மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்றாலோ அல்லது ஒரு சின்ன விருந்து என்றாலோ, உடனடியாக பீட்சா, பர்க்கர், கேஎப்சி, மெக்டொனால்ட் என கிளம்பி விடுகிறது ஒரு பட்டாளம். யோசித்து பாருங்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பான நிலைமையை..
இட்லி, தோசை என்றாலே அது தீபாவளிக்கும் பொங்கலுக்குமான சிறப்பு உணவாக அந்த நாட்கள் இருந்தன. இன்று இந்தியாவின் சிறிய நகரங்களில்கூட சாண்ட்விச் என்பது சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது. இந்த உணவு கலாச்சார மாற்றம் என்பது சாதாரணமாக நிகழ்ந்து விடவில்லை. இதற்கு பின்னாலும் சர்வதேச பொருளாதார தொடர்புகள் இருப்பதுதான் உண்மை. நமது உணவு பழக்க வழக்கம் மாறியுள்ளதுடன், நுகர்வின் விகிதமும் அதிகரித்துள்ளது. 1991 ஆம் ஆண்டுகளிலிருந்து விறு விறு வென இந்தியா உள்வாங்கிக் கொண்ட புதிய பொருளாதார கொள்கைகளின் உப விளைவுகளில் ஒன்றுதான் இந்த உணவு கலாச்சார மாற்றம்.
உப விளைவு
இந்த ஆண்டு தாராளமயமாக்கலின் 25 ஆம் ஆண்டு என நினைவூட்டப் படுகிறது. சர்வதேச அளவில் திறந்த சந்தை பொருளாதார நாடாக இந்தியா இன்னும் முழுமையாக திறந்துவிடப்பட வில்லை என்றாலும் அதில் 50% அளவை யாவது இப்போது எட்டி விட்டது. இந்த 50% சந்தை சூழ்நிலையிலேயே இந்தியாவின் பாரம்பரிய உணவுகள் காணாமல் போய்விட்டன என்கிறது ஆய்வுகள். 100% திறந்த பொருளாதார சந்தை நாடாக இந்தியா மாறும் காலகட்டங்களில் உணவு தானிய உற்பத்தியை நம்பி இருப்பவர்களின் நிலைமை என்னாவது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.
இந்த புதிய பொருளாதார கொள்கையால் யாருக்கு என்ன பலன்? ஏன் வேண்டும் பொருளாதார சீர்திருத்தம்? இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மீது வளர்ந்த நாடுகளின் ஆதிக்கம் உள்ளிட்ட பொருளாதார அரசியல் விவகாரங்கள் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் உணவு அரசியல் எந்த விவாதங்களும் இல்லாமல் மக்கள் மத்தியில் எளிதில் ஊடுருவி விட்டது. சுவை மட்டுமா இதற்குக் காரணம்.
உணவு உற்பத்தியில் புதிய பொருளாதார கொள்கை ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில்தான் இதனைப் பார்க்க முடியும் என்கிறது சரிவிகித உணவு என்கிற ஆய்வறிக்கை. உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த இருபது ஆண்டுகளில் இளைய தலைமுறையினர் சப்பாத்தி சாப்பிடுவதைவிட பீட்சா சாப்பிடுவது அதிகரித்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அதாவது நமது உணவு பழக்கம் எந்த அளவுக்கு வேறுபட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சான்று.
அந்த அறிக்கையில் 1961 முதல் 2013 வரையிலான இந்தியாவின் உணவு பழக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளி யிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் தனிநபர் உணவு நுகர்வு குறித்த தகவல்களில் முக்கியமான இரண்டு விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. விவசாய உற்பத்தியில் குறிப்பிட்ட பயிரை விளைவிப்பதும், அதற்கான இடைவெளி எதனடிப்படையில் உருவாக்கப்படுகிறது? நுகர்வதற்கு ஏதுவான விலையில் உள்ள உணவு எது என்பது குறித்தும் ஆய்வு செய்துள்ளது.
இந்த கேள்விகளுக்கான பதில், அந்த உணவின் வர்த்தகம் மற்றும் உணவுதானிய கையிருப்பு சார்ந்து முடிவு செய்யப்படுவதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த உணவுக்கு செலவிடப்படும் பணம் எங்கு செல்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வில் பல உணவுப் பொருட்களின் நுகர்வு விகிதத்தையும் பட்டியலிட்டுள்ளது. குறிப்பாக சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட 17 முக்கிய உணவு பொருட்கள் அதிகமாக நுகரப் பட்டு வருகிறது என்கிறது. குறிப்பாக முட்டையும், ஆல்கஹாலும் இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளன.
உணவுத் துறை
இந்திய உணவுத்துறை வளர்ச்சி ஆண்டுக்கு 11 சதவீதமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவின் உணவுத்துறை 3,971 கோடி டாலர் மதிப்பு கொண்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 6,500 கோடி டாலர் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை எல்லாவற்றையும் விட இந்த துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள்தான் நமது உணவு கலாச்சாரத்தை முடிவு செய்கிறது. தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் புள்ளிவிவரங்கள்படி 2010-2015 ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் இந்த துறையில் 670 கோடி டாலர் வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளன. இது அடுத்த பத்தாண்டுகளில் 3,300 கோடி டாலராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.
