வணிக வீதி

இது எஸ்யுவி-க்களின் காலம்!

செய்திப்பிரிவு

கார்களில் கம்பீரம், சொகுசு மற்றும் அதிக பயணிகள் செல்வதற்கு ஏற்றது எஸ்யுவி க்கள்தான். சமீபகாலமாக எஸ்யுவிக்களின் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் இதன் விற்பனையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. நான்கு கார்கள் விற்பனையாகிறதென்றால் அதில் ஒன்று எஸ்யுவி-யாக உள்ளதாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவிக்கிறது.

ஆண்டுதோறும் எஸ்யுவி-க்களின் விற்பனை அதிகரித்து வருவது இத்தகைய பிரமாண்ட கார்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ளதையே உணர்த்துகிறது. 2010-ம் ஆண்டில் 14 சதவீதமாக இருந்த கார் விற்பனை மார்ச் 2017-ல் 25 சதவீதத்தைத் தொட்டுள்ளது.

எஸ்யுவி-க்களில் பெரும்பாலும் டீசல் இன்ஜின்தான் பயன்படுத்தப் படுகின்றன. இருப்பினும் எஸ்யுவி-க்களின் விற்பனை 30 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் கார்களின் விற்பனை வளர்ச்சி 4 சதவீதமாக இருந்தது. இந்த அளவுக்கு அபரிமித வளர்ச்சியை எஸ்யுவி-க்கள் எட்டியுள்ளன.

சர்வதேச அளவில் எஸ்யுவி-க்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. அதே சூழல் இப்போது இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. இது ஆரோக்கியமான சூழல்தான். ஆனால் வாகனப் பெருக்கத்தை சமாளிக்க போதிய கட்டமைப்பு வசதிகள் அதாவது சிறந்த சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஹூண்டாய் நிறுவனத்தின் சந்தைப் பிரிவு இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவாத்ஸவா குறிப்பிட்டுள்ளார்.

இப்போது ஏற்பட்டுள்ள எஸ்யுவி-க்கள் மீதான ஆர்வம் அடுத்த ஓராண்டுக்கு தொடரும். குறிப்பாக சாகச பயணங்களுக்கான எஸ்யுவி-க்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதாக அவர் கூறினார். எஸ்யுவி-களில் ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட மாடல்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மாருதி பிரெஸ்ஸா, ஃபோர்டு எகோஸ்போர்ட் ஆகியன பெருமளவிலான மக்களை ஈர்த்துள்ளன.

கிராஸ் ஓவர், மினி எஸ்யுவி-க்கள், சிறிய ரகக் கார்களில் சில எஸ்யுவி-க்கள் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ரெனால்ட் க்விட் மாடல் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதற்கு அதன் வடிவமைப்பும் முக்கியக் காரணமாகும். ரெனால்ட் டஸ்டர் எஸ்யுவி-யின் சிறிய வடிவமாக ரெனால்ட் க்விட் இருப்பதே அதன் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்று இத்துறை வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.

அனைத்துமே எஸ்யுவி-க்கள் அல்ல

கார் பிரியர்கள் சந்தையில் வந்துள்ள அனைத்து மாடல் கார்களுமே எஸ்யுவி-க்கள் அல்ல என குறிப்பிடுகின்றனர். அதாவது எஸ்யுவி-க்களுக்கென சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஆனால் இவை ஏதும் சில மாடல்களில் கிடையாது என்கின்றனர். அதாவது எஸ்யுவி-க்கள் என்றாலே பொதுவாக நான்கு சக் கரங்களும் (4X4) இன்ஜினு டன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் இதன் இழுவைத் திறன் அதிகமாக இருக்கும்.

இதனால் கிராஸ் ஓவர் எனப்படும் எஸ்யுவி மற்றும் சிறிய கார்களின் கூட்டுக் கலவை யான தயாரிப்பு களுக்கும் வரவேற்பு அதிகரித் துள்ளது. இவற்றில் சிறிய ரக டீசல் என்ஜின் மற்றும் இவற்றின் நீளம் 4 மீட்டருக்கும் குறைவாக உள்ளன. மேலும் இவை விலை குறைவாக இருப்பதும் கூடுதல் சாதக அம்சமாகும். இதனால் சிறிய ரக காரிலிருந்து எஸ்யுவி-க்களுக்கு மாறுவோரது தேர்வாக இத்தகைய கிராஸ் ஓவர்கள் உள்ளன.

விற்பனை வளர்ச்சியை இதே நிலையில் நீடிப்பதற்காக இதுபோன்ற புதிய அறிமுகங்களை சந்தைப்படுத்தவும் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ஹூண்டாய், ரெனால்ட் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை நடுத்தர மக்களின் தேவைக்காக அறிமுகப்படுத்த உள்ளன. உயர் ரக பிரிவினருக்காக டொயோடா, ஆடி நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை களமிறக்க உள்ளன.

சர்வதேச அளவில் எஸ்யுவி-க்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. அதே சூழல் இப்போது இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. இது ஆரோக்கியமான சூழல்தான்.

SCROLL FOR NEXT