில் ஏற் பட்டுக்கொண்டிருக்கும் புலம்பெயர்வும் இந்த சட்டகத்துக்குள்தான் இருப்பதாய் ஆய்வறிக்கை தரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு வகையான புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ஆய்வறிக்கை நமக்கு புலம்பெயர்வு தொடர்பான பல முக்கிய தகவல்களை தருகிறது: ஒன்று, 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தரும் விவரங்கள்; இரண்டாவது, 2011 முதல் 2016 வரையிலான முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளில் இரயில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள். புலம்பெயர்வின் போக்கை அறிய இது ஒரு புதிய அணுகுமுறை ஆகும்.
2001-2011 காலத்தில், புலம்பெயரும் உழைப்பாளி மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சராசரியாக 4.5 சதவீதம் வளர்ந்திருக்கிறது. இதே எண்ணிக்கை, 1991-2001 காலத்தில் கண்ட வளர்ச்சி 2.4 சதவீதமே ஆகும்.இந்தியாவின் மொத்த உழைப்புப் படையில் புலம் பெயர்ந்தவர்களின் பங்கு 2011-ல் 10.5 சதவீதம்; இது 1991 மற்றும் 2001 ஆண்டுகளுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வெறும் 8.1 சதவீதமே. இந்த ஆய்வு மற்றொரு சுவாரசியமான தகவலையும் தருகிறது. 1990 களில் பெண்களுக்கான உழைப்புப் படையில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது என்றாலும், அது 2000 களில் வேகமாக வளர்ந்தது மட்டுமின்றி,ஆண்களுக்கான வளர்ச்சியைவிட இருமடங்கு அதிகமாக இருந்திருக்கிறது என்றும் கூறுகிறது.
இவ்வாறு புலம்பெயர்பவர்கள் அதிக அளவில் உத்தர பிரதேசம், பீஹார் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து வருபவர்கள் என்றும், அவர்கள் நோக்கி செல்லும் மாநிலங்களில் முதன்மை இடங்களில் டெல்லி, மஹாராஷ்டிரா மற்றும் தமிழகம் தவிர கேரளம் மற்றும் கர்நாடகம் இருப்பதாகவும் தெரியவருகிறது. உதாரணத்திற்கு, 2015-16 இல் புலம்பெயர்ந்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் டெல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளுக்கு வேலை தேடி சென்றிருக்கிறார்கள். எந்தெந்த மாநிலத்தவர்கள் எங்கெங்கு செல்கிறார்கள் என்பதையும் வரைபடம் தந்து விளக்கியுள்ளது ஆய்வறிக்கை.
பெரிய மாநிலங்களுள் தமிழ்நாடு, புலம்பெயர்ந்து வருபவர்களின் புகலிடமாக மாறியிருப்பதால் அது தொடர்பான இரண்டு முக்கியமான போக்குகளை கவனிக்க வேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வந்து ஆலைத் தொழில்,கட்டிட வேலை முதல் உணவகங்களில் சமையல், சுத்தம் செய்யும் வேலைகளில் இருப்பவர்கள் பலரும் ஒரிசா, பீஹார் மற்றும் ஆந்திராவிலிருந்து வருபவர்கள் என்ற பொதுவான கருத்து ஒன்று உண்டு. இது உண்மை என்றபோதும், ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் வளர்ந்த மாநிலம் என்று கருதப்படும் குஜராத்தில் இருந்தும் தமிழகத்திற்கு வேலை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக, புலம்பெயர்ந்து இங்கு வருபவர்களில் பெரும்பாலானோர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தான் சென்று குவிகின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும்.
சவால்களும் புதிர்களும்
ஒரு மாநிலத்தில் புலம்பெயர்வு என்பது தொழில்மயமாதல் மற்றும் நகரமயமாதலின் பிரதிபலிப்பு என்றாகும்போது, அந்த மாநிலத்தின் கட்டமைப்பின் மீதும், அரசின்மீதும் சுமை அதிகமாகிறது. மேலும், இது திட்டமிடாத வகையில் நடக்கும்போது, புலம்பெயர்ந்து வந்தவர்கள் உட்பட அனைவருக்கும் அடிப்படை வசதிகளை உறுதிசெய்து, நிலைத்தகு முறையில் இந்த வளர்ச்சியை கொண்டு செல்லுதல் பெரும் சவாலாகிறது.புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு, தங்குவதற்கு அடிப்படை வசதிகள் கொண்ட இடம், சுகாதார வசதி, சமூகப் பாதுகாப்புத் தொகை,அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி போன்றவற்றை உறுதி செய்தல் என ஏராளமான சவால்கள் நம்முன் உள்ளன.
இறுதியாக, புலம்பெயர்தல் பற்றி ஆய்வறிக்கை பேசும்போது, இந்தியா வில் புலம்பெயர்தலின் போக்கு ஒரு புதிரை எழுப்புகிறது என்று கூறுகிறது. ஒரு நாட்டில் மூலதனம், மக்கள், சரக்கு ஆகியவை ஒரு மாநிலம் விட்டு மற்றொரு மாநிலம் செல்வதில் இருக்கும் தடைகள் குறைந்தால், மாநிலங்களுக்கு இடையே உள்ள பொருளியல் சார்ந்த வேறுபாடுகள் குறையும் என்ற ஒரு கருத்து உண்டு. ஏனெனில், இவை பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும் சக்திகள் எனவும், இவை சந்தையின் போக்குகளை கவனித்து நடமாடும்போது பின்தங்கி இருக்கும் மாநிலங்களும் முன்னேற்றம் காணும் என்பதற்கு வரலாற்றில் உதாரணங்கள் உண்டு. ஆனால் இந்தியாவில் இந்த சக்திகளால் மாநிலங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை குறைக்க முடியாமல் இருப்பது ஒரு முரண்பாடு என்கிறது ஆய்வறிக்கை. ஏன் இந்த முரண்பாடு?
நா. ரகுநாத், raghind@gmail.com