நூடுல்ஸ்
இந்த உணவு மாற்றத்தில் சிறப்பு மிக்க பல்வேறு சிறுதானியங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தற்போதைய வளர்ச்சியிலிருந்து இருமடங்காக இருக் கும் என்கிற புள்ளிவிவரம் மட்டுமே சிறுதானிய உற்பத்தியில் குறிப்பிடப் படுகிறது. ஆனால் இளையோர்களின் மிகப் பெரிய விருப்ப உணவாக உள்ள நூடுல்ஸ்க்கு இந்தியாவில் சுமார் ரூ.2,000 கோடிக்கு சந்தை வாய்ப்பு உள்ளது.
நுகர்வு விகிதம்
அதே சமயத்தில் தாராளமயமாக்க லுக்கு பிறகு இந்தியர்களின் சராசரி உணவு நுகர்வு விகிதம் அதிகரித்துள்ளது. 1961 ஆம் ஆண்டிலிருந்து 1991 வரையிலான காலகட்டத்தில் 305 கிலோவாக இருந்த இந்தியர்களின் சராசரி தனிநபர் நுகர்வு 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு 368 கிலோவாக அதிகரித்துள்ளது என்கிறது அந்த ஆய்வு. 2013 காலகட்டத்தில் இது 478 கிலோவாக உயர்ந்துள்ளது. அதாவது தாராளமயமாக்கலின் 22 ஆண்டுகளில் இந்த உயர்வு நிகழ்ந்துள்ளது.
உதாரணமாக முட்டையின் நுகர்வை பார்க்கலாம் 1961 ஆம் ஆண்டை விட 2013 ஆம் ஆண்டுகளில் இதன் நுகர்வு விகிதம் சுமார் 8 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் தானியம் மற்றும் பருப்பு வகைகளின் நுகர்வு குறைந்துள்ளது. 1991க்கும் 2013க்கும் இடையில் விலங்குகளின் கொழுப்பு வகைகளும் நுகர்வில் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக ஆடு,மாடு,பன்றி இறைச்சிகளின் நுகர்வு குறைந்து கோழி இறைச்சியின் நுகர்வு அதிகரித்துள்ளது.
அதேபோல கடந்த 20 ஆண்டுகளில் ஓட்டல்களின் வளர்ச்சியும் அதிகரித் துள்ளது. 34% மக்கள் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது வெளியில் உணவருந்துகின்றனர். 12% பேர் தினசரி ஓட்டல்களுக்குச் செல்கின்றனர். ஓட்டல்களுக்குச் செல்வோரில் இரவு நேர உணவுக்கு 60 சதவீதம் பேர் செல்கின்றனர். தனிக்குடும்பங்களின் முதன்மையான தேர்வாக ஓட்டல்கள் உருவாகிவிட்டன.
இந்தியாவின் சிறப்பு மிக்க தானியங்களின் நுகர்வு விகிதமும் குறைந்துள்ளதால் சராசரி இந்தியர்களின் கலோரி விகிதாச்சாரமும் குறைந்து வருகிறது. இந்த நுகர்வு பழக்க மாற்றத்தால் ஏழைகளின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது என்கிறது ஆய்வு. அதாவது உணவுக்காக செலவிடப்படும் தொகை எங்கு செல்கிறது என்பதை பொறுத்தும் இந்த பொருளாதார தாக்கம் உள்ளது.
ஒப்பீட்டளவில் இந்தியா மற்றும் சீனாவின் உணவு நுகர்வை எடுத்துக் கொள்வோம். கடந்த 25 ஆண்டுகளின் சீனர்களின் உணவு நுகர்வு சதவீதம் அதிகரித்துள்ளது. 1961 ஆம் ஆண்டு களில் ஒரே அளவாக இருந்த இரண்டு நாடுகளின் உணவு நுகர்வு விகிதாச்சாரம் 2013 நிலவரப்படி சராசரியாக ஒரு இந்தியனின் உணவு நுகர்வை விட சீனர்கள் நுகர்வு விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது சீனர்களுக்கு கிடைக்கும் சராசரி உணவு நுகர்வில் பாதியளவுக்குத்தான் இந்தியர்களுக்கு கிடைக்கிறது.
என்ன காரணம்.
உணவு உற்பத்தியிலும், உணவு நுகர்விலுமான இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் நாம் பொருளாதார சீர்திருத்தங்களை எங்கிருந்து தொடங் கினோம் என்பதுதான். சீனா தனது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை களை முதலில் தொடங்கியது விவசாய துறையிலிருந்துதான். ஆனால் இந்தியாவோ தனது சீர்திருத்தங்களை மேலிருந்து தொடங்கியது. அதாவது வர்த்தகம் மற்றும் தொழில்துறை யில்தான் கவனம் குவித்தது. இதன் முடிவு என்னவானது? சீனாவின் விவசாய வளர்ச்சி மெல்ல அதிகரித்து வருகிறது. இந்தியாவோ இந்த விஷயத்தில் இன்னும் தடுமாறிக் கொண்டிருகிறது. இந்தியா எதிர்காலத்தில் எப்படி ஆரோக்கியமாக இருக்கும்.