வணிக வீதி

முதலீடுகளை முடக்கிய வன்முறை!

எம்.ரமேஷ்

நெருப்பை அணைக்க தண்ணீரைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் தண்ணீருக்காக நெருப்பு மூண்டால் அதை எதைக் கொண்டு அணைப்பது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீருக்காக ஏற்பட்ட வன்முறைத் தீ-யின் நாக்குகள் அம்மாநிலத்தின் மீது முதலீட்டாளர்கள் வைத்திருந்த நம்பிக்கையும் கபளீகரம் செய்து விட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் மிகப் பிரம்மாண்டமான அளவில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. ரூ.133 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

ஏழுமாதங்கள் கடந்துள்ள நிலையில் ஒருசில நிறுவனங்களே தொழில் தொடங்க ஆரம்ப கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளன.

முதலீட்டாளர் மாநாட்டில் 122 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின இவற்றில் 97 நிறுவனங்களின் முதலீடு மிக அதிகம். குறிப்பாக ரூ. 5 கோடிக்கு மேலான முதலீட்டில் தொடங்கவிருந்த நிறுவ னங்களின் எண்ணிக்கை 57. இந்த நிறுவனங்கள் மாநில தொழில்துறை முதலீட்டு அனுமதியைப் பெற வேண்டும். ரூ. 15 கோடி முதல் ரூ. 500 கோடி வரையிலான முதலீடுகளுக்கு மாநிலத்தில் ஒற்றைச் சாளர அனுமதி குழு (எஸ்எல்எஸ்டபிள்யூசிசி) அனுமதி வழங்கும். ரூ. 500 கோடிக்கு மேலான முதலீடுகளுக்கு மாநில உயர்நிலை அனுமதி குழு (எஸ்ஹெச்எல்சிசி) அனுமதி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதுவரையில் 57 ஒப்பந்தங்களில் 12 நிறுவனங் களுக்கு மட்டும் எஸ்எல்எஸ்டபிள்யூசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு இன்னமும் நிலம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதன் பிறகு தண்ணீர் வசதி, மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் நடைமுறைக்கு வருவதில்லை. கடந்த 6 ஆண்டுகளில் கையெழுத்தாகும் முதலீட்டு ஒப்பந்தங்கள் மற்றும் அவை நிறைவேற்றப்படும் எண்ணிக்கை ஆகியன படிப்படியாகக் குறைந்து வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதி குறைவாக இருப்பதாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். நிலங்களுக்கான அனுமதி வழங்குவதில் கர்நாடக அரசு மிகவும் மெதுவாக செயல்படுவதும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கர்நாடக மாநிலத்தில் அமைய வேண்டிய ஹீரோ மோட்டா கார்ப் ஆலை அண்டை மாநிலமான ஆந்திரத்துக்கு போய் விட்டது. 2014-ல் ரூ.2,200 கோடி முதலீட்டு ஆலையை கர்நாடக அரசு கோட்டை விட்டது. இதேபோல 2013-ல் போஸ்கோ ஆலை கர்நாடகத்தில் 530 கோடி டாலர் முதலீட்டில் அமைக்க விருந்த ஆலை திட்டத்தைக் கைவிட்டது.

கர்நாடக அரசில் நிலவும் வரிப் பிரச்சினை காரணமாக தனது சரக்கு முனையத்தை தெலங் கானாவுக்குக் கொண்டு சென்று விட்டது அமேசான்.

ரூ. 25 ஆயிரம் கோடி நஷ்டம்

இரண்டு நாள் வன்முறையில் ரூ. 25 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என தொழில்துறை கூட்டமைப்பான அசோசேம் மதிப்பிட்டுள்ளது. ஆனால் இழப்பின் அளவு முற்றிலுமாக மதிப்பீடு செய்யப்பட்டபிறகு இது மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஜவுளித் தொழில் பாதிப்பு

ஒரு நாள் வன்முறையால் ரூ. 900 கோடி அளவுக்கு ஜவுளித் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக ஃபிக்கி குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே பிஎஃப் பிரச்சினைக்காக ஜவுளித் தொழிலாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் செய்தனர். தற்போது இரண்டு நாள் வன்முறை காரணமாக இத்தொழில் முடங்கிவிட்டது. ஏறக்குறைய மேலும் தொடர் விடுமுறைகள் காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்ய வேண்டிய ரூ. 5 ஆயிரம் கோடி பெறுமான பொருள்கள் தேங்கியதாகவும் ஃபிக்கி தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறை

இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் பெங்களூரு நகரில் இந்த வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான். இந்த வன்முறை காரணமாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பணிகளை உரிய நேரத்தில் செய்து தர முடியாத நிலைக்கு ஐடி நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இதனால் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை ஹைதராபாத் அல்லது சென்னைக்கு மாற்றிவிடலாமா என்று பரிசீலிப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த நிபுணர் கள் குறிப்பிடுகின்றனர்.

