ஆங்கிலத்தில் ‘ஓல்ட் ஈஸ் கோல்ட்’ என்பார்கள். அதைப் போல பழங்கால, புராதன படைப்புகளைப் பார்க்கும்போது ஏற்படும் பரவசம், அத்துறையில் ஈடுபாடு உடையவர்களுக்கு மட்டுமே உரித்தானது. ஆட்டோமொபைல் துறையில் பழைய வாகனங்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.
இன்றைக்கு நவீன தொழில்நுட்ப உலகில் டிரைவர் தேவைப்படாத வாகனங்கள் வந்தாலும் கூட, பழைய கால வாகனங்களைப் பார்த்து ரசிப்பதில் கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே கிடையாது. கடந்த வாரம் ஜோத்பூரில் நடைபெற்ற கண்காட்சியில் பழைய மாடல் கார்கள் அணி வகுத்து வந்தன. வின்டேஜ் கார் ராலி-யில் மொத்தம் 18 கார்கள் பங்கேற்றன. இவற்றில் 7 கார்கள் ஜோத்பூர் மகாராஜா இரண்டாவது கஜன் சிங்கினுடையது. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது 1906 ஆண்டு தயாரான கார்தான்.
மற்ற கார்களில் பெரும்பாலானவை ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்களுடையதாகும். வெகு சில மட்டுமே ஜோத்பூரில் உள்ள பணக்காரர்களினுடையதாகும். கார்களின் அணிவகுப்பு உமைத் அரண்மனையில் தொடங்கி போலோ மைதானத்தில் நிறைவடைந்தது. 1934-ம் ஆண்டு தயாரான பியூக் சூப்பர், மோரிஸ் மைனர் மற்றும் டெலாஹே கார்களும் 1933-ம் ஆண்டு தயாரான போன்டியாக் மற்றும் 1947-ம் ஆண்டில் தயாரான ஜீப்ஸ்டெர் மற்றும் டெஸோடோ கார்கள் இடம்பெற்றன.
பேரணியில் பங்கேற்ற கார்களில் 1935-ம் ஆண்டு தயாரான ரோல்ஸ் ராய்ஸ் காரின் பாந்தம் 2 மாடலும் ஒன்று. இந்தக் காரின் நம்பர் பிளேட் ஜோத்பூர் 1 என உள்ளது. இந்தக் காரில் கஜன் சிங் பவனி வந்தார். மீட்டெடுக்கப்பட்ட பழைய கார்களில் இந்த கார் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
கார்கள் மீது தங்கள் பரம்பரையினருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. பழைய கார்களைக் காட்சிப் படுத்துவதன் மூலம் ஆட்டோமொபைல் துறையைப் பற்றி இப்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும் என்று கஜன் சிங் குறிப்பிட்டார்.
இந்த கார் பேரணியைக் கண்டு களிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பல பயணிகள் வந்திருந்தனர்.இப்போது வெளிவரும் சொகுசுக் கார்களுக்கான முன்னோடி கார்களைப் பார்த்து ரசிப்பதே ஒரு சுவாரஸ்யம்தான்.