வணிக வீதி

பாரத் IV: ஆட்டோமொபைல் துறையின் பிரச்சினைகளும், சவால்களும்

எம்.ரமேஷ்

சுற்றுச்சூழல் பாதிப்பில் வாகனப் புகை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாகன புகை மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு விதிமுறைகளை கட்டாயமாக்கி வருகிறது. அந்த வகையில் பாரத் IV புகை மாசு கட்டுப்பாட்டுடன் வாகனங்கள் ஏப்ரல் 1 முதல் தயாரிக்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

புதிய விதிமுறைகளுக்கேற்ப வாகனங்களைத் தயாரிப்பதற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயார்படுத்தி வந்தாலும், ஏற்கெனவே பாரத் III புகை மாசு அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனையாகாமல் உள்ள வாகனங்களை என்ன செய்வது அவற்றை ஏப்ரல் 1-க்குப் பிறகு விற்க முடியுமா என்பன இத்துறை எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சவாலாகும்.

வாகனங்களின் புகை மாசு குறித்த விழிப்புணர்வு 1991-ம் ஆண்டில்தான் உணரப்பட்டது. தாராளமயமாக்கலால் வாகனப் பெருக்கம் அதிகரித்த அதேவேளையில் புகை மாசும் அதிகரித்தது என்பதை மறுக்க முடியாது. இதையடுத்து வாகனங்களில் கேடலிடிக் கன்வெர்டர் எனப்படும் புகை மாசைக் கட்டுப்படுத்தும் கருவி கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

1999-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் யூரோ I புகை மாசு விதிமுறைப்படி வாகனங்கள் தயாரிக் கப்பட வேண்டும் என்றும் 2000-வது ஆண்டு முதல் இது கட்டாயம் என்றும் உத்தரவிட்டது.

வாகன புகை மாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட மஷேல்கர் குழு பரிந்துரையை மத்திய அரசு ஏற்று யூரோ புகை மாசு விதிக்கு நிகரான அளவீடுகளை வகுத்தளித்தது. இதன்படி பாரத் I என்றும் அதைத் தொடர்ந்து படிப்படியாக மேம்பட்ட தொழில்நுட்பம் அடுத்தடுத்த நிலைகளில் அமல்படுத்தப்பட்டது. முதலில் பெரு நகரங்களில் இவற்றைக் கட்டாயமாக்குவது என்றும் பிறகு படிப்படியாக பிற நகரங்களில் அமல்படுத்துவது என்றும் விதிமுறை வகுக்கப்பட்டது. அதேபோல அதிக கரியமில வாயுவை வெளியிடாத காரியக் கலப்பு இல்லாத பெட்ரோல், டீசல் தயாரிக்க வேண்டிய கட்டாயமும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்பட்டது.

புகை மாசு அளவைக் கட்டுப்படுத்த வாகனங்களின் இன்ஜின் கம்பஸ்டனில் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டும். 2010-ம் ஆண்டு வரை பாரத் III என்ற புகை மாசு நிர்ணய அளவிலானதாக வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. இப்போது பாரத் IV புகைக் கட்டுப்பாட்டு விதிகளை உள்ளடக்கியதாக வாகனங்கள் ஏப்ரல் 1 முதல் தயாரிக்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக பாரத் V புகை அளவுக்குப் பதிலாக 2020-ம் ஆண்டிலிருந்து பாரத் VI என்ற அளவீட்டைக் கொண்டதாக வாகனங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறை அடுத்த கட்டத்துக்கு முன்னேறிய வாகனங்களைத் தயாரிக்கவேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தமட்டில் 2 ஸ்டிரோக் இன்ஜின் கொண்டவை படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு இப்போது முழுவதும் நான்கு ஸ்டிரோக் இன்ஜின் கொண்டவையாக தயாரிக்கப்படுகின்றன.

