பழைய வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்த தாமாக முன்வந்து வாகனங்களை புதுப்பிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் 2005-ம் ஆண்டுக்கு முந்தைய வாகனங்களை முற்றிலுமாக உபயோகத்திலருந்து நீக்கிவிட அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி 2 கோடியே 80 லட்சம் வாகனங்களை முற்றிலுமாக அழித்துவிட மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.
இதைச் செயல்படுத்துவது தொடர் பாக அமைச்சகம் உருவாக்கிய கருத் துருதான் தாமாக முன்வந்து வாகனங் களை புதுப்பிக்கும் திட்டமாகும்.
பழைய வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனங்களை வாங்கினால் அவற்றுக்கு 50 சதவீத உற்பத்தி வரிச் சலுகை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், பழைய வாகனங்களுக்கு ஓரளவு நியாயமான விலையும், சலுகையையும் வாகன உற்பத்தியாளர்கள் அளிப்பர். இதன்படி புதிய வாகனங்களுக்கு 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை விலைச் சலுகைக் கிடைக்கும். இந்த பரிந்துரையைச் செயல்படுத்த உள்ளதாகவும், இதன் மூலம் பழைய வாகனங்கள் வெளிவிடும் புகையைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே நிதி அமைச்சகம் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு மாற்று யோசனையையும் தெரிவித் துள்ளது. அதாவது உற்பத்தி வரிச் சலுகையை வாகனத்தை புதிதாக மாற்றும் வாடிக்கையாளருக்கு நேரடி யாக அளிப்பதற்கான சாத்தியக்கூறு களை ஆராயுமாறு தெரிவித்துள்ளது.
பழைய வாகனங்களை புழக்கத்தி லிருந்து நீக்குவதில் நிதி ஆயோக் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. பயனாளிகளுக்கு ரொக்க ஊக்கத் தொகை அளிப்பதில் உயர்ந்தபட்ச அளவை நிர்ணயிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
உற்பத்தி வரிச்சலுகையானது பெரிய வாகனங்களுக்கு அதிகமாக கிடைக்கும். ஒப்பீட்டளவில் சிறிய வாகனங்களுக்கு கிடைக்கும் ஊக்கத்தொகை குறைவாக இருக்கும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் வாகனப் புகை மாசு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறையும் என்றும் பழைய வாகனங்கள், அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்கள் இவை அனைத்தும் புதியன வாக மாறும்போது எரிபொருள் நுகர்வு ஆண்டுக்கு 320 கோடி லிட்டர் அளவுக்கு மிச்சமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கு அரசு செலவிடும் அந்நியச் செலாவணி கணிசமாகக் குறையும்.
புதிய வாகன விற்பனை அதிகரிக்கும் போது அது ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று இத் துறை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாகனப் புகையைப் பெருமளவு வெளியிடுபவை டீசல் வாகனங்கள் என்பதால் டெல்லி மற்றும் என்சிஆர் பிராந்தியத்தில் 2,000 சிசிக்கு மேற்பட்ட கார்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் பழைய வாகனங்கள்தான் அதிக அளவில் புகையை வெளியிடுகின்றன என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வாதிட்டு வருகின்றன.
நிறுவனங்களின் கருத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. பழைய வாகனங்கள்தான் எவ்வித புகைக் கட்டுப்பாடும் இல்லாமல் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தினாலே புகை மாசு குறையும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (சியாம்) கருத்து தெரிவித்துள்ளது.
பழைய வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை விதித்தால் அரசின் மீது கடும் எதிர்ப்பு உருவாகும். பழைய வாகனங்கள் மூலமே வருவாய் ஈட்டும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக இதை எதிர்ப்பர். இதற்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பதன் மூலம் பழைய வாகனங்களை புழக்கத்திலிருந்து ஒழிக்க அரசு திட்டமிட்டுள்ளது. பொது வாக வாகனத்தின் விலையில் 50 சதவீத அளவுக்கு உற்பத்தி வரி மற்றும் பிற வரிகள்தான் இடம்பெறுகின்றன.
புதிய வாகனங்கள் வாங்குவதற்கு அரசு ஊக்குவித்தால் அதன் பலன்கள் பலப் பல. முதலாவதாக அரசுக்கு வாகன விற்பனை மூலம் வரி வருவாய் கிடைக் கும். அடுத்து உரிமையாளரும் பயனடை வர். மூன்றாவதாக வாகன உற்பத்தி பெருகும். பழைய வாகனங்களை திரும்ப எடைக்குப் பெறுவதால் உருக்கு நிறுவனங்களுக்குத் தரமான பழைய இரும்பு கிடைக்கும். இல்லையெனில் ஆட்டோமொபைல் துறைக்குத் தேவையான இரும்பை இறக்குமதி செய்தாக வேண்டியுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு உயரும். இவையனைத்தும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என சியாம் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.
புதிய வாகனங்கள் சாலைகளில் வரும்போது செயல்திறன் மேம்படும். எரிபொருள் செலவு குறையும். அதேசமயம் சுற்றுச் சூழல் மாசுபடுவதும் குறையும். இதனால் அரசுக்கு எந்தத் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பாது. அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இந்த யோசனை மிகச் சரியானது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த சில வழிகாட்டுதலையும் சியாம் பரிந்துரைத்துள்ளது.
பழைய வாகனங்கள் வைத்திருக்கும் கடைசி நபர் வரை இத்திட்டத்தின் பலன் சென்று சேர வேண்டும். அதேபோல பழைய வாகனங்களை இரும்பாக உருக்க முறைப்படி லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களிடம் அளிக்க வேண்டும்.
பழைய வாகனங்களை அழிப்பது ஆர்டிஓ அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற வேண்டும். பழைய வாகனங் களுக்கான பதிவு எண்களை நீக்கி அவை அழிக்கப்பட்டதற்கான சான்றை (சிஓடி) உரிமையாளருக்கு உடனுக்குடன் அளிக்க வேண்டும்.
இந்த சான்றிதழை ஊக்கத் தொகை பெறுவதற்கான ஆவணமாகக் கருதி அதற்குரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்று சியாம் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.
வாகனங்களை அழிப்பதற்காக எம்எஸ்டிசி நிறுவனத்தை அரசு நியமித் துள்ளது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் பழைய வாகனங்களை அழிப்பதற்கான இடங்களை உருவாக்கும் பணியை மேற்கொள்ளும். மாநில அரசுகள் தங்களது போக்குவரத்துக் கழக பேருந்துகளை மாற்றும்பட்சத்தில் அவற்றுக்கு முழு உற்பத்தி வரி விலக்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 8 பெருநகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள் ளது. 89 லட்சம் வாகனங்கள் மற்றும் ஒரு கோடியே 47 லட்சம் வர்த்தக வாகனங்களை அழிக்க திட்டமிடப்பட் டுள்ளது. சுற்றுச்சூழல் மாசைக் குறைப்பதில் நாம் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது.