வணிக வீதி

டிரைவர் இல்லாத காரை பெங்களூரு சாலையில் சோதித்துப் பார்க்க டாடா எலக்ஸி திட்டம்

செய்திப்பிரிவு

ஆட்டோமொபைல் துறையில் டிரைவர் இல்லாத கார்தான் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அடையாளம். கூகுள் தொடங்கி வைத்த இந்த தொழில்நுட்ப புரட்சியை பல கார் தயாரிப்பு நிறுவனங்களும் சோதித்துப் பார்க்கத் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூரு சாலையில் டிரைவர் தேவைப்படாத காரை சோதித்துப் பார்க்கப் போவதாக டாடா எலக்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் இது தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்ட உடனேயே இந்நிறுவனத்தின் பங்கு விலைகள் மும்பை பங்குச் சந்தையில் 6.3% அளவுக்கு உயர்ந்தன. இந்த அள வுக்கு டிரைவர் தேவைப்படாத காருக் கான அவசியம் அதிகரித்துள்ளது என் பதையே பங்கு விலை உயர்வு உணர்த்து கிறது. டாடா குழும நிறுவனங்களுள் ஒன்றுதான் டாடா எலக்ஸி.

தொலைத் தொடர்பு, நுகர்வோர் பொருள், ராணுவத்துக்கான கருவிகள், மருத்துவ பொருள்கள், ஊடகம், பொழுதுபோக்கு, செமி கண்டக்டர், போக்குவரத்துத்துறை என பல்வேறு தொழிலில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் தற்போது போக்குவரத்து நெரிசலுக்கு பெயர்போன பெங்களூரு சாலைகளி லேயே டிரைவர் தேவைப்படாத காரை சோதித்துப் பார்க்கப் போவதாக அறிவித்துள்ளது.

தற்போது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான கூகுள், ஆப்பிள் நிறுவனங்களோடு உபெர் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் டிரைவர் இல் லாத கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இவை அனைத்தும் சோதித்துப் பார்க்கப் பட்டு வருகின்றன. ஆனால் இந்தியச் சாலையில் டிரைவர் தேவைப்படாத கார் சோதித்துப் பார்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது தொடர்பாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உதிரிபாக சப்ளையர்களுடன் எலக்ஸி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்டவற்றில் திறமை மிகுந்த இந்நிறுவனம் அதை தனது தயாரிப்பில் செயல்படுத்திப் பார்க்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே சோதனை அடிப்படையில் டிரைவர் தேவைப்படாத காரைத் தயாரித்து அதை பெங்களூருவின் புறநகர் பகுதியில் சோதித்துப் பார்த்து வருகிறது இந்நிறுவனம். டிரைவர் இல்லாத கார் எவ்விதம் இருக்கும் அது எப்படி செயல்படும் என்பதை தத்ரூபமாக உருவாக்கிப் பார்க்க சிமுலேட்டரை வடிவமைத்துள்ளது எலக்ஸி. இதுவும் தற்போது சோதித்துப் பார்க்கப்படுகிறது.

இரண்டு கார்களில் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒன்று டாடா மோட்டார்ஸின் செடான் காராகும். இதில் உணர் கருவிகளான லிடார், ரேடார், ஸ்டீரியோஸ்கோபிக் கேமிரா, அல்ட்ராசோனிக் சென்சார்ஸ் ஆகியன இணைக்கப்பட்டு இயக்கிப் பார்க்கப்படுகின்றன.

மேலும் இதில் உள்ள கம்ப்யூட்டரில் தேவையான மாற்றங்கள் செய்யப்படு கின்றன. காரின் ஆக்சிலரேட்டர் செயல்பாடு, பிரேக் உள்ளிட்டவற்றை இது தீர்மானிக்கும். இந்த காரை பெங்களூர் சாலையில் இயக்கிப் பார்க்க மாநில அரசிடம் இந்நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. எவ்வளவு நாளில் இந்த சோதனை நடத்தப்படும் என்ற விவரத்தை நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும் சர்வ தேச அளவில் இத்துறையில் நீண்டகால மாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் செய்து பார்க்காத முயற்சியை மிகக் குறுகிய காலத்தில் டாடா எலக்ஸி செய்து பார்க்க உள்ளது.

பெங்களூரு சாலைகளில் இந்த கார் வெற்றிகரமாக இயக்கப்பட்டால், உலகின் எந்தப் பகுதியிலும் இது செயல்படும் என்பதற்காக பெங்களூரை தேர்ந்தெடுத்துள்ளதா எலக்ஸி?

SCROLL FOR NEXT