மிகவும் முன்னேறிய ஐரோப்பிய நாடுகளி லேயே யூரோ IV புகை மாசு கட்டுப்பாட்டு அள வுக்கு உயர ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு 13 ஆண்டுகள் பிடித்தன. ஆனால் இந்திய நிறுவனங்கள் 10 ஆண்டுகளில் அந்த இலக்கை எட்டி விட்டதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் வினோத் தாசரி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

2010-ம் ஆண்டிலிருந்தே பாரத் IV புகை மாசு அளவீட்டின்படி பொதுப் போக்குவரத்து வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

8.8 லட்சம் வாகனங்களின் கதி?

பாரத் IV புகை மாசு அளவின்படி வாகனங்கள் ஏப்ரல் 1-முதல் வெளியாக வேண்டும் என்ற உத்தரவு கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில் கார் மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் 8.8 லட்சம் வாகனங்கள் தேங்கியுள்ளன. இவை அனைத்தும் பாரத் III புகை மாசு அளவினதாகும்.

மத்திய அரசின் உத்தரவு கட்டாயமாகும் பட்சத்தில் இவை அனைத்தையும் மாற்ற வேண்டும். இதற்கு அதிகம் செலவாகும். இதைக் கருத்தில் கொண்டு இதற்கு தீர்வு காணும்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோரடங்கிய அமர்வு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அரசு எடுக்கும் முடிவு காரணமாக பொதுமக்கள் புகை மாசில் சிக்கி அவதிப்படாத வகையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி யுள்ளது. பிஎஸ் III புகை மாசு அளவீட்டில் தயாரிக்கப்பட்ட 16 ஆயிரம் கார்கள், 96 ஆயிரம் லாரிகள், 45 ஆயிரம் ஆட்டோ ரிக்�ஷாக்கள், 6.71 லட்சம் இரு சக்கர வாகனங்கள் தற்போது உள்ளன. இவற்றுக்கு என்ன தீர்வு என்று ஆட்டோமொபைல் வாகன உற்பத்தியாளர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

பாரத் IV புகை மாசு அளவீட்டிற்கிணங்க எரிபொருளைத் தயாரிக்க ஒரு எண்ணெய் சுத்திகரிப்பாலைக்கு ரூ. 18 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசோ பாரத் IV விதிமுறைகளை அமல்படுத்துவது கால தாமதமாக்கினால் அடுத்ததாக பாரத் VI விதிமுறையின் கால இலக்கை 2020-ல் எட்ட முடியாது என சுட்டிக் காட்டியுள்ளது.

புகை மாசு அளவில் 0.1 சதவீதம்தான் வித்தியாசம் உள்ளது எனவே பாரத் III விதிமுறையில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை அனுமதிக்கலாம் என்று மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ஹீரோ மோட்டார்ஸ் சார்பில் வாதிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வாகன விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள பாரத் III வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு தயாரிப்பு நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். டீலர்களிடம் மட்டும் 30 ஆயிரம் வாகனங்கள் தேங்கியுள்ளன.

ஒரு நடவடிக்கை அதன் தொடர் விளைவு என்பது இதுதான். புகை மாசு, பொதுமக்களை சுற்றுச் சூழலை பாதிக்கும் விஷயம். அதில் சமூக அக்கறையோடு நாட்டு நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. சமூக பொறுப்புணர்வோடு வாகனங்களை விதி முறைகளின்படி தயாரிக்க வேண்டிய அவசியமும் நிறுவனங்களுக்கு உள்ளது. இதில் ஒருவர் தங்கள் மீதுள்ள பொறுப்புணர்வை மறந்தாலோ அல்லது அமல்படுத்த தவறினாலோ அது பொதுமக்களை, சூழலை பாதிக்கும் விஷயம் என்பதை இரு தரப்பும் உணர்ந்து உரிய தீர்வை காண வேண்டியது அவசர அவசிய மானதாகும்.

- ramesh.m@thehindutamil.co.in

SCROLL FOR NEXT