வணிக வீதி

குறள் இனிது: திட்டங்கள் போதாது.. நடத்திக் காட்டணும்..!

சோம.வீரப்பன்

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர்

(குறள் 640)

'செயல்படுத்துவதின் 4 படிகள்' (The 4 disciplines of execution) என்று ஒரு புத்தகம். க்ரிஸ் மைக்செஸ்னே மற்றும் இருவர் எழுதியது. காகிதத்தில் காட்டப்படும் வெறும் திட்டங்களும் வெட்டிப் பேச்சுமாக மட்டும் இல்லாமல், செயலில் இறங்கிச் சாதித்துக் காட்டுவது எப்படி என்பதை அன்றாட உதாரணங்களுடன் விளக்கும் அருமையான நூல் இது!

நிறைய நிறுவனங்கள் 5,10 ஆண்டுகளில் இவ்வளவு விற்பனை, இவ்வளவு இலாபம், என்றெல்லாம் பிரமாதமாய் கணிணி மூலம் சதவீதக் கணக்குகள் போட்டுச் சொல்வார்கள். ஆனால் அடுத்த வருடமே காணாமல் போய் விடுவார்கள்!

`நாம் எதிர் காலத்திற்குத் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் பொழுது நமக்கு நடப்பதற்குப் பெயர்தான் வாழ்க்கை' என்பார் கார்டூனிஸ்ட் அலென் சாண்டர்ஸ்!

நாம் எல்லோருமே தினசரி செய்தே ஆக வேண்டிய பணிகள் எனும் சுழலில் சிக்கிக் கொண்டு மீள முடியாது தவிக்கின்றோம் அல்லவா? அன்றாட அக்கப்போரைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால் அதை மீறி எதிர்நீச்சல் போட்டுப் புதிய பாதையில் செல்வது எப்படி?

இதற்கு இந்த அண்ணன்கள் காட்டும் வழி யதார்த்தமானது.முதலில் பல பணிகளை ஒரே சமயத்தில் செய்யக்கூடாது என்கிறார்கள்! அதாவது அதிமுக்கியமான ஓரிரு பணிகளை அடையாளம் கண்டு, அவற்றில் மட்டுமே ஒருமித்த கவனம் செலுத்த வேண்டும்!

இரண்டாவது, முன்யோசனையைப் பற்றியது. நம்ம கார் வருடத்தில் எத்தனை தரம் மக்கர் பண்ணிச்சு என்று கணக்குப் பார்த்து கவலைப்படுவது பின்புத்தி.

அதில் திடீர் கோளாறுகள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக அடிக்கடி சர்வீஸுக்கு விடுவது என்பது முன்னேற்பாடு! பின்னதைச் சரியாகச் செய்து விட்டால், முன்னதைச் சமாளித்து விடலாமில்லையா? பணியிடத்திலும் அப்படித் தானே?

மூன்றாவது விதி, நடப்பது என்ன என்பதற்கான ஸ்கோர்போர்டு (Score board) வைத்துக் கொள்வது. யார் யார் என்ன செய்து முடித்தார்கள், சொதப்பியது யார் என்பதெல்லாம்...

உடனுக்குடன் டென்னிஸ், கிரிக்கெட் போட்டிகள் போல அனைவருக்கும் தெரியும்படியான முறை இருக்க வேண்டும்! அது இல்லாவிட்டால் விளையாட்டை யாருங்க ரசிப்பாங்க? இங்கேயும் போட்டி இருந்தா தானே சுவாரஸ்யம்!

நாலாவது விதி, ஒவ்வொரு பணியாளரையும் அந்தந்தப் பணிகளுக்கு பொறுப்பாளர் ஆக்குவது! நாம் அன்றாட வாழ்க்கையில் சிறப்பாகத் திட்டம் போடுபவர்களைப் பார்க்கிறோம். அதுவும் எக்ஸல் (excel sheet) உதவியுடன் பல்வேறு கற்பனைக் கோணங்களில் ரிப்போர்ட் தயார் செய்வார்கள். ஆனால் நடைமுறை என்பது வேறு.அங்கு அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைகளைச் சமாளிக்க வேண்டும். அதைச் செய்து காட்டுபவன்தானே பணிக்கு உகந்தவன்?

‘அடுத்த வாரம் அமல்படுத்துவதற்கான நல்ல திட்டத்தை விட இன்றே நடைமுறைப்படுத்தும் எந்தக் கடினமான செயலும் நன்று' என்பார் அமெரிக்க ஜெனரல் ஜார்ஜ் பாட்டன்!

நன்றாகத் திட்டமிட்டுச் சிந்தித்திருந்தாலும், செயலை முடிக்கும் திறமை இல்லாதவர்கள் அதை முடிக்காமலே விட்டு விடுவார்கள் என்கிறார் வள்ளுவர்.

தொடர்புக்கு: somaiah.veerappan@gmail.com

SCROLL FOR NEXT