தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள் (குறள்: 509) |
ஏப்ரல் வந்தாச்சு! புதிய நிதியாண்டு தொடங்கி யாச்சு! இனி பணி உயர்வுக்கான போட்டிகள், நேர்முகத் தேர்வுகள் ஆரம்பித்து விடும்! ஆனால், பலகாலம் தங்கள் நிறுவனத்திலேயே பணிசெய்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று மேலதிகாரிகளுக்குத் தெரியாதா என்ன? பிறகு எதற்கு இந்த மாதிரி நேரில் கூப்பிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டும்' என்று சிலர் நினைப்பதுண்டு.
கொஞ்சம் யோசித்தால் இதன் காரணம் புரியும். பதவி உயர்வு என்பதும் அந்த உயர் பதவியைப் பொறுத்தவரை புதிதாய் ஆள் எடுப்பது போலத்தானே? என்ன, அந்த நிறுவனத்திற்குள்ளாகவே பொருத்தமானவரைத் தேடுவார்கள்!
ஒருவர் படித்தவரா, நம்பிக்கைக்குகந்தவரா, ஆரோக்கிய மானவரா என்பதையெல்லாம் பார்த்து நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வதா இல்லையாவென முடிவெடுக்கலாம்.
ஆனால், அவரை எந்தப் பணியிலமர்த்துவது என்பது அவர் என்ன படித்திருக்கிறார், அவரது முன் அனுபவம் என்ன, அவரது தனித்திறமை என்ன என்பனவற்றை வைத்துத்தானே முடிவெடுக்க முடியும்?அதனால் தானே ஆள் எடுக்கும் பொழுது இரண்டு மூன்று சுற்றுகள் வைத்து தகுதியற்றவர்களைப் படிப்படியாகக் கழற்றி விடுகிறார்கள்!
எனது நண்பர் ஒருவர் வங்கியில் 75 கிளைகள் உள்ள கோட்டத்தின் துணைப் பொது மேலாளர். மிக நன்றாய் வர்த்தகம் செய்து வருடாந்திர இலக்குகளை கடந்திருந்தார்.
எனவே பொதுமேலாளர் பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு வந்த பொழுது மிக உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் சென்றார். தான் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். ஆனால் அங்கோ கேள்விகள் வேறு விதமாக இருந்தன.
வங்கி எதிர்காலத்தில் எவ்வித போட்டிகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும், அவற்றை எப்படி சமாளிப்பது, வங்கிகளை இணைக்கும் பொழுது ஒரே பகுதியிலிருக்கும் வங்கிகளை இணைப்பது நன்மை பயக்குமா, வட்டி விகிதங்கள் எப்படி மாறலாம் என்கிற ரீதியில் பல கேள்விகள்.
அக்கேள்விகள் எல்லாம் கற்பனையானவை என்றும், இப்பொழுது தேவையற்றவை என்றும் பதில் கூறிவிட்டார் நண்பர். கொடுத்த வேலையை நான் ஒழுங்காய் செய்து முடித்துவிட்டேன், மேன்மேலும் கொடுத்துப் பாருங்கள் முடித்துக் காட்டுவேன், அவ்வளவுதான், இதைவிட வேறென்ன வேண்டும் என்று கிட்டத்தட்ட வாக்குவாதத்திலேயே இறங்கி விட்டார்!
வங்கிக்கு அப்பொழுது தேவைப்பட்டது எதிர்காலத்தை எதிர்கொள்ளக்கூடிய, சிந்திக்கக்கூடிய, வியூகங்களை வகுக்கக்கூடிய ஒரு பொதுமேலாளர். எனவே நமது நண்பரை விட்டுவிட்டு வேறு ஒருவருக்குத்தான் அப்பதவி உயர்வு கொடுக்கப்பட்டது.
பலரும் பதவி உயர்வை முன் செய்த நல்ல பணிக்குப் பரிசாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் உண்மை அதுவா? ஏற்கெனவே நல்ல பணியாற்றியவர் வருங்காலத்திலும் சிறப்பாகப் பணியாற்றுவார் என்று வேண்டுமானால் நம்பிக்கை கொண்டு முன்னுரிமை கொடுக்கலாம்.
ஆனால் அவரிடம் அடுத்த பதவிக்குத் தேவையான சிறப்புத் தகுதிகளும் இருக்கிறதா என்றும் பார்க்கத்தானே வேண்டும்? பதவி உயர்வை மேல்பதவியில் செயலாற்றி மிளிர்வதற்கான ஒரு வாய்ப்பாய்க் கருதினால் பிரச்சினை இருக்காது!
சரியாக ஆராயாமல் பணியமர்த்தாதீர்கள்; அத்துடன் பணியமர்த்தப் படுபவரின் திறன்களை ஆராய்ந்தே வேலை கொடுங்கள் என்கிறார் வள்ளுவர்.
- சோம.வீரப்பன்
somaiah.veerappan@gmail.com