வணிக வீதி

`ரீடெய்ல் மேக்கர்’ தமானி!

செய்திப்பிரிவு

கடந்த வாரம் பங்குச் சந்தை வட்டாரங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட பெயர் ராதாகிருஷ்ணன் தமானி. அதற்கு காரணம் இவர் உருவாக்கிய அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு கடந்த வாரம் செவ்வாய்கிழமை பட்டியலானது. பட்டியலிடுவதற்கு முதல் நாளில் அவரது சொத்து மதிப்பு 230 கோடி டாலர்கள் மட்டுமே. ஆனால் பட்டியலிட்ட பிறகு அவரின் சொத்துமதிப்பு 520 கோடி டாலருக்கு (சுமார் ரூ.35,000 கோடி) மேல் உயர்ந்தது. முதல் வர்த்தக நாளில் 114 சதவீதம் அளவுக்கு அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்கு உயர்ந்தது. இதன் காரணமாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 17-வது இடத்துக்கு உயர்ந்தார். குறிப்பாக அனில் அம்பானி, ராகுல் பஜாஜ், அஜய் பிரமல், ஆதி கோத்ரெஜ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இருக்கிறார் ஆர்.கே தமானி.

யார் இந்த தமானி?

வெளி உலகத்துக்கு இப்போது இந்த பெயர் பிரபலமாக இருந்தாலும் பங்குச்சந்தை வட்டாரங்களில் 1990களில் முக்கியமான நபராக இருந்தவர். அதிகம் பேசாத இயல்பு உடையவர். மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் படிப்பில் சேர்ந்தார். ஆனால் முதல் ஆண்டுக்கு பிறகு படிப்பைத் தொடரவில்லை. இவரது குடும்பம் பால்பேரிங் தொழிலில் ஈடுபட்டு வந்தது. அப்பாவின் மறைவுக்கு பிறகு அந்த தொழிலை மூடிவிட்டு பங்குச்சந்தையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தொடக்க காலத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இவர், ஒரு கட்டத்தில் நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு தரமான நிறுவனங்களில் அதிக தொகையை முதலீடு செய்ய தொடங்கினார். தற்போது 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார்.

விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் அதிகபட்சமாக 25 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார், மேலும் புளூடார்ட், ட்ரன்ட், சுந்தரம் பைனான்ஸ், யுனைடெட் பிரூவரிஸ், கிரைசில், ஹெச்டிஎப்சி வங்கி, ஜில்லெட் இந்தியா, டிவி 18 புராட்காஸ்ட், 3எம் இந்தியா உள்ளிட்ட சில நிறுவனங்களில் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார்.

2002-ல் முதல் டி-மார்ட்

2000களின் தொடக்கத்தில் ரீடெய்ல் துறை வளர தொடங்கியது. அந்த சமயத்தில் பங்குச்சந்தையில் இருந்து விலகி முதல் ரீடெய்ல் கடையை 2002-ம் ஆண்டு தொடங்கினார். மும்பை பவாய் பகுதியில் முதல் ரீடெய்ல் கடை தொடங்கப்படுகிறது. இதற்கிடையே 2000-ம் ஆண்டு தொடக்கத்தில் சில ரியல் எஸ்டேட் இடங்களில் முதலீடு செய்திருந்தார். இந்த இடங்கள் டி-மார்ட் கடைகளை விரிவுபடுத்தவும், அதற்கான செலவுகளைக் குறைக்கவும் தமானிக்கு உதவியாக இருந்தது. தற்போது 119 கடைகள் இந்த நிறுவனத்துக்கு உள்ளன.

ரீடெய்ல் துறையில் பிக்பஸார், ரிலையன்ஸ் ஃபிரெஷ், மோர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருந்தாலும், டிமார்ட் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருப்பதாகவே வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கடையில் இருந்து கிடைக்கும் வருமானம் ரூ.75 கோடியாக இருக்கிறது. ஆனால் போட்டி நிறுவனமான பியூச்சுர் குழுமத்தில் ஒரு கடையில் இருந்து கிடைக்கும் வருமானம் ரூ.16 கோடியாக இருக்கிறது. இதுபோல ஒவ்வொரு அளவீடுகளிலும் டி-மார்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் வால்மார்ட் என்றும் பல முதலீட்டாளர்கள் டி-மார்ட் நிறுவனத்தை அழைக்கின்றனர்.

சிஇஓ சொத்து மதிப்பு ரூ.900 கோடி

டி-மார்ட் ஐபிஓ, தமானியை மட்டும் பெரும் பணக்காரர் ஆக்கவில்லை. அவருடன் இருந்த பலரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளனர். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவில் நொரோன்ஹோ வசம் 1.37 கோடி பங்குகள் உள்ளன. இந்த பங்குகளின் மதிப்பு ரூ.900 கோடி ஆகும். ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தில் பணியாற்றிவந்த நொரோன்ஹாவிடம் உள்ள ஆர்வம் தமானிக்கு பிடித்த தனால் 2004-ம் ஆண்டு டி-மார்ட் நிறுவனத்தில் சேர்த்தார். இந்தியாவின் முன்னணி எம்எப்சிஜி நிறுவனங்களின் தலைவர்களான சஞ்ஜீவ் மேத்தா, ஒய்சி தேவேஷ்வர், விவேக் கம்பீர் ஆகியோர்களின் சொத்துமதிப்பை விட நொரோன்ஹோவின் சொத்து மதிப்பு அதிகமாகும்.

நொரோன்ஹோ மட்டுமல்லாமல் நிறுவனத்தின் 2,000 பணியாளர்கள் டிமார்ட் நிறுவனத்தின் 7 சதவீத பங்கு களை வைத்திருக்கின்றனர். இவர்களும் லட்சாதிபதி ஆகியுள்ளனர்.

ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட நிதியில் ரூ.1,080 கோடி கடனை திருப்பி செலுத்துவதற்கும் ரூ.366 கோடி விரிவாக்க பணிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்திருப்பதாக நிறு வனம் தெரிவித்திருக்கிறது. வெற்றிகர மான நிறுவனத்தை உருவாக்குவதற்கு தேவைப்படும் உழைப்பைவிட அதனை தக்கவைப்பதில் அதிக உழைப்பு தேவைப்படும்.

சரியான பங்குகளில் முதலீடு செய்வது என்பது வேறு, முதலீடு செய் வதற்கு ஏற்ற பங்குகளை உருவாக்குவது என்பது வேறு. ஆனால் இரண்டிலும் முத்திரை பதித்திருக்கிறார் தமானி.

SCROLL FOR NEXT