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பெரும் பாலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நிறுவனங் கள்தான். இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து அந்நிறுவனங்களுக்கு இங்குள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை. இருந்தா லும் ஊடகங்கள் வாயிலாக அறிந்த நிறுவனங்கள் தங்களது ஆர்டர்கள் தாமதமாவதற்காக கடுமையாக கோபமடைந்துள்ளன. இதனாலேயே பகுதியளவிலாவது இடமாற்றம் செய்ய ஐடி நிறுவனங்கள் முயற்சிப்பதாகத் தெரிகிறது.

இந்த வன்முறை காரணமாக ஐடி நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு வர்த்தகம் கடுமையாக பாதிக்கும் என்று பலரும் தெரிவிக்கின்றனர். மலேசியாவிலிருந்து சுற்றுலாவாக பெங்களூருக்கு வந்திருந்த பயணிகள் பலரும் பீதியிலேயே இரண்டு நாள்கள் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த அனுபவத்தை சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, சர்வதேச ஊடகங்களிலும் பதிவு செய்துள்ளனர்.

இந்த வன்முறைகள் அனைத்துமே பெங்களூர் மீதான அபிப்ராயத்தை சர்வதேச அளவில் சிதைத்துள்ளது. பெங்களூரில் தொழில் தொடங்க ஒப்புக் கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்களும் தங்களது முடிவை மறு பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.

புகழை மீட்க நடவடிக்கை

இரண்டு நாள் வன்முறையில் பெங்களூருவை பற்றி ஏற்பட்டுள்ள அபிப்ராயத்தை போக்க அரசு தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது. மாநிலத் தின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் எம் கார்கே, தனிப்பட்ட முறையில் முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் ஆர்.வி. தேஷ்பாண்டே, தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிக்கையில் மாநிலத்தில் அமைதி நிலவுகிறது என்று கூறுகிறார்.

பெங்களூரு நகரில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டதோடு நகரில் பெருமளவு மனிதவளம் இருப்பதாகவும் அதை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நியூயார்க் நகரில் இரட்டைக்கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட போது அங்கு சகஜ நிலை திரும்ப 6 மாதங்கள் ஆனது. அதைப்போல பெங்களூருவில் நிலைமை இல்லை. ஓரிரு நாளில் சகஜ நிலை திரும்பியுள்ளது. எனவே முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி நீர் பிரச்சினை உணர்ச்சி ரீதியிலான விஷயம், இதனால் மக்கள் சிறிது கோபப்பட்டு விட்டனர். இதுபோன்ற பிரச்சினை இதற்கு முன்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதை வர்த்தகர்கள், தொழில்துறையினர் ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை என அமைச்சர் தேஷ்பாண்டே கூறும் விளக்கத்தை முதலீட்டு நிறுவனங்கள் நம்புமா?

அமைதியான சூழல், முதலீட்டுக்கு ஏற்ற சூழல், தடையற்ற மின் வசதி, வரிச் சலுகை, சட்டம் ஒழுங்கு முழுமையாக பராமரிப்பு உள்ளிட்ட விஷயங் களைக் கூறித்தான் பெரும்பாலான மாநிலங்கள் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. ஆனால் இனி பெங்களுரூவில் முதலீடு செய்வதற்கான காரணங்களை தேட வேண்டி இருக்கிறது. மோச மாகி வரும் வானிலை, இட நெருக்கடி, போக்கு வரத்து நெரிசலுடன் இப்போது, உள்நாட்டுக் கல வரம், அடிக்கடி மக்கள் கொந்தளிப்பும் சேரும் பட்சத் தில் ஏன் பெங்களுரூக்கு செல்ல வேண்டும் என்ற கேள்வி முதலீட்டாளர்களுக்கு எழுவது நியாயமே.

சுய லாபத்துக்காக மக்களை வன்முறையில் தூண்டுவது மாநில வளர்ச்சிக்கு ஒரு போதும் உதவாது. கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிந்துவிட்டது பெங்களூரு!

- ramesh.m@thehindutamil.co.in

SCROLL FOR NEXT