வணிக வீதி

குறள் இனிது: மகிழ்ச்சி கண்ணை மறைக்கலாமா?

சோம.வீரப்பன்

இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியின் சோர்வு (குறள்: 531)

கம்பர் காட்டும் இந்த ராமாயணக் காட்சியைப் பாருங்கள். வாலியை வதம் செய்து விட்டான் ராமன். வாலியின் தம்பி சுக்ரீவனுக்கு முடி சூட்டியாகிவிட்டது. இனி சுக்ரீவன் வானர சேனையை ராவணனுடன் போரிட அனுப்ப வேண்டும்.

ஆனால் சுக்ரீவனோ புதிதாய்க் கிடைத்த பதவியின் மயக்கத்தில், ராமனுக்கு உதவ வேண்டியதை மறந்து விட்டு கொண்டாட்டத்தில் களித்திருக்கிறான்!

இதைப் பார்க்கும் இலட்சுமணன், சுக்ரீவனிடம் வாலியைக் கொன்ற வில் இன்னமும் ராமரிடம் இருப்பதாக ஞாபகப்படுத்த சுக்ரீவன் தன் நிலை உணர்ந்து திருந்துகிறான்!

நண்பர்களே, சற்றே சிந்தியுங்கள். நாம் கோபப்படும் பொழுது தன்னிலை இழப்பது போலவே அபரிமிதமான மகிழ்ச்சியின் பொழுதும் நம்மை மறந்து விடுகிறோம்.

அச்சமயங்களில் அலட்சியம் பிறக்கிறது, கவனம் குறைகிறது, கடமை மறக்கிறது!

இவ்வளவு ஏன்? வீட்டில் நீங்கள் கேரம் போர்டு விளையாடுவதாக வைத்துக் கொள்ளுங்கள்.கடைசி நிலை. இது வரை சிறப்பாக ஆடி விட்டீர்கள்.உங்களுக்கு வெள்ளைக்காய்.

போர்டில் 1 வெள்ளையும்5 கருப்புக் காய்களும் உள்ளன. சிவப்பைப் போட்டு விட்டீர்கள்.குழியருகில் வெள்ளை. உங்கள் கையில் ஸ்டிரைக்கர்! சுற்றி இருப்பவர்கள் சத்தமிட்டு உற்சாகப்படுத்துகிறார்கள்.

அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? பலருக்கு follow விழ வேண்டுமே எனப் பயமும் பதற்றமும் இருக்கும். சிலருக்கோ இது என்ன பெரிசா, எனக்கு இது ஜுஜூபி எனத் தோன்றும்.

விளைவு? குறி பார்த்து அடிப்பதில் கவனம் குறையும்; திசையும் வேகமும் பிறழும்! கடினமான காய்களைக் கூட லாவகமாகப் போட்ட நீங்கள் மைனஸ் போட்டுவிட்டு விழிப்பீர்கள்!

காரணம் தெரியாததா என்ன? வெற்றிக்கு வேண்டியது திறமையான ஆட்டம்.அதற்குத் தேவை ஒருமித்த கவனம்.ஆனால் அடுத்தடுத்த வெற்றிகள் வந்ததால் கடைசியில் மனம் அலைபாய்ந்தது; திறமை இருந்தும் வெளிக் கொணர முடியாமல் போய்விட்டது!

தொழிலிலும் அலுவலகத்திலும் அப்படித்தானே.எடுத்த காரியங்கள் வெற்றி பெற்று விட்டால் கண்மண் தெரியாது.

உதாரணமாக பல உணவு விடுதிக்காரர்கள் விளம்பரம் செய்து முன்னணிக்கு வந்துவிட்டால் வெற்றிக்கு அடிப்படையான உணவின் தரத்தையே மறந்து விடுவார்கள்!

சில பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் உற்பத்தியாளர்களுக்குத் தமது பிராண்ட் பில்ட் அப் ஆனவுடன் விற்பனைக்குப் பிந்தைய சேவையில் கவனம் குறைந்துவிடும்!இவ்வாறு நிதானம் தவறும் பொழுது அவர்களின் விற்பனை சரிவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

ஒரு காலத்தில் அமெரிக்க அதிபர் முதல் பல முன்னணித் தலைவர்கள் கையில் தவழ்ந்த, பாதுகாப்புக்குப் பெயர் போன பிளாக்பெர்ரி கைபேசி ஞாபகம் இருக்கா? பின்னால் ஐபோன், ஆண்ட்ராய்டு போட்டி வருமெனத் தெரியாமல், தொழில்நுட்பம் மாறாமல் தன்னைவியந்து தானே கெட்டார்கள் அவர்கள்? எவ்வளவு வெற்றி வந்தாலும் அது தலைக்கு ஏறக்கூடாதில்லையா?

பெருமகிழ்ச்சிக்கிடையே காரியத்தை மறத்தல் மிகுந்த கோபத்தைக் காட்டிலும் தீங்கு விளைவிக்கும் என்கிறார் வள்ளுவர்.

SCROLL FOR NEXT