இயற்கை வழி விவசாய விளை பொருட்களுக்கு சமீப காலத்தில் வரவேற்பு அதிகரித்து வந்தாலும், அதற்கான இடுபொருட்களை சொந்தமாக தயாரித்துக் கொள்வது எல்லோருக்கும் சாத்தியமில்லை. அதில் வெற்றி கண் டுள்ளார் திவ்யா. படித்தது பேஷன் டிசைனிங் சார்ந்த பட்டம், வேலைபார்த்தது அதைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள். ஆனால் எல்லாவற்றையும் துறந்து இயற்கை விவசாயிகளுக்கு உதவும் தொழில்முனைவோராக உருவாகி நிற்கிறார். அவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிகவீதி’யில்..
குடும்பம் மொத்தமும் விவசாயத்தில் தான் ஈடுபட்டுள்ளனர். அதிலிருந்து கிடைத்த வருமானத்தை வைத்துதான் என்னை படிக்க வைத்தனர். படிப்புக்கான கட்டணங்களை மொத்தமாக கட்ட வேண்டிய ஒவ்வொரு முறையும், இந்த பணம் எப்படி வந்தது என அப்பா விளக்குவார். எனக்கோ, வேலைக்கு சென்று சம்பாதித்து அப்பாவின் கஷ்டங்களைப் போக்க வேண்டும் என்கிற உந்துதல் வரும். விடுமுறை நாட்களில் நானும் விவசாய வேலைகளில் உதவி செய்வேன். இப்படித்தான் எனது விவசாய தொடர்புகள் இருந்தன.
படித்து முடித்ததும் சென்னை,பெங்களூரு நகரங்களில் வேலை பார்த்தேன். அதன் பிறகு விவசாயம் குறித்தெல்லாம் யோசனை யில்லை. ஆனால் எதிர்பாரத ஒரு சூழலில் விவசாயத்தை நோக்கி திரும்ப வேண்டி வந்தது. இயற்கை விவசாயம் குறித்த ஆர்வம், அதைச் சார்ந்த தொழிலில் இறங்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு தமிழ்நாடு முழுவதும் பல விவ சாயிகளைச் சந்தித்தேன். பல விவசாய கூட்டங்கள், பயிற்சி அரங்குகளில் கலந்து கொண்டேன். ஒவ்வொரு மண் வளத்தையும் தெரிந்து கொள்வது, மாதிரி சேகரிப்பது என இரண்டு ஆண்டுகள் இந்த வேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த காலகட்டத்திலேயே எனது ஆரம்ப ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருந்தது. எல்லா பரிசோதனைகளையும் எங்களது நிலத்திலேயே மேற்கொண்டோம். கூடவே இது தொடர்பான பட்டயங்களையும் வாங்கி னேன். அதன் பிறகுதான் இந்த தொழிலில் இறங்கினேன்.
நவீன விவசாயத்துக்கான இடுபொருட் கள் என்றால் மார்க்கெட்டிங் செய்வது மிக எளிதானது. ஆனால் இயற்கை வழி விவசாயத்துக்கான இடுபொருட்களை கொண்டு சேர்க்கும் வழி எளிதானதல்ல; இயற்கை வழி விவசாயத்தை மேற்கொள்பவர்கள் பலரும் கிட்டத்தட்ட ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு முயற்சித்து வருபவர்களாகத்தான் இருப்
பார்கள். குறிப்பாக அவர்களது நிலத்திலேயே பல இடுபொருட்களையும் பூச்சி விரட்டிகளையும் தயாரித்துக் கொள்வார்கள். அவர்களிடம் சென்று எங்களது தயாரிப்புகளை விளக்கிச் சொல்லி விற்பனை செய்வது சாதாரணமாக நடக்கவில்லை. அதேசமயத்தில் ரசாயன மருந்துகளை பயன்படுத்துபவர்களை மாற்றுவதும் எளிதானதல்ல.
விவசாயிகளுக்கு மட்டுமில்லாமல், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் வைத்துள்ளவர்களுக்கு எங்களது தயாரிப்புகள் பெருமளவு பயனுடைய தாக உள்ளது. இதனால் புதுமையான முறையில் மார்க்கெட்டிங் வேலைகளில் இறங்கினேன். குறிப்பாக ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் காட்சிக்கு வைத்தேன். இவற்றை பயன்படுத்தும் சில விவசாயி களிடம் பேசி, அவர்கள் உற்பத்தியையும் அந்த கடைகளில் விற்பனைக்கு வைத் தோம். விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களுக்கு போன் மூலமான ஆலோசனைகளையும் வழங்கினோம். அதற்காக ஒவ்வொரு விவசாயி, அவரது சாகுபடி, விளைச்சல் உள்ளிட்ட தகவல்ளை தொகுத்து டேட்டாபேஸ் உருவாக்கினேன்.
ஆரம்பத்தில் என் குடும்பத்தினர் உதவியோடு நான் மட்டுமே இறங்கினேன். அதன் பிறகு மெல்ல விவசாய துறை சார்ந்த 7 பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தேன். இப்போது 20 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளித்துள்ளேன்.
ஆரம்பத்தில் இவற்றை கொண்டு செல்லும்போது என் அப்பா, தாத்தா வயது கொண்ட அனுபவம் வாய்ந்த விவசாயிகள், ‘விவசாயத்த பத்தி உனக்கு என்னம்மா தெரியும்’ என்பதுபோல டீல் செய்வார்கள். 500 தென்னை மரம் கொண்ட விவசாயிடம் 50 மரத்தை நான் பராமரிக்கிறேன் என்று பேசி பேசித்தான் நம்பிக்கை பெற முடிந்தது. இப்போது பல விவசாயிகளும் எங்களது இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை நம்பி வாங்குகின்றனர்.
தமிழ்நாடு தவிர கேரளா சந்தையில் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களில் கற்றுக் கொண்ட அனுபவத்தை விவசாயத்தில் பயன்படுத்துகிறேன். இளம் தலைமுறை ஆர்வத்தோடு விவசாயத்தில் இறங்கினால் ஒவ்வொருவரும் தொழிமுனைவோர்தான் என்கிறார் இவர்.
தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in